news@ilakkiyainfo.com

பிரிவுகள்

நாட்டின் பல மாவட்டங்களுக்கு கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை

02 Nov, 2026
வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்த முன்னெச்சரிக்கை மையத்தினால், நாட்டின் பல பகுதிகளுக்கு கடும் இடியுடன் கூடிய மின்னல் தாக்கம் தொடர்பான மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை இன்று (02) திங்கட்கிழமை நண்பகல் 12.00 மணி முதல் நாளை (03) செவ்வாய்க்கிழமை அதிகாலை 1.00 மணி வரை அமுலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, குருநாகல், அநுராதபுரம், இரத்தினபுரி, மட்டக்களப்பு, அம்பாறை, பதுளை, காலி, மாத்தறை, கேகாலை, மொனராகலை, முல்லைத்தீவு, புத்தளம் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அம்பாந்தோட்டை, மாத்தளை, பொலன்னறுவை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களின் அனைத்து பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கான பாதுகாப்பு அறிவுறுத்தல்கள்

 இடியுடன் கூடிய மழை பெய்யும் போது வெளிப்புறங்களில் இருப்பதைத் தவிர்த்து, உடனடியாக பாதுகாப்பான கட்டிடங்களுக்குள்       தஞ்சமடையுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
   
மரங்களுக்கு அடியில் நிற்பதையும், நெற்பயிர் நிலங்கள், தோட்டங்கள் மற்றும் நீர்நிலைகள் உள்ளிட்ட திறந்தவெளிகளில் இருப்பதையும் தவிர்க்கவும்.
    
கம்பியுடனான தொலைபேசிகள் மற்றும் மின்சாரத்துடன் இணைக்கப்பட்டுள்ள வீட்டு மின்சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
    
சைக்கிள்கள், டிராக்டர்கள் மற்றும் படகுகள் போன்ற திறந்த வாகனங்களில் பயணிப்பதைத் தவிர்க்கவும்.
    
வீழ்ந்து கிடக்கும் மரங்கள் மற்றும் அறுந்து கிடக்கும் மின் கம்பிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    
அவசர நிலை ஏற்பட்டால், உள்ளூர் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளைத் தொடர்புகொள்ளுமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!