நெதன்யாகுவை போலவே கடுமையான கொள்கைகள் கொண்ட ஐசென்கோட்டை அரபு கட்சிகள் ஆதரித்தது ஏன்?
,
காடி ஐசென்கோட்டுக்கு ஆறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த மொத்தம் 67 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாகக் கூறப்படுகிறது. பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான கூட்டணிக்கோ பெரும்பான்மைக்குத் தேவையானதைவிட மிகவும் குறைவான ஆதரவே உள்ளது (கோப்புப் படம்)
இஸ்ரேலில் புதிய அரசு அமைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வரும் நிலையில், முன்னாள் ராணுவத் தலைமைத் தளபதி காடி ஐசென்கோட்டுக்கு அரபு அரசியல் கட்சிகள் ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளன.
இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக், புதிய கூட்டணி அரசை அமைக்கும் பொறுப்பை எதிர்க்கட்சித் தலைவர் காடி ஐசென்கோட்டிடம் ஒப்படைக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
புதிய அரசு அமைப்பதற்கான முயற்சியில் ஈடுபட ஐசென்கோட்டுக்கு இப்போது 28 நாள்கள் அவகாசம் உள்ளது. இதில் கூடுதலாக 14 நாள்கள் நீட்டிப்பு பெறுவதற்கான வாய்ப்பும் உள்ளது.
"தேசிய அவசரகாலக் கூட்டணி அரசை அமைப்பதற்கான நேரம் இது. அதற்குத் தகுதியானவர்களாக நாங்கள் இருக்க, என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்" என்று ஐசென்கோட் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இஸ்ரேலின் 120 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் ஆட்சி அமைக்க குறைந்தது 61 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.
ஐசென்கோட்டுக்கு ஆறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த மொத்தம் 67 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாகக் கூறப்படுகிறது.
மறுபுறம், பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான கூட்டணிக்கு பெரும்பான்மைக்குத் தேவையான ஆதரவைவிடக் கணிசமாகக் குறைவான ஆதரவே உள்ளது. இதன் காரணமாகவே அவருக்கு ஆட்சி அமைப்பதற்கான முதல் வாய்ப்பை அதிபர் வழங்கவில்லை.
இருப்பினும், ஐசென்கோட்டின் கொள்கைகள் குறித்தும் பாலத்தீன ஆதரவு வட்டாரங்களில் கேள்விகள் எழுந்துள்ளன. அவர் நெதன்யாகுவின் போர் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தவர். பாலத்தீன விவகாரத்தில் அவரது கொள்கைகளும் கடுமையானவை என்றே கருதப்படுகின்றன.
உண்மையில், ஐசென்கோட்டின் கொள்கைகளுடன் உடன்படுவதைக் காட்டிலும், நெதன்யாகுவை ஆட்சியிலிருந்து வெளியேற்றுவதற்கான உத்தியின் ஒரு பகுதியாகவே அரபுக் கட்சிகளின் இந்த முடிவு பார்க்கப்படுகிறது.
இஸ்ரேலின் அரபு அரசியல் கட்சிகளின் கூட்டணியான ஜாயின்ட் லிஸ்ட்டின் தலைவர் யூசுப் ஜபாரீனும் இதே அரசியல் நிர்ப்பந்தத்தைச் சுட்டிக்காட்டியிருந்தார்.
"நாங்கள் நல்லதுக்கும் சிறந்ததுக்கும் இடையே தேர்வு செய்யவில்லை. எங்கள் முன் இருப்பவை மோசமானது, அதைவிட மோசமானது என்ற இரண்டு வாய்ப்புகள்தான்" என்று அவர் கூறியிருந்தார்.
டெல்லியைச் சேர்ந்த இந்திய உலக விவகாரக் கவுன்சிலில் மூத்த ஆய்வாளராகவும் மத்திய கிழக்கு விவகார நிபுணராகவும் உள்ள முனைவர் ஃபஸ்ருர் ரஹ்மான் சித்திக்கியின் கருத்துப்படி, ஐசென்கோட்டை ஆட்சிக்குக் கொண்டுவருவதைவிட நெதன்யாகுவை ஆட்சியில் இருந்து வெளியேற்றுவதே அரபுக் கட்சிகளின் இந்த முடிவுக்குப் பின்னால் உள்ள முக்கிய நோக்கமாகும்.
ஐசென்கோட் பிரதமராக வேண்டும் என்பதோ, அரபுக் கட்சிகள் தாமே அரசாங்கத்தில் இடம்பெற வேண்டும் என்பதோ அவர்களின் முதன்மையான நோக்கம் அல்ல என அவர் கூறுகிறார்.
நெதன்யாகு மீண்டும் பிரதமராகிவிடக் கூடாது என்பதே அவர்களின் முதல் குறிக்கோள் என்கிறார் அவர்."பாலத்தீனம், காஸா, மேற்குக் கரை, ஹமாஸ் போன்ற விவகாரங்களில் நெதன்யாகுவுக்கும் ஐசென்கோட்டுக்கும் இடையே பெரிய கொள்கை வேறுபாடு இல்லை என்பது அரபுக் கட்சிகளுக்குத் தெரியும். எனவே, ஐசென்கோட்டுக்கு ஆதரவு அளிப்பது அவரது கொள்கைகளுக்கு ஆதரவு அளிப்பதாகாது. காஸாவில் நடந்த சம்பவங்களுக்கும், பாலத்தீன மக்களிடம் நெதன்யாகு அரசு நடந்துகொண்ட விதத்துக்கும் பிறகு, அவரை ஆட்சியில் இருந்து வெளியேற்றுவதையே அரபு அரசியல் கட்சிகள் முன்னுரிமையாகக் கருதுகின்றன" என்றார் அவர்.
தங்கள் வாக்காளர்கள் ஏற்றுக்கொள்ளாத கொள்கைகளைக் கொண்ட அரசாங்கத்தில் தாங்களும் இடம்பெறுவதை இஸ்ரேலின் அரபுக் கட்சிகள் விரும்பவில்லை. அவ்வாறு செய்வது தங்களது அரசியல் ஆதரவுத் தளத்துடனும், தங்களுக்கு வாக்களித்த மக்களின் நம்பிக்கையுடனும் சமரசம் செய்துகொள்வதற்குச் சமமாக இருக்கும் என்கிறார் சித்திக்கி.
அரபு மக்களின் உள்ளூர் பிரச்னைகளும் முக்கியம்
மிச்சிகன் மாகாணப் பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வுகள் துறையின் ஓய்வுபெற்ற பேராசிரியர் முகமது அயூப், நெதன்யாகு அரசாங்கத்தில் இதாமர் பென்-க்விர், பெசலெல் ஸ்மோட்ரிச் போன்ற வலதுசாரித் தலைவர்கள் வகிக்கும் பங்கைக் கருத்தில் கொண்டு, அரசு மாறினால் இஸ்ரேலின் அரபு குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்குச் சிறந்த அரசியல் சூழல் உருவாகும் என அரபுக் கட்சிகள் கருதுவதாகக் கூறுகிறார்.
முகமது அயூப் தனது வலைப்பதிவில், "அரபுக் கட்சிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்கள் சமூகத்தைச் சேர்ந்த மக்களின் உள்ளூர் மற்றும் பொருளாதாரப் பிரச்னைகளையும் அரசியல் செயல்திட்டத்தில் இடம்பெறச் செய்ய விரும்புகின்றன. அரபு மக்கள் அதிகம் வசிக்கும் நகரங்கள் மற்றும் சிறு நகரங்களில் நடைபெறும் திட்டமிட்ட குற்றங்களைத் தடுக்கப் போதிய நிதி ஒதுக்கீட்டுடன் கூடிய திட்டங்களைச் செயல்படுத்துவதும் இதில் அடங்கும்" என்று எழுதியுள்ளார்.
''மேலும், தங்கள் பகுதிகளில் நிலவும் வீடுகள் பற்றாக்குறையைப் போக்கவும், புதிய வீடுகளைக் கட்டுவதற்கான அரசு ஒப்புதல் பெறும் நடைமுறையை எளிதாக்கவும் அரபுக் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. அனுமதியின்றிக் கட்டப்பட்ட வீடுகளை முறைப்படுத்தவும், வீடுகளை இடிக்கும் நடவடிக்கைகளை நிறுத்தவும் அவர்கள் கோருகின்றனர்.'' என குறிப்பிட்டுள்ளார்.
''அத்துடன், இளம் தம்பதிகள் வீடுகளைக் கட்டிக்கொள்ள நிலம் வழங்க வேண்டும் என்றும், இதுவரை அதிகாரப்பூர்வ அங்கீகாரம் பெறாத பெடோயின் சமூகத்தினரின் கிராமங்களுக்கு அரசு அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு, கல்வி, உள்ளாட்சி அமைப்புகளுக்குப் போதிய வளங்களை வழங்குதல் ஆகியவற்றுடன் குடிமை மற்றும் தேசிய உரிமைகள் தொடர்பான விவகாரங்களும் அவர்களின் செயல்திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.''
இருப்பினும், இந்தக் கோரிக்கைகள் அனைத்தும் தற்போது சாத்தியமான கூட்டணி அரசாங்கத்துடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தையில் முன்வைக்கப்பட்டுள்ள நிபந்தனைகள்தான். அவற்றை ஏற்றுக்கொள்வதாகவோ, செயல்படுத்துவதாகவோ ஐசென்கோட் எந்த உறுதியும் அளிக்கவில்லை.
மத்திய கிழக்கு விவகார நிபுணர் கமர் ஆகாவும் அரபுக் கட்சிகளின் இந்த முடிவை, அரசியல் சூழ்நிலையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சியாகவே பார்க்கிறார்.
பிபிசியிடம் பேசிய அவர், நெதன்யாகு அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் அரபு அரசியல் கட்சிகள் ஓரங்கட்டப்பட்டதாகக் கூறுகிறார்.
எனவே, அரசு மாறினால் தங்களுக்கான அரசியல் வாய்ப்புகள் உருவாகலாம் என்று அவை கருதியதாக அவர் தெரிவிக்கிறார்.
கமர் ஆகா கூறுகையில், "அரபுக் கட்சிகள் தங்களது அரசியல் பலத்தையும் வெளிப்படுத்தியுள்ளன. இஸ்ரேலின் அரசியலில் சுமார் 20 சதவீத மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரபு சமூகத்தைப் புறக்கணிக்க முடியாது என்பதை அவை தெளிவுபடுத்தியுள்ளன. ஐசென்கோட்டின் அரசாங்கம் தங்களது ஆதரவைச் சார்ந்திருக்கும் என்று அரபுக் கட்சிகள் நம்புகின்றன. இதனால், தங்கள் சமூகத்தின் உள்ளூர் மற்றும் பொருளாதாரப் பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்க வாய்ப்புள்ளதாக அவை கருதுகின்றன" என்றார்.
அரபுக் கட்சிகளின் ஆதரவுக்காக ஐசென்கோட் தனது கொள்கைகளை மாற்றுவாரா?
அரபுக் கட்சிகளின் ஆதரவு இருந்தபோதிலும், ஐசென்கோட் தனது கொள்கைகளை மாற்றிக்கொள்வது எளிதானதாக இருக்காது. இதற்கு முக்கியக் காரணங்கள் இஸ்ரேலின் கூட்டணி அரசியல் முறையும், வலதுசாரிக் கட்சிகளின் செல்வாக்குமாகும்.
இஸ்ரேலில் அரசாங்கங்கள் பெரும்பாலும் சிறிய வலதுசாரிக் கட்சிகளின் ஆதரவைச் சார்ந்தே அமைகின்றன. அவற்றின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், அவை ஆதரவைத் திரும்பப் பெற்றுக்கொள்கின்றன. இதனால் அரசாங்கம் கவிழும் நிலை ஏற்படுகிறது.
மறுபுறம், அரசாங்கத்தில் அரபுக் கட்சிகள் இடம்பெறுவதை யூத வாக்காளர்களில் கணிசமானவர்கள் எதிர்ப்பதும் ஐசென்கோட்டுக்கு ஒரு சவாலாக உள்ளது. இத்தகைய சூழலில், அரபுக் கட்சிகளுக்கு வெளிப்படையாக ஆதரவு அளித்தால், மிதவாத மற்றும் வலதுசாரி வாக்காளர்களின் ஆதரவைத் தக்கவைத்துக்கொள்வது அவருக்குக் கடினமாகலாம்.
இதன் காரணமாகவே, அரபுக் கட்சிகளின் ஆதரவு தொடர்பாக ஐசென்கோட் இதுவரை தெளிவான நிலைப்பாட்டை எடுக்கவில்லை.
"புதிய அரசாங்கம் அமைந்தாலும், அதன் நிலைத்தன்மை குறித்த கேள்விகள் தொடர்ந்து இருக்கும். இஸ்ரேலிய அரசியலில் கூட்டணிகள் உடைவதும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணி மாறுவதும் வழக்கத்திற்கு மாறானவை அல்ல. வெவ்வேறு கட்சிகளுக்கு இடையிலான கொள்கை வேறுபாடுகள் அரசாங்கத்துக்குச் சவாலாக அமையலாம்" என்று கமர் ஆகா கூறுகிறார்.
ஃபஸ்ருர் ரஹ்மான் சித்திக்கியின் கருத்துப்படி, இஸ்ரேலின் அரசியல் நீண்டகாலமாகவே நிலையற்றதாக இருந்து வருகிறது. எனவே, எந்தவொரு கூட்டணி அரசும் நீண்ட காலம் நீடிக்கும் என்று உறுதியளிப்பது கடினம்.
எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் மிக முக்கியமான விவகாரமாக இப்போதைக்கு நெதன்யாகுவை ஆட்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்பதே நோக்கமாகவே இருப்பதாக அவர் கூறுகிறார்.
இதைத் தவிர, பாதுகாப்பு மற்றும் போர் தொடர்பான பிரச்னைகளுக்குப் பதிலாக, விலைவாசி உயர்வு, கல்வி, சுகாதாரம், சமூகப் பாதுகாப்பு போன்ற அன்றாடப் பிரச்னைகளில் தொடர்ந்து கவனம் செலுத்த இஸ்ரேல் குடிமக்கள் விரும்புகின்றனர்.
சித்திக்கியின் கருத்துப்படி, அரபுக் கட்சிகளின் ஆதரவுடன் அமையும் அரசு, குறைந்தபட்சம் சில காலத்துக்காவது அரசியல் மற்றும் சமூக அளவில் நிம்மதியை அளிக்கக்கூடிய மாற்றாகப் பார்க்கப்படுகிறது.
இருப்பினும், இதனால் இஸ்ரேலின் பாலத்தீனக் கொள்கையில் பெரிய மாற்றங்கள் ஏற்படும் என்று இப்போதைக்கு எதிர்பார்ப்பது கடினம்.
-
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!