news@ilakkiyainfo.com

பிரிவுகள்

தெஹிவளையில் அதிகாலையில் கொடூரம்: வீட்டின் மீது கைக்குண்டு தாக்குதல்; 2 சிறுவர்கள் பலி!

11 Sep, 2026
தெஹிவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிறிசங்கபோ மாவத்தை பகுதியில் இன்று (11) அதிகாலை வேளையில் வீடொன்றின் மீது இனந்தெரியாத இருவர் நடத்திய கைக்குண்டுத் தாக்குதலில் இரு சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன், அவர்களது தந்தை படுகாயமடைந்துள்ளார்.

கைக்குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகிப் படுகாயமடைந்த தந்தை மற்றும் அவரது இரு பிள்ளைகளும் உடனடியாகக் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அங்கு சிகிச்சை பலனின்றி இரண்டு சிறுவர்களும் உயிரிழந்துள்ளதாகக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் தெஹிவளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் தெஹிவளை பகுதியைச் சேர்ந்த 11 மற்றும் 17 வயதுடைய இரண்டு சிறுவர்களே உயிரிழந்துள்ளனர். அத்துடன் தாக்குதலில் படுகாயமடைந்த 55 வயதுடைய நபரே உயிரிழந்த சிறுவர்களின் தந்தை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த சிறுவர்களின் சடலங்கள் களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இக்குற்றச் செயலுக்கான காரணம் அல்லது சந்தேகநபர்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.

சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காகத் தெஹிவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் மும்முரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!