news@ilakkiyainfo.com

பிரிவுகள்

தெலங்கானாவில் ஓடும் பேருந்தில் இருந்து தள்ளிவிடப்பட்ட பெண் நடத்துநர் பலி!

04 Nov, 2026
இந்தியாவில் தெலங்கான மாநிலத்தில் சில்லறைப் பிரச்சனை காரணமாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் பேருந்தில் இருந்து தள்ளிவிடப்பட்ட பெண் நடத்துநர் குண்ட்லா பிரவலிகா (24) சிகிச்சை பலனின்றி பத்து நாட்களுக்கு பின்னர் உயிரிழந்தார்.

மனுகூர் ஆர்டிசி டிப்போவில் பணிபுரிந்து வந்தவர் குண்ட்லா பிரவலிகா. இவர் மனுகூர் நகரில் உள்ள ஆதர்ஷ் நகரைச் சேர்ந்தவர்.

இவர் கடந்த அக்டோபர் 25ம் திகதி மனுகூரிலிருந்து பத்ராசலம் நோக்கிச் சென்ற பல்லே வெலுகு பேருந்தில் பணிபுரிந்துள்ளார்.

அப்போது இப்பேருந்தில் பனோத் மௌனிகா என்ற பெண் தனது மகனுடன் ஏறியுள்ளார். அப்போது தனது மகனுக்கு பயணச்சீட்டுப் பெற ரூ.100 மௌனிகா கொடுத்துள்ளார்.

இதில் ரூ.10 மட்டும் எடுத்துக்கொண்டு, பாக்கி ரூ.90-ஐ பிறகு தருவதாக பயணச்சீட்டின் பின்புறம் குறித்துக் கொடுத்துள்ளார் நடத்துநர் பிரவலிகா.

பேருந்து தனது நிறுத்தத்தை நெருங்கியவுடன் பாக்கியை கேட்டுள்ளார் மௌனிகா. இதில் நடத்துநருக்கும், இவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றியதால் ஓடிக்கொண்டிருந்த பேருந்தில் இருந்து நடத்துநர் பிரவலிகாவை, மௌனிகா எட்டி உதைத்து வெளியே தள்ளியதாக கூறப்படுகிறது.

இதில் பிரவலிகா கீழே விழுந்ததில், பேருந்தின் பின் சக்கரங்கள் அவரது கால்கள் மீது ஏறி, அவருக்குப் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து பேருந்தில் இருந்தவர்கள் இணைந்து அவரை அருகில் உள்ள வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

 பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

 எனினும் சுமார் 10 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டநிலையில், நேற்று (3) இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 இதனைத்தொடர்ந்து கொலை வழக்குப்பதிவு செய்து, இதற்கு காரணமான பயணி மௌனிகாவை அஸ்வபுரம் பொலிஸார் கைது செய்துள்ளனர்

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!