நகை அடகு வைக்கும் மக்களுக்கு மத்திய வங்கியின் புதிய கட்டுப்பாடு
நிதித்துறையின் ஸ்திரத்தன்மையை பாதுகாக்கவும், அதிகப்படியான கடன் வழங்கலால் ஏற்படக்கூடிய அபாயங்களை குறைக்கவும் இலங்கை மத்திய வங்கி புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
இதன்படி, தங்க நகைகளை அடகு வைத்து பெறப்படும் கடன்களுக்கான அதிகபட்ச கடன் மற்றும் மதிப்பு விகிதம் (Loan to Value Ratio) 70 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கியின் ஆளுநர்கள் சபை எடுத்த இந்த தீர்மானம் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள், விசேட வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் இந்த புதிய விதிமுறையை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், தங்கத்தின் தற்போதைய சந்தை மதிப்பை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே கடன் தொகை கணக்கிடப்பட வேண்டும் எனவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இன்று முதல் புதிதாக வழங்கப்படும் தங்கக் கடன்கள் மற்றும் புதுப்பிக்கப்படும் அனைத்து தங்கக் கடன்களுக்கும் இந்த 70 சதவீத அதிகபட்ச வரம்பு பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கடன் வழங்கப்படும் நேரத்தில் பிணையாக வைக்கப்படும் தங்கத்தின் துல்லியமான மற்றும் நியாயமான மதிப்பீட்டை வங்கிகளும் நிதி நிறுவனங்களும் உறுதி செய்ய வேண்டும் என்றும் மத்திய வங்கி வலியுறுத்தியுள்ளது.
இந்த புதிய தீர்மானம் நகை அடகு வைத்து கடன் பெற திட்டமிட்டுள்ள மக்களிடம் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.

கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!