news@ilakkiyainfo.com

பிரிவுகள்

நடுவானில் பயங்கரம் : 'பிளைடுபாய்' மர்மமும் விசாரணையின் அரசியலும்

04 Oct, 2026
உயரப் பறக்கும் விமா­னத்தில் அமர்ந்­தி­ருக்­கி­றீர்கள். ஜன்­னலின் வழியே வெளியே எட்டிப் பார்க்­கி­றீர்கள்.

விமானம் சடு­தி­யாக கீழே இறங்­கு­கி­றது. இரண்டு நிமி­டங்­க­ளுக்குள் 17,000 அடிகள் வரை தாழ்­கி­றது.  

தண்ணீர் போத்­தல்கள் கீழே விழு­கின்­றன. பய­ணிகள் பயத்தில் கத்­து­கி­றார்கள். பிரார்த்­தனை செய்­கி­றார்கள். இது வாழ்க்­கையின் இறு­திக்­கட்­டமோ என்ற அச்சம் ஏற்­ப­டு­கி­றது.

விமா­னி­களின் அறையில் கூக்­குரல். இறுக்­க­மான கதவைத் திறந்து கொண்டு பய­ணி­கள் உள்ளே நுழை­கி­றார்கள். ஒரு விமானி தரையில் விழுந்து கிடக்­கிறார். அங்கு இரத்த வெள்ளம்.

மற்­றைய விமானி கத்­தியை கையில் வைத்துக் கொண்டு நிற்­கிறார். அவ­ரது தோற்­றத்­திலும் செயல்­க­ளிலும் சொல்­லொணா பதற்றம்.  

அறைக்குள் நுழைந்த பய­ணிகள் கத்­தி­யுடன் நிற்­ப­வரை மடக்கிப் பிடிக்­கி­றார்கள். கட்டி வைக்­கி­றார்கள். கடமை நிமித்­த­மாக அன்றி, விமா­னத்தில் பய­ணித்த வேறு இரண்டு விமா­னிகள் அழைக்­கப்­ப­டு­கி­றார்கள். விமா­னி­களின் அறை கட்­டுப்­பாட்­டுக்­குள் கொண்டு வரப்­ப­டு­கி­றது. விமானம் மீண்­ டும் மேலெ­ழு­கி­றது. 174 உயிர்கள் காப்­பாற்­றப்­­ப­டு­கின்­றன.

 இது ஹொலிவூட் திரைப்­ப­ட­மொன்றில் வரும் காட்­சி­களைப் போன்று இருக்­கி­றதா? அல்­லது 2001ஆம் ஆண்டு செப்­டெம்பர் 11ஆம் திகதி அமெ­ரிக்க விமா­னங்­களில் நிகழ்ந்த சம்­ப­வங்கள் ஞாப­கத்­திற்கு வரு­கி­றதா?

 'பிளை-­டுபாய்' விமா­னத்தின் விமா­ன­மோட்­டி­க­ளது அறையில் என்ன நடந்­தது என பய­ணிகள் விப­ரித்­தா­யிற்று. அவர்­களின் பார்வைக் கோணத்தில் ஊட­கங்­களும் சம்­ப­வத்தை விளக்­கி­யா­யிற்று.

 உண்­மை­யாக நடந்­தது என்­ன­வென அறிய ஒவ்­வொ­ருக்கும் ஆவல். உண்மை தெரிய வருமா?

 நடு­வானில் குற்றச் செயல் நிகழும் பட்­சத்தில், என்ன நடந்­தது என்­பதை இல­கு­வாக கண்­ட­றி­யலாம். ஆனால், சம்­ப­வத்தில் சம்­பந்­தப்­பட்­டவை மத்­திய கிழக்கு நாடுகள் என்றால், அங்கு தான் சிக்கல் தொடங்­கு­கி­றது.

 எது உண்மை என்­பதை அறியும் முயற்­சிகள் மீது மூன்று விட­யங்கள் தாக்கம் செலுத்­து­கின்­றன.

 ஓர் அசம்­பா­வி­தத்தை அர­சியல் இலா­பத்­திற்­காக பயன்­ப­டுத்தல் என்­பது முதல் விடயம்.

இஸ்­ரேலில் இம்­மாதம் பொதுத் தேர்தல் நடை­பெ­ற­வுள்­ளது. தமது போர்­வெறி ஏற்­ப­டுத்­திய விளை­வு­களால் மக்­களின் எதிர்ப்பை சம்­பா­தித்­துள்ள பெஞ்­சமின் நெத்­தன்­யா­ஹு­விற்கு பலப்­ப­ரீட்சைக் களம். எதை­யா­வது செய்து தமது இருப்பைத் தக்க வைத்துக் கொள்ள வேண்­டிய தேவை நெத்­தன்­யா­ஹு­­வுக்கு உண்டு.

ப்ளை-டுபாய் அசம்­பா­விதம் அவ­ருக்கு கிடைத்த அதிர்ஷ்ட இலாபச் சீட்டு. இன­வா­தத்தைத் தூண்டி வாக்­கு­களைத் தேடக் கிடைத்த அபூர்­வ­மான வாய்ப்பு.

 நடு­வானில் என்ன நடந்­தி­ருக்­கலாம் என்­பதை சுதா­ரித்து அறி­வ­தற்கு முன்­ன­தாக நெத்­தன்­யாஹு ஊடக ஒலி­வாங்­கி­களின் முன்­னால் நின்றார். விமா­னத்தில் கப்­டனை கத்­தியால் குத்­திய ஓமா­னிய பிரஜை கடும்­போக்கு இஸ்­லா­மிய கோட்­பா­டு­களால் உந்­தப்­பட்­டவர் என்று குற்றம் சுமத்­தினார்.

ஏனிந்த அவ­சரம்? இஸ்­ரேலின் அர­சி­யலை ஆராய்ந்தால், தேசிய பாது­காப்பு உணர்­வு­பூர்­வ­மா­ன­தொரு விடயம். தேர்தல் காலத்தில் பாது­காப்பு பற்­றிய அச்ச உணர்வை விதைத் தால் வாக்­கு­களை இல­கு­வாக அறு­வடை செய்­யலாம்.

 நடு­வானில் நிகழ்ந்த தாக்­கு­த­லுக்கு இஸ்­லா­மிய பயங்­க­ர­வா­தமே காரணம் என்ற விம்­பத்தை உரு­வாக்கி, தம்மை தேசத்தின் பாது­கா­வ­லர்­க­ளாக சித்­த­ரித்து விட்டால், வாக்­கா­ளர்கள் தமது பின்னால் அணி திரள்­வார்­க­ளென நெத்­தன்­யாஹு நம்­பு­கிறார்.

ஒரு தேர்­த­லுக்கு முன்­ன­தாக இன­வா­தத்­தையோ, மத­வா­தத்­தையோ தூண்­டி­விட ஏதேனும் சம்­பவம் பயன்­ப­டுத்­தப்­ப­டு­மாயின், அந்த சம்­ப­வம் பற்றி விசா­ர­ணை­கள் நேர்­மை­யாக இருக்­கும் என எவ்­வாறு எதிர்ப்­பார்க்க முடியும்?

 அர­சியல் பரப்­பு­ரை­க­ளுக்கு உண்­மைகள் அன்றி இல­கு­வாக விரல் நீட்­டக்­கூ­டிய வில்­லன்­களே அவ­சியம். நெத்­தன்­யா­ஹுவைப் பொறுத்­த­வ­ரையில் ஈரானும் வில்லன் தான். 'இஸ்­லா­மிய பயங்­க­ர­வா­தமும்' வில்லன் தான். ஈரான் விட­யத்தில் தோற்றுவிட்ட பிறகு அடுத்­த­தென்ன, இஸ்­லா­மிய பயங்­க­ர­வாதம் தானே?

அடுத்து, இரண்­டா­வது விட­யத்­திற்கு வரு­வோம்.

 நடு­வானில் நிகழ்ந்த கத்­திக்­குத்து சம்­பவம் பற்­றிய விசா­ர­ணை­களை, பாகங்­களை ஒட்டச் செய்து முழு உரு­வத்தைக் கொண்டு வரும் விளை­யாட்டுப் பொருள் போன்ற புதி­ருடன் ஒப்­பி­டலாம்.

ஒவ்­வொரு பாகங்­களும் ஒவ்­வொ­ரு­வ­ரி­டம் இருக்­கின்­றன. விமான நிறு­வனம் ஐக்­கிய அரபு இராச்­சி­யத்­துக்கு சொந்­த­மா­னது. விமானம் சவூதி அரே­பி­யாவில் தரை இறக்­கப்­பட்­டது. விமானப் பய­ணி­களில் ஏறத்­தாழ சக­லரும் இஸ்­ரே­லி­யர்கள். கத்திக் குத்­துக்கு இலக்­கான பின்­னரும் நிலை­மையை சமா­ளிக்க உத­விய தலைமை விமானி இந்­திய நாட்­டவர். கத்­தியால் குத்­தி­யவர் ஓமான் பிரஜை.

விசா­ரணை வெற்­றி­ய­ளிக்க வேண்­டு­மெனில் இந்­நா­டுகள் மத்­தியில் வலு­வான ஒருங்­கி­ணைப்பு இருக்க வேண்டும். தக­வல்­களை பரி­மாற வேண்டும்.

ஆனால், சவூ­திக்கும் இஸ்­ரே­லுக்கும் இடை­யில் இரா­ஜ­தந்­திர தொடர்­புகள் இல்லை. சவூ­தியும், ஐக்­கிய அரபு இராச்­சி­யமும் மத்­திய கிழக்குப் பிராந்­திய அதி­காரப் போட்­டிக்குள் சண்டை பிடிக்கும் நாடுகள். இந்­தி­யா­விற்கு வளை­குடா நாடு­க­ளுடன் நல்­லு­றவைப் பேண வேண்­டிய தேவை உள்­ளது. ஏனெனில் இந்­நா­டு­களில் ஏரா­ள­மான இந்­தி­யர்கள் வேலை செய்­கி­றார்கள்.

தாக்­குதல் சம்­ப­வத்தைப் பொறுத்­த­வ­ரை­யில், ஆதா­ரங்கள் எந்த நாட்­டிடம் இருக்­கின்­றன. யாரை யார் விசா­ரிப்­பது என்ற பிரச்­சி­னையும் தீவி­ர­மா­னது.

கத்­தியால் குத்­தி­ய­வரும், குத்­தப்­பட்­ட­வரும் ஆரம்­பத்தில் சவூ­தியில் சிகிச்­சைக்கு உட்­­ப­டுத்­தப்­பட்­டனர். இவர்கள் ஐக்­கிய அரபு இராச்­சி­யத்­துக்கு மாற்­றப்­பட்­டுள்­ளார்கள். ஐக்­­கிய அரபு இராச்­சிய அதி­கா­ரிகள் சந்­தேக நபரை விசா­ரிக்­கையில் தமது புல­னாய்வு அதி­கா­ரி­களும் பிர­சன்­ன­மாக இருக்க வேண்டும் என இஸ்ரேல் அடம் பிடிக்­கலாம். எந்­த­வொரு நாடும் தமது தவறை ஒத்துக் கொள்ளப் போவதும் இல்லை. தமது பிம்­பத்தை விட்டுக் கொடுக்­கவும் மாட்­டாது.

 அப்­ப­டி­யாயின், கூட்டு விசா­ரணை சாத்­தி­யப்­பட போவ­து­மில்லை. உண்­மைகள் பகி­ரப்­ப­டவும் மாட்­டாது.

 இனி மூன்­றா­வது விட­யத்தை ஆராய்வோம். நாம் எந்த நாட்டை நம்­பு­வது?

 எந்­நாடு உண்­மையை சொல்­லக்­கூடும் என்று கேள்வி எழுப்­பினால், நமக்கு திருப்­தி­க­ர­மான பதில் கிடைக்­குமா என்­பதும் சந்­தே­கமே.

 மத்­திய கிழக்கு நாடுகள் விசா­ர­ணை­களில் வெளிப்­படைத் தன்மை காட்­டு­வது கிடை­யாது. சகல விசா­ர­ணை­க­ளையும் மூடிய அறை­க­ளுக்குள் நடத்­து­வது அவற்றின் வழக்கம். அந்­நா­டு­களின் செய்தி நிறு­வ­னங்­களும் அரச கட்­டுப்­பாட்டின் கீழ் இயங்கி வரு­கின்­றன. அர­சாங்கம் அல்­லது அரண்­மனை என்ன சொல்­கி­றதோ, அதையே கவ­ன­மான வார்த்­தை­களில் ஊடக நிறு­வ­னங்கள் எழுதி வெளி­யி­டு­வதும் வழக்­க­மாக இருக்­கி­றது.  

தாக்­கு­தலை நடத்­தி­யவர் மன­நிலை பாதிக்­கப்­பட்­டவர் என்றோ, அவர் தனிப்­பட்ட கோபத்தில் தான் தலைமை விமா­னியை தாக்­கினார் என்றோ விசா­ர­ணை­களின் முடிவில் தெரி­ய­வ­ரு­வ­தாக கரு­துவோம். அது 'பயங்­க­ர­வாதத் தாக்­கு­தலை' முன்­னி­றுத்­திய தேர்தல் பிர­சா­ரத்­திற்கு குந்­தகம் விளை­வித்து விடும்.

டுபாய் விமான நிலை­யத்தில் ஒழுங்­கான பாது­காப்பு ஏற்­பா­டுகள் இருந்­தி­ருந்தால், இத்­த­கைய சம்­பவம் நடந்­தி­ருக்­காது என்று விசா­ரணை அதி­கா­ரிகள் தீர்­மா­னிப்­ப­தாக கரு­துவோம். அப்­போது, உல­க­ளா­விய ரீதியில் விமானச் சேவை பாது­காப்பு தொடர்பில் ஐக்­கிய அரபு இராச்­சி­யத்­துக்கு இருக்கும் நற்­பெய­ருக்கு களங்கம் ஏற்­பட்டு விடலாம்.

 இந்த விசா­ர­ணையை உற்­று­நோக்­கினால், உண்­மையை மறைப்­ப­தற்கு அல்­லது திரித்­துக்­கூ­று­வ­தற்கு ஒவ்­வொரு நாட்­டிற்கும் வெவ்­வே­றான கார­ணங்கள் இருக்­கின்­றன.

 இப்­போது முற்று முழு­வதும் அடுக்­க­டுக்­கான திரை­களால் மூடப்­பட்­ட­தொரு விசா­ரணை அறையை கற்­பனை செய்து கொள்­ளுங்கள்.

 அறைக்கு வெளியே இருப்­ப­வர்­க­ளுக்கு சில உண்மைகள் தெரிய வேண்டும். ஓமா­னிய விமானி ஏன் தாக்கினார்? விமானத்தை நிலத்தில் வீழ்த்தும் எண்ணம் அவருக்கு இருந்­ததா? அவருக்கு உதவி செய்தவர்கள் யார்?

எந்தத் தகவலை வெளியே சொல்ல வேண்டும் என்பதை அறைக்குள் இருந்து தீர்மானிப்பவர்கள் அரசியல்வாதிகள் என்­றால், உண்மைகள் வெளிவரும் என்று எதிர­்பார்க்க முடியுமா?

உயரப்பறந்து கொண்டிருந்த விமானம் சடுதியாக கீழே இறங்கும்போது, சில தைரிய­மான பயணிகள் சடுதியாக செயற்பட்டு அசம்பாவிதத்தைத் தடுக்கிறார்கள்.

 அதே விமானம் தரையைத் தொட்டவுடன், விமானிகளின் அறையில் புகுவது அரசியல் என்றாகிறது.

அரசியல் தான் விமானத்தின் திசையைத் தீர்மானிக்கும் என்றால், விமானிகளின் அறையில் இருந்து உண்மை வெளியேறி யதார்த்திற்குள் தரையிறங்க முடியுமா?

 இது தான் முக்கியமான கேள்வி.

-சதீஷ் கிருஷ்ணபிள்ளை 

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!