மின்சாரப் பரிமாற்ற அமைப்பில் (Transmission System) ஏற்பட்ட சமநிலையின்மை காரணமாக இன்று (17) காலை 11.45 அளவில் நாடளாவிய ரீதியில் திடீர் மின்சாரத் தடை ஏற்பட்டது.
எனினும், பல்வேறு கட்ட முயற்சிகளுக்குப் பின்னர் இன்று இரவு 09.56 அளவில் மின் விநியோகம் முழுமையாக வழமைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக தேசிய கட்டமைப்புச் செயற்பாட்டாளர் நிறுவனம் (National System Operator) அறிவித்துள்ளது.
மின்தடைக்கான காரணம் குறித்து ஆரம்பத்தில் மேல் கொத்மலை மின் நிலையத்தில் ஏற்பட்ட கோளாறே காரணமாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்ட போதிலும், மின்சார விநியோகத் தடைக்கான உண்மையான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என வலுசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.
இந்தத் திடீர் மின்சாரத் தடையினால் பொதுமக்கள், வர்த்தகர்கள் மற்றும் கைத்தொழில் துறையினர் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.
குறிப்பாக, எரிபொருள் விநியோகமும் தடைப்பட்டமையால் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் வாகனங்களின் நீண்ட வரிசைகள் காணப்பட்டன.
மேலும், கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களின் பிரதான நீர் சுத்திகரிப்பு நிலையங்களான அம்பத்தலை மற்றும் பியகம ஆகியவற்றின் செயற்பாடுகளும் இதனால் பாதிக்கப்பட்டன.
சமநிலையின்மை காரணமாக சமனலவெவ மற்றும் புதிய லக்ஷபான ஆகிய மின் நிலையங்களைத் தவிர, நுரைச்சோலை உள்ளிட்ட ஏனைய அனைத்து மின் நிலையங்களும் செயலிழந்ததாக வலுசக்தி அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.
எவ்வாறாயினும், நுரைச்சோலை மின் நிலையம் முறையான நடைமுறைப்படியே பாதுகாப்பாகச் செயலிழக்கச் செய்யப்பட்டதாகவும், ஏனைய மின் நிலையங்கள் செயலிழந்ததாகப் பரவிய தகவல்களில் உண்மையில்லை எனவும் தேசிய கட்டமைப்புச் செயற்பாட்டாளர் நிறுவனம் பின்னர் தெளிவுபடுத்தியது.
மின் விநியோகத்தை விரைவாக மீள வழமைக்கு கொண்டுவரும் நோக்கில், கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள சூரிய மின் படலம் (Solar) அமைப்புகளைத் தற்காலிகமாகத் துண்டிக்குமாறு அதன் உரிமையாளர்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, மாலை வேளையில் கொழும்பு, கம்பஹா, காலி மற்றும் பதுளை மாவட்டங்களுக்கு மின் விநியோகம் வழங்கப்பட்டதுடன், மாலை 5.30 அளவிலேயே தேசிய பரிமாற்றக் கட்டமைப்பு சீரமைக்கப்பட்டதாக நிறுவனம் குறிப்பிட்டிருந்தது.
எவ்வாறாயினும், மின் விநியோகம் முற்றிலுமாக வழமைக்குத் திரும்புவதற்கு இரவு வரை காலதாமதமானதுடன், மின்னேரிய, மெதிரிகிரிய, பண்டாரகம உள்ளிட்ட சில பகுதிகளில் இரவு 9 மணி வரை மின்சாரம் கிடைக்காமல் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!