news@ilakkiyainfo.com

பிரிவுகள்

நீதி தேவதையின் கண்களை மறைத்தல்...!

16 Oct, 2026
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ச இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால்  கைது செய்து அழைத்துச்செல்கையில் அவர் தனது வலப்பக்க கண்ணில் கண் பாதுகாப்பு கவசம் ஒன்றை (protective Eye Shield) ஒட்டியிருந்தார். 

முன்னதாக  சிரிலிய சவிய கணக்கு தொடர்பான முறைகேடு குறித்து வாக்குமூலம் ஒன்றை வழங்குமாறு பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவானது செப்டெம்பர் 24 ஆம் திகதி ஆஜராகுமாறு அவருக்கு அழைப்பு விடுத்திருந்தது.  

அச்சந்தர்ப்பத்தில் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த ஷிராந்தி மேலதிக சிகிச்சைக்காக சிங்கபூர் சென்றார். அங்கு அவர் எந்த வைத்தியசாலையில்  சிகிச்சைப் பெற்றார் என்பது யாருக்கும் தெரியாது.  ஆனால் சிங்கபூர் வணிக வளாகப் பகுதியில் அவர் சாதாரணமாக நடமாடி திரிந்த படங்கள் சமூக ஊடகங்களில் பரவி சந்தேகங்களை எழுப்பின. 

பின்னர் அவர் இம்மாதம் 6 ஆம் திகதி அதிகாலை நாடு திரும்பினார். அப்போதும் சர்வசாதாரணமாக விமானநிலையத்திலிருந்து வெளியேறி தனது வாகனத்தில் ஏறிச்சென்றார். அவர் சிகிச்சைப் பெற்றதற்கான அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை.   அதே வேளை சிரிலிய சவிய தொடர்பில் வாக்குமூலம் வழங்க அவர் 13 ஆம் திகதி  நிதி மோசடி விசாரணை பிரிவில் ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. 


இவ்வாறான பின்னணியில், 'சிரிலிய சவிய' விவகாரம் தொடர்பில் மற்றொரு விசாரணைக்காக வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக்கொள்ளவே  இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள்  கடந்த புதன்கிழமை 7 ஆம் திகதி  காலை  நாரஹேன்பிட்டி பூர்வாராம வீதியிலுள்ள ஷிரந்தி ராஜபக்சவின் வீட்டிற்குச் சென்றனர். 

சுமார் இரண்டு மணி நேர வாக்குமூலப் பதிவின் பின்னர், ஷிரந்தி,   விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.   அன்று மாலை கொழும்பு பிரதான நீதிமன்றில் அவர் ஆஜர்படுத்தப்பட்ட போது அவரை 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார். 

7 ஆம் திகதி அவர் கொழும்பு பிரதான நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவர் சார்பாக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா ஷிராந்தி ராஜபக்சவை பிணையில் விடுதலை செய்ய வேண்டும் என்றும் 73 வயதான அவர் கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டே நீதிமன்றத்துக்கு வருகை தந்திருக்கின்றார் என்றும் 2019 ஆம் ஆண்டிலிருந்து இவர் இதய நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் வாதங்களை முன்வைத்திருந்தார். எனினும் அவரது வாதம் நீதவானால் நிராகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

அவரை விளக்கமறியலிலிருந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கான முயற்சிகள் வியாழக்கிழமையன்று மேற்கொள்ளப்பட்டன. எனினும் அம்முயற்சி கை கூடவில்லை. 

சிறைச்சாலை மருத்துவரின் ஆலோசனைகளின் பேரில் அவர் மறுநாள் வெள்ளிக்கிழமை  கண் பரிசோதனைகளுக்காக தேசிய வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.  

இப்போது என்னவென்றால் அவருக்கு இதயத்தில் பிரச்சினை இருக்கின்றது என்றும் அவருக்கு சத்திர சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் கூறப்படுகின்றது. 

கண் சிகிச்சைக்காக சிங்கபூர் சென்றவர் எந்தவித பாதிப்பும் இன்றி நாடு திரும்பினார். அவரை கைது செய்து அழைத்துச்செல்லும் போது கண்களை மறைத்து கவசம் போட்டிருந்தார். இப்போது கண் வருத்தமில்லை இதய வருத்தம் என அவர் தரப்பு சட்டதரணிகள் கூறுகின்றனர். இவர்கள் யாரை ஏமாற்றப் பார்க்கின்றார்கள்?

இதேவேளை ஷிரந்தி ராஜபக்சவின் கைது மகிந்தவை மனரீதியாக பாதிப்படையச் செய்துள்ளது. அவர் வீட்டில் இருக்கும் போதே ஷிரந்தியிடம் வாக்குமூலம் பெற்ற இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் அவர் முன்னேயே ஷிரந்தியை கைது செய்து அழைத்துச் சென்றனர். 

அவர்களுடன் மகிந்தவும் பயணித்தார். பின்பு மனைவியைப் பார்ப்பதற்கு மறுநாள் வியாழக்கிழமை வெலிக்கடை சிறைச்சாலைக்கும் சென்றார். தனது குடும்பத்தில் அனைவரினதும் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள நிலையில் உடல் ரீதியாக தளர்ந்து போயுள்ள மகிந்த தற்போது தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

ஷிரந்தியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் அன்றைய தினம் இதே விசாரணைகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவர் தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைவர் பிரதீப் காரியவசம் ஆவார். நீதிமன்றில் அவர் ஆஜர்படுத்தப்பட்டாலும் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். 

2010 ஆம் ஆண்டு சிரிலிய சவிய கணக்கிற்கு தேசிய சேமிப்பு வங்கியிலிருந்து பத்து மில்லியன் ரூபா பணம் மாற்றப்பட்ட போது வங்கியின் தலைவராக விளங்கியவர் பிரதீப் காரியவசமாவார். அவர் முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவின் கணவர் என்பது முக்கிய விடயம்.    

ஷிராந்தி ராஜபக்சவின் கைதுக்குப் பிறகு எதிர்க்கட்சி உறுப்பினர்களும் பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட பிரமுகர்களும் இது  தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஒரு பழிவாங்கும் செயற்பாடு என ஆக்ரோஷமாக கருத்து வெளியிடத் தொடங்கினர். 

பிமல் ரட்ணாயக்க.



இதற்கு பாராளுமன்றத்தில் சிறந்த விளக்கமொன்றை வழங்கியிருந்தார் சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரட்ணாயக்க.   ‘ ரணில் , மகிந்த காலத்தில் ஊழல் குற்றச்சாட்டுக்களோடு தொடர்புபட்டவர்களின் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு  நீதிமன்றங்களே தண்டனை வழங்குகின்றன. 

நாம் எவரையும் பழிவாங்கவில்லை, அதற்கான தேவைகளும் இல்லையெனக் கூறிய  அவர் 2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு வழக்கு தொடரப்பட்டவர்களுக்கு எதிரான விசாரணைகளே இப்போது முன்னெடுக்கப்படுவதாகவும் அக்காலத்தில் பல வழக்குகள் விசாரணைகளின்றி கிடப்பில் போடப்பட்டதாகவும் தெரிவித்தார். அவர் கூறுவதில் உள்ள   நியாயத்தன்மைகள் குறித்து  ஆராய்ந்து பார்க்க வேண்டும். 

உண்மையில் நல்லாட்சி காலத்திலேயே நாட்டின் ஊழல் எதிர்ப்பு குறித்து அதிக அக்கறை காட்டப்பட்டது. அதற்கான அடித்தளம் அமைக்கப்பட்டது என்றும் கூறலாம். அரச நிறுவனங்களிலிருந்து தகவல்களைப் பெறுவதற்கான தகவல் அறியும் சட்டமூலம் கொண்டு வரப்பட்டது. நிதி மோசடி  விசாரணைப் பிரிவு (FCID) உருவாக்கப்பட்டது. மகிந்த காலத்து ஊழல் குற்றச்சாட்டுகளை மீண்டும் விசாரணைக்கு எடுத்தல் போன்ற நடவடிக்கைகளின் ஊடாக நல்லாட்சி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் ஊழல் எதிர்ப்பு குழு (Anti-Corruption Committee) அமைக்கப்பட்டது.

இந்தக் குழுவில்  மங்கள சமரவீர, பாட்டலி சம்பிக்க ரணவக்க, ரவூப் ஹக்கீம், இரா. சம்பந்தன், இப்போதைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, எம்.ஏ. சுமந்திரன் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் இடம்பெற்றிருந்தனர்.    

குறித்த  ஊழல் எதிர்ப்புக் குழுவின் நிறைவேற்று அதிகாரியாக தற்போதைய சட்டம் மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால நியமிக்கப்பட்டுள்ளார்.  

இந்த விடயங்கள் சம்பந்தமான பாராளுமன்றக் குழுவே   தற்போது இயங்கும் நிரந்தர ட்ரயல் அட் பார் நீதிமன்றங்கள் அமைப்பதற்கான சட்டமூலத்தை தயாரித்தது.  அச் சட்டமும்  பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அந்தக் குழுவில் இந்தச் சட்டத்தை உருவாக்குவதில் முன்னின்று செயலாற்றியவர்கள் கலாநிதி ஜயம்பதி விக்ரமரட்ன, அஜித் பி பெரேரா மற்றும் எம் ஏ சுமந்திரன் ஆகியோராவர்.  

ஊழல்களுக்கு எதிரான போராடுவோம் என நல்லாட்சி காலத்தில் சில நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டாலும் பின்பு அதில் அக்கறை காட்டாத தன்மையே ஏற்பட்டது. 

2019 இல் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி, ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்,  பின்பு கொவிட் தாக்கம், புதிய ஆட்சி என வரிசையாக இடம்பெற்ற சம்பவங்களால் கிட்டத்தட்ட 2015 இற்கு முன்பு மகிந்த ஆட்சி காலத்து ஊழல் சம்பவங்கள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டன. 

ஆனால்   குறித்த ஊழல் எதிர்ப்பு குழுவின் உறுப்பினராக விளங்கிய அநுரகுமார திசாநாயக்க இப்போது ஜனாதிபதியானவுடன் சுறுசுறுப்பாக ஊழலுக்கு எதிராக இயங்க ஆரம்பித்துள்ளன.  இதில் என்ன வேண்டிக்கை என்றால் ஊழலுக்கு எதிரான அக்குழுவின் தலைவராக விளங்கிய ரணில், தேசிய மக்கள் சக்தியின் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை விமர்சிப்பது தான். இவர்கள் அனைவரும் இப்போது கதறுவதில் அர்த்தமில்லை. யாரும் யாரையும் பழிவாங்கவில்லையென்ற தெளிவு நாட்டு மக்களுக்கும் ஏற்பட்டுள்ளது. 


ஆதாரங்களுடன் வசமாக மாட்டிக்கொண்டவர்கள்  இப்போது கண்களை மூடிக்கொள்வதால் ஒன்றும் நடக்கப்போவதில்லை
.   நீதி தேவதையின் கண்கள் மறைக்கப்பட்டு உள்ளன என நம்புபவர்கள் தமது கண்களுக்கும் கட்டு போட்டுக்கொள்வதால் ஒன்றும் நடக்கப் போவதில்லையென்பதை உணர்ந்து கொண்டால் சரி! அதே வேளை  முதல் பெண்மணி என்ற பந்தாவோடு வலம் வந்த அவர் சாதாரண மக்களிடம்  தொடர்பையும் நட்பையும் ஏற்படுத்திக்கொள்ளாத ஒருவராகவே விளங்கினார். அவருக்காக சாதாரண மக்கள் எவரும் குரல் கொடுப்பதாகத் தெரியவில்லை.  



சி.சி.என்
 

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!