news@ilakkiyainfo.com

பிரிவுகள்

`நடுமண்டையில ஓங்கி வெட்டுனாங்க... எங்க அப்பா கொலைக்கு போலீஸும் ஒரு காரணம்!’

19 Oct, 2026
ரடிகளின் அட்டகாசத்துக்கு ஒரு குடும்பமே சிதறியிருக்கிறது... மகளிடம் அத்துமீறியவர்களைத் தட்டிக்கேட்ட தந்தை, மனைவி - மகள் கண்முன்னாலேயே வீட்டு வாசலில் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்டிருக்கிறார். ``

போலீஸ் அப்போதே நடவடிக்கை எடுத்திருந்தால், எங்க அப்பா இன்னைக்கு உயிரோடு இருந்திருப்பாரே...’’ என்ற மகளின் கதறல், திருத்தணியை உலுக்கியிருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி பெரியார் நகரைச் சேர்ந்த 46 வயதான `வெட்டு’ ராஜா என்கிற யுவராஜ், முருகன் கோயில் மலையடிவாரத்தில் கூல்டிரிங்ஸ் கடை நடத்தி வந்தார். 

மனைவி துர்கா, இரண்டு மகள்களுடன் வசித்துவந்த இவர், கடந்த 4-ம் தேதி மாலை மனைவி, மூத்த மகள் கண்முன்னாலேயே வீட்டு வாசலில் ஒரு கும்பலால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார்.

இது தொடர்பாக ரௌடி சுஷில், புவனேஷ், ஹரீஷ், ஹேம்நாத் ஆகியோரை இரண்டு நாள் தேடுதல் வேட்டைக்குப் பிறகு திருத்தணி போலீஸார் கைதுசெய்தனர். 

தப்பியோட முயன்ற சுஷிலுக்கு கால் முறிவு ஏற்பட்டதால் மாவுக்கட்டு போடப்பட்டிருக்கிறது. விசாரணையில், `வெட்டு’ ராஜாவின் இளைய மகளிடம் வம்பிழுத்து, அவரைத் தற்கொலை முடிவுக்குத் தள்ளிய சுஷிலை, தட்டிக்கேட்டதால் ஆத்திரமடைந்து கொலைசெய்தது தெரியவந்திருக்கிறது.

நடந்த கொடூரத்தை நடுக்கத்துடன் விவரித்தார் `வெட்டு’ ராஜாவின் மூத்த மகள். “எங்க அப்பாவுக்கு முகத்துல வெட்டுக்காயம் இருந்ததால ‘வெட்டு’ ராஜான்னு கூப்பிடுவாங்க. ஆனா, அவரு யார்கிட்டயும் வம்பு தும்புக்குப் போக மாட்டாரு. 

ரௌடிக் கும்பலைச் சேர்ந்த லாரன்ஸ், என் தங்கச்சியை ‘லவ் பண்றேன்’னு சொல்லி தொந்தரவு பண்ணிக்கிட்டிருந்தான். அவ கண்டுக்காம ஸ்கூல், டியூஷன்னு போய்க்கிட்டு இருந்தா.

அவ தாழவேடைச் சேர்ந்த ஒரு பையனோட ஃபிரெண்டா பழகுனது அந்த ரௌடிக்குப் பிடிக்கலை. அதனால லாரன்ஸும், அவன் தம்பி சுஷிலும் அந்தப் பையனைக் கூட்டிக்கிட்டுப் போய் அடிச்சிருக்காங்க.

 செப்டம்பர் 4-ம் தேதி டியூஷன் சென்டருக்கே போய், ‘இனிமே அவன்கூடப் பேசுனா கழுத்தறுத்துருவோம்’னு மிரட்டியிருக்காங்க.

இதெல்லாம் எங்களுக்குத் தெரியாது. செப்டம்பர் 22-ம் தேதி டியூஷன் மாஸ்டர் போன் பண்ணிச் சொன்ன பிறகுதான் விஷயம் தெரிஞ்சுது. அன்னைக்கே போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளெயின்ட் குடுத்தோம். 

ஆனா, போலீஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கலை.. அப்பா ரௌடிங்க வீட்டுக்குப் போய் சத்தம் போட்டுட்டு வந்தாரு. போலீஸ் கண்டுக்காததால அவங்க எங்களை மிரட்ட ஆரம்பிச்சாங்க.

 ‘உன்னாலதான் பிரச்னை’ன்னு தங்கச்சியை வீட்டுல திட்டினதால, 26-ம் தேதி அம்மாவோட மாத்திரையையும், எறும்பு மருந்தையும் குடிச்சு தற்கொலைக்கு முயற்சி பண்ணிட்டா. 

ஆஸ்பத்திரியில சேர்த்து காப்பாத்தி, டிஸ்சார்ஜ் ஆனதும் பெரியம்மா வீட்டுல கொண்டுபோய் தங்கச்சியை விட்டுட்டு வந்தாரு அப்பா.<

இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, 4-ம் தேதி ரௌடி லாரன்ஸை போலீஸ் கைது பண்ணினாங்க. அன்னைக்கு அப்பா கடைக்குப் போயிருந்த நேரத்துல, நானும் அம்மாவும் மட்டும் வீட்டுல இருந்தோம். 

அப்போ மாஸ்க் போட்ட ஹைட்டான ஒருத்தனும், குள்ளமான ஒருத்தனும் வீட்டுக்குள்ள வந்து, ‘வெட்டு ராஜா எங்கடி... வரச் சொல்லுடி’ன்னு மிரட்டினாங்க.<

பயந்துபோய் அப்பாவுக்கு போன் பண்ணி, ‘யாரோ ரெண்டு பேர் வந்து மிரட்டுறாங்க. சீக்கிரம் வாங்க’ன்னு அம்மா சொன்னாங்க. அவரும் டூ வீலர்ல வந்து வாசல்ல நின்னாரு. அப்போ பேக்ல இருந்த பட்டாக்கத்தியை எடுத்து அப்பாவோட நடுமண்டையில ஓங்கி வெட்டுனாங்க. 

நானும் அம்மாவும் தடுக்கப் போனப்போ எங்களையும் வெட்ட வந்தானுங்க. அப்பாவைச் சரமாரியா வெட்டிட்டு ஓடிட்டானுங்க. வாசல் முழுக்க ரத்தமா கிடந்துச்சு.

லாரன்ஸை போலீஸ் கைது பண்ணின ஆத்திரத்துல, அவன் தம்பி சுஷில்தான் ஆள் அனுப்பி அப்பாவைக் கொன்னுட்டான்னு அப்புறம்தான் தெரிஞ்சுது. 

எங்க அப்பா சாவுக்கு நீதி வேணும். ஆரம்பத்துலயே போலீஸ் நடவடிக்கை எடுத்திருந்தா, இன்னைக்கு எங்க அப்பா எங்களோட இருந்திருப்பாரு. கொலகாரனுங்க மேலயும், அலட்சியமா இருந்த போலீஸ் மேலயும் கடுமையான நடவடிக்கை எடுக்கணும்’’ என்றார் கோபமும் கண்ணீருமாக.

கைதுசெய்யப்பட்டிருக்கும் கும்பல் திருத்தணி மட்டுமல்லாமல், அரக்கோணம் போன்ற பல்வேறு பகுதிகளில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டுவந்திருப்பதும் தெரியவந்திருக்கிறது. 

கஞ்சா போதையில் பொதுமக்களைத் தொந்தரவு செய்வதும், பெண்கள், பள்ளி - கல்லூரிக்குச் செல்லும் மாணவிகளிடம் அத்துமீறி வம்பிழுப்பதுமாக இருந்திருக்கின்றனர்.

`ஏன் இந்த அலட்சியம்?’ என்ற கேள்வியுடன் திருத்தணி இன்ஸ்பெக்டர் சிவகுமாரிடம் கேட்டபோது, ``போலீஸ் அலட்சியமாகச் செயல்படவில்லை. 

அது தவறான குற்றச்சாட்டு. முதலில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் குற்றவாளியைக் கைதுசெய்துவிட்டோம். அதன் தொடர்ச்சியாக, இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது. 

இதிலும் அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்துவிட்டோம்’’ என்றார் சுருக்கமாக.

த.வெ.க அரசு சட்டம்-ஒழுங்கைக் காக்கும் அழகுக்கு, இந்த நிகழ்வும் ஒரு சாட்சிதான்!

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!