news@ilakkiyainfo.com

பிரிவுகள்

துரைமுருகன் இல்லத் திருமணம் எழுப்பியிருக்கும் சர்ச்சைக்கு தி.மு.க தலைமை என்ன பதில் சொல்லப்போகிறது?

09 Nov, 2026
;மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் இல்லத் திருமண விழாவில் வைதிகச் சடங்குகள் பின்பற்றப்பட்டிருப்பதற்கு எதிராகக் கடும் விமர்சனங்கள் எழுந்திருக்கும் சூழலிலும், தி.மு.க தரப்பில் கனத்த அமைதி நிலவிவருகிறது!



சுயமரியாதை, பெண் விடுதலை, மூடநம்பிக்கைகளுக்கு எதிரான கொள்கை முழக்கங்கள் எனப் பகுத்தறிவு பேசி வளர்ந்த திராவிட முன்னேற்றக் கழகத்தில், தற்போது பொதுச்செயலாளர் பொறுப்பு வகித்துவருகிறார் 


அந்தக் கட்சியின் மிக மூத்த தலைவரான துரைமுருகன். இவருடைய மகனும், வேலூர் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினருமான கதிர் ஆனந்த்தின் மகளுக்கு அண்மையில் திருமணம் நடைபெற்றது. 


இந்தத் திருமணம் சம்ஸ்கிருத மந்திரங்கள் முழங்க, வேத முறைப்படியிலான சடங்கு, சம்பிரதாயங்களோடு நடைபெற்றிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.



பார்ப்பனரல்லாதோர் இயக்கத்தின் வழியே சமூகப் புரட்சிக்கு வித்திட்ட நீதிக்கட்சி வழி வந்த அரசியல் இயக்கம் தி.மு.க. அப்படிப்பட்ட ஓர் இயக்கத்தில் `பொதுச்செயலாளர்’ என்ற உச்சபட்ச பொறுப்பு வகிப்பவரின் இல்லத் திருமணத்திலேயே, வைதிகச் சடங்கு முறைகள் பின்பற்றப்பட்டிருப்பது, தி.மு.க மட்டுமல்லாமல் ஏனைய முற்போக்காளர்கள் மத்தியிலும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

.

‘திராவிடர் கழக’ தலைவரான ஆசிரியர் கி.வீரமணி, ‘தி.மு.க. தலைவர் தலைமையில் திருமணம் என்று அழைப்பிதழ் வைத்துவிட்டு, சம்ஸ்கிருத மந்திரங்களுடன் புரோகிதத் திருமணம் செய்திருப்பது தி.மு.க-வுக்கும், அதன் கொள்கைக்கும் இழுக்கு’ என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார். 


திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளரும், தி.மு.க ஆதரவாளருமான பேராசிரியர் சுப.வீரபாண்டியனும் தனது வருத்தத்தைத் தெரிவித்திருக்கிறார். 


இது தொடர்பாகப் பலரும் விசாரித்துவருகின்றனர்.


இந்த விவகாரம் குறித்து தி.மு.க மூத்த நிர்வாகிகளிடம் நாம் விளக்கம் கேட்க முயன்றபோது, நேரடியாக பதிலளிக்கத் தயங்கிய பலரும் தங்கள் உள்ளக் குமுறல்களை மட்டும் பகிர்ந்துகொண்டனர்.


“தி.மு.க முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், நெற்றியில் குங்குமம் வைத்திருந்ததையே ‘நெற்றியில் என்ன ரத்தம்?’ என நேரடியாகச் சுட்டிக்காட்டியவர் தலைவர் கலைஞர். அப்படிப்பட்ட தலைவரின் அடியொற்றி நடப்பவராகத் தன்னைக் காட்டிக் கொள்ளும் துரைமுருகன், இப்படியொரு நிகழ்வுக்கு எப்படி ஒப்புக்கொண்டார் எனத் தெரியவில்லை.

.

பொதுவாக கலகலப்பு சுபாவம் கொண்ட துரைமுருகனின் பேச்சை யாரும் சீரியஸாக எடுத்துக்கொள்வதில்லை. ஆனால், அதற்காகக் கட்சியின் அடிப்படைக் கொள்கையையே கேலிக்குள்ளாக்கும் வகையில் இந்தச் சம்பவம் நடந்திருப்பதை கட்சித் தலைமை அவ்வளவு எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. 


‘சனாதனத்தை ஒழிப்போம்’ என எங்கள் தலைவர்கள் பேசி, அதற்கான எதிர்வினையாக நீதிமன்ற வழக்குகளையும் சந்தித்து வருகிறார்கள். ஆனால், கட்சியின் முக்கியப் பொறுப்பிலுள்ள தலைவர் ஒருவரே இவ்வளவு வெளிப்படையாக சனாதனத்தை ஆதரித்தால், இனி எப்படி நாம் கொள்கை அரசியல் பேச முடியும்?


‘மக்களைக் காப்பதில் அக்கறை காட்டாமல், கடவுளர்களைக் காப்பாற்றுகிற அரசாக இருக்கிறது ஒன்றிய பா.ஜ.க அரசு. மாநில த.வெ.க அரசோ, ஜோதிட மூட நம்பிக்கைகளில் மூழ்கிக்கிடக்கிறது’ என்றெல்லாம் எங்கள் கட்சியினர் இதுவரை நேரடியாக விமர்சித்து வந்திருக்கிறார்கள். 


ஆனால், இந்த சம்பவத்துக்குப் பிறகு இப்படியொரு கேள்வியை நாங்கள் எப்படி எழுப்ப முடியும்... ‘மேடையில் மட்டும்தான் பகுத்தறிவு பேசுவீர்களா?’ என்று எதிர்த்து கேட்டுவிடுவார்கள்.


எனவே, இந்த விஷயத்தில் கட்சித் தலைமை துரைமுருகனிடம் விளக்கம் கேட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர் குமுறலாக.

.

இதற்கிடையே தி.மு.க முன்னாள் எம்.பி-யான மருத்துவர் செந்தில்குமார், இந்த விவகாரம் குறித்த தனது அதிருப்தியை இணையத்தில் வெளிப்படையாகப் பதிவிட்டிருக்கிறார். 


அவரைத் தொடர்புகொண்டு பேசியபோது, “திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை, சுயமரியாதைத் திருமணம் என்பது வெறும் திருமண முறை மட்டுமல்ல; அது பெரியாரின் கனவு. அண்ணா முதலமைச்சரானதும், இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், தமிழகத்தில் சுயமரியாதைத் திருமணத்துக்குச் சட்ட அங்கீகாரம் பெற்றுத் தந்தார். 


அதன் பிறகு கலைஞர், பேராசிரியர் அன்பழகன், நாஞ்சிலார் தொடங்கி இன்றைய தலைவர்கள் வரை, திருமண மேடைகள் தோறும் சுயமரியாதைத் திருமணத்தின் முக்கியத்துவத்தைத் தொடர்ந்து வலியுறுத்திவந்திருக்கின்றனர்.



துரைமுருகன் குடும்பத் திருமணத்தில் மணமகன் வீட்டாரின் விருப்பத்தின் அடிப்படையில் வைதிக முறை பின்பற்றப்பட்டிருக்கலாம் என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. 


தனிப்பட்ட நம்பிக்கைகளில் நாம் தலையிட முடியாது. ஆனால், துரைமுருகனும் அவரின் மகனும் கட்சியில் முக்கியப் பொறுப்புகளில் இருப்பவர்கள். எனவே, அவர்களது குடும்ப நிகழ்வுகளும் கட்சியின் கொள்கை சார்ந்த விமர்சனங்களுக்கு உள்ளாகும். 


இந்தத் திருமண முறையில் எனக்கு உடன்பாடு இல்லை. இனிமேல் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறக் கூடாது” என்றார் அழுத்தமாக.



கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!