news@ilakkiyainfo.com

பிரிவுகள்

தோல்வியடைந்த தண்டனை - சுயநினைவின்றி சுவாசக் கருவியில் கிரிஸ்டா பைக்!

03 Oct, 2026
அமெரிக்காவின் டென்னசி மாநிலத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கிரிஸ்டா பைக், மரண தண்டனையை நிறைவேற்ற மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது சுயநினைவின்றி சுவாசக் கருவியின் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாக அவரது சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

50 வயதான கிரிஸ்டா பைக்கின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவர் நாஷ்வில் பகுதியில் உள்ள மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்று வருவதாகவும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, அவருக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்காக இரண்டு முறை உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய மருந்துகள் வழங்கப்பட்ட போதிலும், தண்டனையை முழுமையாக நிறைவேற்ற முடியாமல் போனதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நீதிமன்ற ஆவணங்களின்படி, வழங்கப்பட்ட மருந்துகளின் தாக்கத்தைக் குறைப்பதற்கும் அவரது உயிரைக் காப்பாற்றுவதற்கும் மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சையளித்து வருவதாக அவரது சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் டென்னசி மாநில ஆளுநர் சுயாதீன விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், இந்த ஆண்டின் எஞ்சிய மரண தண்டனை நிறைவேற்றங்களும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

1995ஆம் ஆண்டு உயிரிழந்த 19 வயதான கொலீன் ஸ்லேமர் என்பவரின் கொலைக்கான பிரதான குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட கிரிஸ்டா பைக்குக்கு, 1996ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!