தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் அமைச்சரவையில் மந்திரி பதவி கிடைக்கும், ‘மாண்புமிகு’ அடையாளத்தோடு பவனி வரலாம் என்று காத்திருந்த கிளர்ச்சி அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களுக்கு, சுடச்சுட திருநெல்வேலி அல்வாவைக் கிண்டிக் கொடுத்திருக்கிறார் முதல்வர் விஜய்.
அமைச்சராகும் கனவோடு அ.தி.மு.க-வையும் கன்ட்ரோலில் எடுக்கலாம் எனத் திட்டமிட்டிருந்தவர்களின் தலையில் பேரிடி விழுந்திருக்கிறது.
“இப்படி நம்பவைத்து நட்டாற்றில் விட்டுவிட்டாரே முதல்வர் விஜய்...” என்று புலம்பாத கிளர்ச்சி எம்.எல்.ஏ-க்களே இல்லை.
அந்த அளவுக்கு, சென்னை எம்.ஆர்.சி நகரில் கூடியிருக்கும் ஒட்டுமொத்தக் கூடாரமும் ஆடித்தான் போயிருக்கிறது.
“நிர்க்கதியாகியிருக்கும் அ.தி.மு.க-வின் 25 எம்.எல்.ஏ-க்கள் எதிர்காலம் என்னவாகும், அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் திட்டம் என்ன, டெல்லி என்ன மனநிலையில் இருக்கிறது?” என்று விரிவாக விசாரித்தோம்.
“ரிசைன் பண்ணிட்டு வாங்க!” - தவிக்கவிட்ட விஜய்<
சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள மாரீஸ் ஹோட்டலில் நடந்த ரகசியப் பேச்சுவார்த்தையில்தான், த.வெ.க - கிளர்ச்சி அ.தி.மு.க கூட்டணி முடிவானது.
முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கரிடம் பேச்சுவார்த்தை நடத்திய முதல்வரின் நம்பிக்கைக்குரியவரான விஷ்ணு ரெட்டி, “உங்க சப்போர்ட் எங்களுக்கு வேண்டும். அதற்கு பதிலாக நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?” என்பதை வெளிப்படையாகவே கேட்டிருந்தார்.
எட்டு அமைச்சர் பதவிகள், ஆறு வாரியத் தலைவர் பதவிகளை எஸ்.பி.வேலுமணி தரப்பு எதிர்பார்த்த நிலையில், அவர்களுடைய டிமாண்ட் முதல்வரின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது.
இந்தப் பேச்சுவார்த்தைகளின் தொடர்ச்சியாகவே, எம்.ஆர்.சி நகரிலுள்ள சி.வி.சண்முகத்தின் இல்லத்துக்கு திடீர் விசிட் அடித்தார் முதல்வர் விஜய்.
அமைச்சரவையில் வேலுமணி குழுவினரை இணைத்துக் கொள்வதற்கான பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை எட்டிய சமயத்தில்தான், சில சட்டச் சிக்கல்களும் முட்டுக்கட்டைகளும் விழுந்திருக்கின்றன.
<நம்மிடம் பேசிய த.வெ.க-வின் மேல்மட்ட நிர்வாகிகள் சிலர், “தொடக்கத்திலிருந்தே அ.தி.மு.க-வைக் கூட்டணிக்குள் சேர்த்துக் கொள்ள முதல்வரின் வியூக வகுப்பாளரான ஜான் ஆரோக்கியசாமிக்கு விருப்பமில்லை.
‘மாற்றத்துக்காகத்தான் மக்கள் நமக்கு வாக்களித்திருக்கிறார்கள். குறிப்பாக, ஊழலுக்கு எதிராக வாக்களித்திருக்கின்றனர். அதனால் அ.தி.மு.க-வினரை நாம் இணைத்துக்கொள்வது சரிவராது.
அந்தக் கட்சி முடிந்துபோய்விட்டது. அதற்கு உயிர்கொடுக்க வேண்டாம்’ என்று முட்டுக்கட்டை போட்டார்.
இதற்கிடையே, ‘கட்சித்தாவல் தடைச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை கோரி மனு அளிக்கப்பட்டிருப்பதால், கிளர்ச்சி அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களில் சிலரை அமைச்சராக்குவதில் எனக்குச் சந்தேகம் இருக்கிறது’ என்று சொல்லிவிட்டார் ஆளுநர் அர்லேகர்.
அதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் இருவரிடம் தனிப்பட்ட ஆலோசனையைக் கேட்டது ஆட்சி மேலிடம். அவர்களும், ‘சட்டச் சிக்கல் எழும். தேவையில்லாத வம்பில் மாட்ட வேண்டாம்’ என்று ஆலோசனையளிக்கவே, அ.தி.மு.க-வைக் கழற்றிவிட முடிவெடுத்தார் முதல்வர்.<
வேலுமணி தரப்பினரிடம், ‘நீங்க எம்.எல்.ஏ பதவிகளை ரிசைன் பண்ணிட்டு வாங்க. த.வெ.க-வுல இணைந்து, விசில் சின்னத்துல போட்டியிடுங்க. நீங்க எல்லாரும் ஜெயிக்குறதுக்கு நானே பிரசாரம் பண்றேன். ஜெயிச்ச பிறகு அமைச்சர் பதவி தர்றேன்’ என்று உத்தரவாதம் அளித்தார் முதல்வர்.
அவரது பதிலில், ஒட்டுமொத்த வேலுமணி குழுவினரும் கடும் அதிர்ச்சியாகிவிட்டார்கள்
கடந்த மே 20-ம் தேதி விஷ்ணு ரெட்டிக்கு போன் போட்ட சி.விஜயபாஸ்கர், ‘அ.தி.மு.க-விலிருந்து வெளியேறி த.வெ.க-வுக்கு வர்றதுல எங்க யாருக்கும் உடன்பாடில்லை.
அ.தி.மு.க சார்பாக உங்களுக்கு ஆதரவு அளிக்கத்தான் முதலில் ஒப்புக்கொண்டோம். இப்படி ரிசைன் பண்ணச் சொன்னால் எப்படி... எங்களை நட்டாத்துல விட்டுட்டீங்களே... எங்களை நம்பி வந்த 20-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ-க்களுக்கும், நூற்றுக்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகளுக்கும் என்ன பதில் சொல்வோம்...’ என்று புலம்பித் தள்ளிவிட்டார்.<
அவரை விஷ்ணு ரெட்டியால் சமாதானப்படுத்த முடியவில்லை. செங்கோட்டையனிடம் வேலுமணி பேசியும் எந்த மாற்றமும் இல்லை.
அன்றிரவு, அமைச்சர் பட்டியலில் இருந்தவர்களுக்கெல்லாம் முதல்வர் அலுவலகத்திலிருந்து போன் சென்றது. ஆளுநர் மாளிகைக்கும் பட்டியல் அனுப்பப்பட்டது.
அதற்குப் பிறகுதான், ‘நம்மைக் கழற்றிவிட்டுவிட்டார்கள். நிர்க்கதியாகிவிட்டோம்’ என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டார்கள் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்.
இந்த விவகாரத்தில், முதல்வர் விஜய் செய்தது நுட்பமான அரசியல்தான். தி.மு.க - அ.தி.மு.க இடையே அமையவிருந்த கூட்டணியை உடைத்து, கிளர்ச்சி அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களின் ஆதரவைப் பெற்று ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டார்.
நம்பிக்கைத் தீர்மானத்தின் மீதான ஓட்டெடுப்பில் வெற்றிபெற்றவுடன், அ.தி.மு.க கிளர்ச்சியாளர்களைக் கழற்றிவிட்டுவிட்டார்.
அவர்களால் தேவைப்பட்ட பயனை அடைந்தாகிவிட்டது. அ.தி.மு.க-வையும் உடைத்தாகிவிட்டது. தகுதிநீக்கத்தால் அந்த 25 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்தாலும், அங்கேயெல்லாம் வேட்பாளர்களை நிறுத்தி 12 இடங்களை வென்றாலே போதும், த.வெ.க தனிப்பெரும்பான்மை பெற்றுவிடும்.
யாருடைய தயவும் இல்லாமலேயே ஆட்சியை ஐந்தாண்டுகளும் நடத்தலாம். இந்த அரசியல் கணக்கோடுதான் நகர்கிறார் முதல்வர் விஜய்” என்றனர் விரிவாக
“காங்கிரஸை பலப்படுத்த துணை போகிறீர்களா?”
‘த.வெ.க செய்தது நம்பிக்கை துரோகம்’ என்று பொருமிக்கொண்டிருக்கிறது வேலுமணி குழு. த.வெ.க தரப்பிலோ, ‘அவர்கள் மட்டும் யோக்கியமா... எடப்பாடியையே தூக்கி வீசிவிட்டு வந்தவர்கள்தானே... எங்களுக்கு எதிராகத் திரும்ப எத்தனை நேரமாகும்...’ என்கிறார்கள்.
நிச்சயத்தில் தொடங்கிய பந்தம், திருமணத்தைத் தொடாமலேயே முறிவுக்கு வந்திருக்கிறது. இந்த விவகாரத்தில் டெல்லியின் நகர்வுகள்தான் வேலுமணி டீமை ஆட்டம் காணச் செய்துவிட்டதாகச் சொல்கிறார்கள் பா.ஜ.க-வினர்
.அது குறித்து நம்மிடம் பேசிய பா.ஜ.க-வின் மாநில மையக்குழு உறுப்பினர் ஒருவர், “அ.தி.மு.க உட்கட்சி விவகாரத்தில் தலையிட டெல்லி முதலிலிருந்தே விரும்பவில்லை.
டெல்லியின் சப்போர்ட்டை எடப்பாடியும் வேலுமணியும் மாறி மாறிக் கேட்டபோதுகூட, ‘இது உங்கள் பிரச்னை. நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று சொல்லிவிட்டது டெல்லி.
த.வெ.க அரசாங்கத்துக்கு ஆதரவாக வேலுமணி வாக்களித்த போதுகூட டெல்லி கண்டுகொள்ளவில்லை. ஆனால், அமைச்சரவைக்குள் அவர்கள் அடியெடுத்து வைக்கப்போவது தெரிந்ததும் டென்ஷனாகிவிட்டது.<
அதைத் தொடர்ந்துதான் ஆளுநரிடமிருந்து ‘அவர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைப்பதில் எனக்குச் சந்தேகம் இருக்கிறது’ என அர்த்தமுள்ள வார்த்தைகள் வந்து விழுந்தன.
முன்னாள் அமைச்சர் தங்கமணியிடம், ‘காங்கிரஸை பலப்படுத்த துணை போகிறீர்களா...’ என்று டெல்லி பா.ஜ.க சீனியர் ஒருவரே சீறிவிட்டார்.
காங்கிரஸை தனிமைப்படுத்துவதுதான் டெல்லியின் திட்டம். காங்கிரஸ் பங்குபெற்றிருக்கும் த.வெ.க அமைச்சரவையில், கிளர்ச்சி அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களும் இணைந்துவிட்டால், அடுத்த ஐந்து வருடங்களுக்கு அரசாங்கத்தை அசைக்க முடியாது. டெல்லி பா.ஜ.க-வின் திட்டங்களும் செல்லுபடியாகாது.
அதனால்தான், அந்த 25 எம்.எல்.ஏ-க்களுக்கு எதிராகத் திரும்பிவிட்டது டெல்லி” என்றார்.
“வாங்கப்பா வாங்க...” - கொக்கரிக்கும் எடப்பாடி!<
ஒருபக்கம் த.வெ.க-வின் நிராகரிப்பு, மறுபக்கம் டெல்லியின் நெருக்கடிக்கு மத்தியில் துவண்டுபோயிருக்கிறார்கள் கிளர்ச்சி அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள். அவர்களின் எதிர்காலமெல்லாம் சபாநாயகரிடமும், அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி யிடமும்தான் இருக்கிறது.
இதையடுத்து எடப்பாடியிடம் சமாதானப் பேச்சு வார்த்தையையும் தொடங்கியிருக்கிறது கிளர்ச்சி அ.தி.மு.க தரப்பு.
சபாநாயகரிடம் கொடுத்த புகாரை எடப்பாடி திரும்பப் பெற்று விட்டாலே போதும், வேலுமணி குழுவினரின் எம்.எல்.ஏ பதவிகள் தப்பித்துவிடும்.
அதற்கான பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
போட்டி பொதுக்குழுவைக் கூட்டலாம். எடப்பாடிக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றலாம். இ.பி.எஸ்-ஸை இன்னொரு ஓ.பி.எஸ் ஆக்கலாம்’ என்ற திட்டத்தில் இருந்தவர்கள், அமைச்சர் அதிகாரம் கைகூடவில்லை என்றதும் திட்டத்தை மாற்றி விட்டனர்.
சி.விஜயபாஸ்கர் கொஞ்சம் கொஞ்சமாக வேலுமணியிடமிருந்து பின்வாங்கிவிட்டார். மீண்டும் கட்சிக்குள் நுழைவதற்கான வழிவகையாக, ‘தோல்வி குறித்து ஆராய ஒரு குழு அமைக்க வேண்டும். அதேபோல, வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டு, அந்தக் குழுவின் ஆலோசனைப்படியே பொதுச்செயலாளர் முடிவுகளை எடுக்கலாம்’ என்று நிபந்தனைகளைக் கூறியிருக்கிறது வேலுமணி டீம
அந்த நிபந்தனைகளை ஏற்கும் மனநிலையில் எடப்பாடி பழனிசாமி இல்லை. ‘என்னை எதிர்த்தா பேசுனீங்க... வாங்கப்பா வாங்க...’ என்று கொக்கரித்துக் கொண்டிருக்கிறார்.
மீண்டும் கட்சியில் இணைத்துக் கொண்டாலும், வேலுமணி, சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கரின் கட்சி அதிகாரங்களைக் குறைக்க முடிவெடுத்திருக்கிறார்.
பழைய பதவிகளை அவர்களால் இனி கட்சியில் பெற முடியாது. அவர்களை நம்பிச் சென்றவர்களுக்கும் மீண்டும் கட்சிப் பதவி கிடைப்பதெல்லாம் கஷ்டம்தான்.
<அவர்கள் சொல்வது உண்மைதான். சி.வி.சண்முகத்துக்குத் தொடர்ச்சியான வாய்ப்புகளைக் கொடுத்தார் எடப்பாடி பழனிசாமி. விழுப்புரத்துக்கு பதிலாக மயிலம் தொகுதியை சண்முகம் மாற்றிக் கேட்டபோது, முகம் சுளிக்காமல் கொடுத்தார்.
தலைமை நிலையச் செயலாளர் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.விஜயபாஸ்கர், ஆர்.காமராஜ், எம்.ஆர்.விஜயபாஸ்கர் போன்றவர்களை தன்னுடைய தளபதிகளாக நினைத்தார்.
அப்படித் தளபதிகளாக இருந்தவர்களில், அக்ரி கிருஷ்ணமூர்த்தியும் ஆர்.பி.உதயகுமாரும் மட்டும்தான் எடப்பாடியின் பக்கம் நிற்கிறார்கள்.
அதனாலேயே இனி யாரையும் நம்பக் கூடாது என்கிற முடிவுக்கு வந்துவிட்டாராம் எடப்பாடி பழனிசாமி.
டி.டி.வி.தினகரனைக் கட்சிக்குள் கொண்டுவர அவர்கள் செய்த முயற்சிகளுக்கு இதுவரை பலனில்லை. பொதுக்குழு கூட்டுவதிலும் பல முரண்பாடுகள் அவர்களுக்குள்ளேயே வெடிக்கின்றன.
இறுதியில், எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக்கொண்டு அ.தி.மு.க-வுக்குள் மீண்டும் செல்வதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை என்பதால், நிர்க்கதியில் நிற்கிறார்கள். அ.தி.மு.க-வுக்குள் ஒரு ஆட்டத்தையே ஆடிப் பார்த்துவிட்டது த.வெ.க.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!