news@ilakkiyainfo.com

பிரிவுகள்

நாணயச் சந்தையில் உருவான நச்சுச் சுழற்சி

22 May, 2026

இலங்கையின் வெளிநாட்டு நாணய மாற்றுச் சந்தை கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்து வருவதுடன், நம்பிக்கை நலிவடைந்துள்ளமை காரணமாகச் சந்தையில் பெரும் ஸ்திரமற்றதன்மை மற்றும் நிச்சயமற்ற ஒரு "நச்சுச் சுழற்சி" உருவாகியுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா எச்சரித்துள்ளார். 


நாடாளுமன்றத்தில் நேற்று (21) உரையாற்றிய அவர், நிதிச் சந்தைகள் அரசியல் ரீதியான வெற்று வாக்குறுதிகளின் அடிப்படையில் இயங்குவதில்லை என்றும், அவை முழுமையாக 'நம்பிக்கை' என்ற காரணியின் மீதே இயங்குவதால், நாட்டை வீழ்ச்சியடைய இடமளிக்க மாட்டோம் என்ற அரசின் தற்போதைய அரசியல் அறிக்கைகள் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீளக் கட்டியெழுப்பப் போதுமானதாக இல்லை என்றும் குறிப்பிட்டார். 


தற்போது இலங்கை வங்கி டொலரின் விற்பனை விலை 354 ரூபா வரை அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளமை நாணயச் சந்தையின் மீதான அழுத்தத்தை வெளிச்சமிட்டுக் காட்டுவதாகச் சுட்டிக்காட்டிய அவர், டொலரின் மதிப்பு மேலும் உயரும் என்ற எதிர்பார்ப்பில் ஏற்றுமதியாளர்கள் தங்களது வெளிநாட்டு நாணயங்களைச் சந்தைக்குக் கொண்டு வராமல் முடக்கி வைத்துள்ளதாகவும் விபரித்தார்.


மறுபுறம், டொலரின் விலை 375 ரூபாவைத் தாண்டிவிடும் என்ற அச்சத்தில் இறக்குமதியாளர்கள் முன்கூட்டியே டொலர்களைக் கொள்வனவு செய்ய முண்டியடிப்பதால் சந்தையின் திரவத்தன்மை மேலும் மோசமடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். இன்றைய நிலவரப்படி வெளிநாட்டு நாணய மாற்றுச் சந்தையில் வர்த்தக நடவடிக்கைகள் முற்றிலும் முடங்கியுள்ளதுடன், பெரும்பாலான நாணயப் பரிமாற்றங்கள் மத்திய வங்கியுடன் மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளன என்றும், இத்தகைய ஸ்திரமற்ற சூழலில் கொழும்பு போர்ட் சிட்டி போன்ற பிரதான திட்டங்களுக்கு அரசு எவ்வாறு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கப் போகின்றது என்ற கேள்வியையும் அவர் எழுப்பினார். 


எனவே, வெளிநாட்டு நாணயச் சந்தையை மீண்டும் சீர்செய்ய வேண்டுமாயின், அரசு எதிர்வரும் வாரத்தில் வட்டி வீதங்களை 50 முதல் 100 புள்ளிகள் வரை கடுமையாக உயர்த்த வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படலாம் என்றும், வட்டி வீதங்கள் அதிகரிக்கப்பட்டால் அரசு உள்நாட்டில் பெறும் கடன்களுக்கான செலவு அதிகரித்து, அதனை ஈடுகட்ட இறுதியாகப் பொதுமக்கள் மீது புதிய வரிகளைச் சுமத்த வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படும் என்றும் ஹர்ஷ டி சில்வா மேலும் எச்சரித்துள்ளார்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!