தேனி சிறையிலிருந்து நேற்று இரவு தப்பிய 17 கைதிகளில், இதுவரை 13 பேர் பிடிக்கப்பட்டுள்ளனர். வனப்பகுதியில் பதுங்கியிருந்த 8 பேரை டிரோன் கண்காணிப்பு உதவியுடன் காவல்துறையினர் கண்டறிந்து கைது செய்தனர். இன்னும் பிடிபடாத 4 கைதிகளை தேடிப் பிடிக்கும் முயற்சியில் தனிப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
பணியில் கவனக்குறைவாக இருந்ததாகக் கூறி, தேனி மாவட்டச் சிறையைச் சேர்ந்த 9 சிறைப் பணியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேனி சிறையில் நேற்றிரவு என்ன நடந்தது? 17 கைதிகள் ஒரே இரவில் தப்பியது எப்படி? இதுதொடர்பாக தமிழக சிறைத்துறை என்ன சொல்கிறது?
17 கைதிகள் தப்பியது எப்படி? சிறைத்துறை விளக்கம்
இதுதொடர்பாக சிறைத்துறை சார்பில் செய்திக்குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி,"கடந்த 2019-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தேனி மாவட்டச் சிறையில், 200 கைதிகளை அடைக்கும் வசதி உள்ளது. கடந்த 26-ஆம் தேதி சிறையில் மொத்தம் 334 கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர். நேற்று இரவு சுமார் 10 மணியளவில், மூன்றாவது பிளாக்கில் இருந்த கைதி ஒருவருக்கு வலிப்பு ஏற்பட்டதாகக் கூறி மற்ற கைதிகள் கூச்சலிட்டனர்.
இதையடுத்து, அங்கு சென்ற இரண்டாம் நிலைக் காவலர் ஸ்டாலின் பிரபுவை கைதிகள் தாக்கி நிலைகுலையச் செய்து சிறையில் இருந்து தப்பிச் செல்ல முயன்றனர். அவர்களின் முயற்சியை பிரதான நுழைவாயிலில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் தடுத்து நிறுத்தினர். இருப்பினும் கைதிகள் காவலர்களை தாக்கி சாவிகளைப் பறித்து பிரதான நழைவாயிலைத் திறந்து கொண்டு தப்பிச் சென்றனர்."
இந்நிகழ்வில் 17 கைதிகள் தப்பிச் சென்றதாகவும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருவதாகவும் அந்த செய்திக்குறிப்பு கூறுகிறது. பணியில் கவனக்குறைவாக இருந்ததாகக் கூறி, தேனி மாவட்டச் சிறையைச் சேர்ந்த 9 சிறைப் பணியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தப்பிய கைதிகள் யார்?
-கருப்பசாமி (எ) மதன் (மதுரை மாவட்டம்)
-ராஜ்குமார் (மதுரை மாவட்டம்)
-திருப்பதி (மதுரை மாவட்டம்)
-பொன்முத்துச்செல்வம் (மதுரை மாவட்டம்)
-மீனாட்சிசுந்தரம் (மதுரை மாவட்டம்)
--நிசாந்த் (மதுரை மாவட்டம்)
-முத்து இளங்கோவன் (மதுரை மாவட்டம்)
-கார்த்திக்ராஜா (மதுரை மாவட்டம்)
-பிரசாந்த் (எ) லிங்க பிரசாத் (மதுரை மாவட்டம்)
-ராஜா சிக்கந்தர் (மதுரை மாவட்டம்)
- சோலைமுகிலீஸ்வரன் (மதுரை மாவட்டம்)
-தருண்குமார் (சிவகங்கை மாவட்டம்)
-பாண்டி செல்வம் (ராமநாதபுரம் மாவட்டம்)
-சபரிநாதன் (சேலம் மாவட்டம்)
-ரெஜின் (கன்னியாகுமரி மாவட்டம்)
-சிலம்பரசன் (தேனி மாவட்டம்)

தமிழ்நாடு சிறைத்துறை டிஜிபி நேரில் ஆய்வு
தமிழ்நாடு சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர், தேக்கம்பட்டியில் உள்ள மாவட்டச் சிறைச்சாலையில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். கைதிகள் தப்பிச் சென்றதற்கு 'மனிதத் தவறே' காரணம் என்று சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதலில் தலையில் பலத்த காயமடைந்த இரண்டாம் நிலை சிறைக் காவலர் தங்கபாண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், மேலும் சில காவலர்களுக்கும் காயமடைந்துள்ளனர்.
'17 தனிப்படைகள் அமைப்பு'

''தப்பியோடிய கைதிகளைப் பிடிக்கத் தமிழ்நாடு காவல்துறையின் 17 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு – கேரள எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரளக் காவல்துறையின் மூத்த அதிகாரிகளுடன் நெருங்கிய ஒருங்கிணைப்பில் செயல்பட்டு வருகிறோம். கேரளக் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களும் தேடுதல் மற்றும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுகின்றனர்'' என தென் மண்டல காவல்துறை ஐஜி விஜயேந்திர பிடாரி கூறினார்.
சிறை வளாகம் சுற்றியுள்ள கிராமங்களில் டிரோன் மூலம் பறக்கவிட்டு தப்பி ஓடிய கைதிகளை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர்.
தப்பியோடிய கைதிகளில் நால்வர் தேடுதல் நடவடிக்கையின்போது காவல்துறையினரால் பிடிக்கப்பட்டுள்ளதாக விஜயேந்திர பிடாரி தெரிவித்தார். பிற்பகலில் மேலும் ஒரு கைதி பிடிபட்டார்.
தப்பிய கைதி ஆட்டோவில் மீண்டும் சிறைக்கு வந்தது எப்படி?
தேனி மாவட்ட சிறையில் இருந்து தப்பியோடிய கைதிகளில் ஐந்தாவது நபரான லிங்க பிரசாத் என்பவர் இன்று பிற்பகல் பிடிபட்டுள்ளார்.
சிறையில் இருந்து நேற்று இரவு தப்பிய லிங்கபிரசாத், கண்டமனூர் செல்லும் சாலையில் தனது ஆட்டோவில் ஏறியதாக சின்னக்காளை என்பவர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
தேனி சிறையில் தப்பிய 17 கைதிகளில் 13 பேர் மீண்டும் பிடிபட்டனர் - இதுவரை நடந்தது என்ன?
அவர் அளித்துள்ள பேட்டியில், "ஆட்டோவில் ஒரு வயதான பெண்மணி அமர்ந்திருந்தார். கண்டமனூர் சாலை வழியாக சென்றபோது ஒருவர் கை காட்டி ஆட்டோவில் ஏறினார். கானாவிலக்கு அரசு ஆஸ்பத்திரி முன்பாக இறக்கிவிடுமாறு கூறினார்" எனத் தெரிவித்துள்ளார்.
அப்போது தன்னிடம், '300 ரூபாய் பணம் இருந்தால் கொடுங்கள். செல்போனில் போட்டுவிடுகிறேன்' என அந்த நபர் கூறியதாகக் குறிப்பிட்ட சின்னக்காளை, ஆட்டோவுக்கு எரிபொருள் நிரப்பிவிட்டதால் பணம் இல்லை எனக் கூறிவிட்டேன்" என்கிறார்.
அப்போது, ஆட்டோவைச் சோதனை செய்வதற்காகக் காவலர் ஒருவர் வழிமறித்துள்ளார். ஆட்டோவில் இருந்தவர் தப்பியோடிய கைதி என்பது தெரியவந்ததும், அதே ஆட்டோவில் அவரைச் சிறைக்குக் காவலர் அழைத்துச் சென்றார். பின்னர், அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
விசாரணைக் கைதியான லிங்க பிரசாத் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், அவர் மாற்றுத்திறனாளி என்றும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
டிரோன் உதவியுடன் மேலும் 8 பேர் கைது

தேனி சிறையில் இருந்து தப்பிய 17 கைதிகளில் மேலும் 8 பேர் பிடிபட்டதாக காவல்துறை சார்பில் மாலையில் தெரிவிக்கப்பட்டது.
சிறையில் இருந்து தப்பிச் சென்ற கைதிகளை, டிரோன் கண்காணிப்பை பயன்படுத்தி விரைவாக கண்டறிந்து காவல்துறையினர் பிடித்ததாக தெற்கு மண்டல ஐஜி விஜயேந்திர பிடாரி தெரிவித்தார்.
இவர்களையும் சேர்த்து, தேனி சிறையிலிருந்து நேற்று இரவு தப்பிய 17 கைதிகளில், இதுவரை 13 பேர் பிடிக்கப்பட்டுள்ளனர். இன்னும் 4 பேரை பிடிக்கும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
-
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!