நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (13) இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 5 பேர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிரிந்த, ஹபரணை, அநுராதபுரம், மதவாச்சி மற்றும் ஹக்மனை ஆகிய பொலிஸ் பிரிவுகளிலேயே இவ் விபத்துக்கள் பதிவாகியுள்ளன.
கிரிந்த - திஸ்ஸமஹாராம வீதி
கிரிந்த - திஸ்ஸமஹாராம வீதியின் விலமுல்ல பகுதியில் நேற்றைய அதிகாலை வேளையில் மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.
இதில் படுகாயமடைந்த இருவர் தெபரவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கேக்கிராவ பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய வாலிபர் உயிரிழந்தார்.
மற்றைய நபர் மேலதிக சிகிச்சைக்காக அம்பாந்தோட்டை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ஹபரணை - கந்தளாய் வீதி
ஹபரணை - கந்தளாய் வீதியின் அலுத்ஓய பகுதியில் கந்தளாய் நோக்கிச் சென்ற சொகுசு கார் ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த லொறியுடன் மோதியது.
இச் சம்பவத்தில் காயமடைந்து கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அஃபோபுர பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய பெண் உயிரிழந்தார்.
அனுராதபுரம் - ரம்பேவ வீதி
அனுராதபுரம் - ரம்பேவ வீதியின் சாலியபுர பகுதியில் பேருந்தை முந்திச் செல்ல முயன்ற மோட்டார் சைக்கிள் பேருந்துடன் மோதியதில், ஓட்டுநர் பேருந்தின் சக்கரங்களில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் சாலியபுர பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞராவார்.
ஹொரோவ்பதான- மதவாச்சி வீதி
ஹொரோவ்பதான- மதவாச்சி வீதியின் கிரிகல்வெவ பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று வீதியை விட்டு விலகி கால்வாய்க்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
காரில் பயணித்த மூவர் மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மட்டக்களப்பைச் சேர்ந்த 47 வயதுடைய பெண் உயிரிழந்தார்.
மற்றைய பெண் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ஹக்மனை: ஹக்மனை - கரதொட்ட வீதி
ஹக்மனை - கரதொட்ட வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியை விட்டு விலகி மின்சாரக் கம்பத்துடன் மோதியதில் படுகாயமடைந்த 20 வயதுடைய ஹக்மனை பகுதியைச் சேர்ந்த இளைஞர் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
இவ் அனைத்து விபத்துக்கள் தொடர்பிலும் சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையங்கள் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றன.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!