தமிழக அரசியலில், பா.ஜ.க எதிர்ப்பு கட்சிகளுடன் கைகோத்து நின்றிருந்த காங்கிரஸ், பா.ஜ.க எதிர்ப்பில் தீவிரம் காட்டத் தயங்கும் த.வெ.க-வுக்கு அண்மைக்காலமாக அரணாக நின்றுவருவது காங்கிரஸ் மூத்த தலைவர்களை முகம் சுளிக்க வைத்திருக்கிறது.
முதல்வர் விஜய் பிரதமர் மோடியைக் கண்டிக்கத் தயங்கிடும் நிலையில், விஜய்யை ராகுல் காந்தி தொடர்ந்து அரவணைப்பது வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது!
பா.ஜ.க-வை ஆட்சி அதிகாரங்களிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்ற ஒற்றை நோக்கில்தான் `இந்தியா’ கூட்டணி என்ற அத்தியாயத்தையே தொடங்கியது
அகில இந்திய காங்கிரஸ் கட்சி. உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சி, மேற்கு வங்கத்தில் மம்தா, டெல்லியில் ஆம் ஆத்மி, தேசிய அளவில் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாட்டில் தி.மு.க என 2024 நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொண்டது. `இந்தியா’ கூட்டணி ஒருங்கிணைந்ததன் விளைவாகவே, மெஜாரிட்டி இல்லாத ஓர் ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கிறது பா.ஜ.க.
இந்தச் சூழலில், `இந்தியா’ கூட்டணியை மேலும் வலுப்படுத்தவேண்டிய காங்கிரஸ், பா.ஜ.க-வைக் கூர்மையாக எதிர்க்கும் தி.மு.க கூட்டணியைவிட்டு வெளியேறியதும், பா.ஜ.க-வுடன் சமரசப் போக்கை மேற்கொள்ளும் த.வெ.க-வின் கரத்தைப் பற்றியிருப்பதும்தான் ஹைலைட்.
காங்கிரஸ் கொள்கைக்கு நேர்மாறான விவகாரங்களை த.வெ.க கையிலெடுத்து வரும்போதும் முதல்வர் விஜய்யை ராகுல் காந்தி இறுகப் பற்றிக்கொள்வதால் குழம்பிப் போயிருக்கிறார்கள் காங்கிரஸ் மூத்த தலைவர்கள்.
நம்மிடம் பேசிய காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் “த.வெ.க ஆட்சிக்குப் பெரும்பான்மை கிடைக்காதபோது முதல் ஆளாக ஆதரவளித்த கட்சி காங்கிரஸ். கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சித் தலைவர்களிடம் டெல்லி புள்ளிகள் பேசித்தான் ஆதரவளிக்க வைத்தோம்.
ஆனால், ஆட்சியமைக்க உறுதியாக இருந்த எங்களிடமே வம்பிழுக்கத் தொடங்கியது த.வெ.க அரசு.
>காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைப் பிரதமராக்க நாங்கள் மல்லுக்கட்டும் நிலையில், `எங்கள் தளபதி விஜய்தான் அடுத்த பிரதமர்’ என்று பேசத் தொடங்கினார்கள், அமைச்சர்களும் த.வெ.க சீனியர்களும்.
இன்றளவிலும் முதல்வர் விஜய்யின் ஆட்சியை மாஸாகக் காட்டி வடமாநிலங்களில் பரவிவரும் ரீல்ஸுகளும், அதற்கேற்ப அமைச்சர்கள் பேசுவதும் எங்கள் கட்சியினரை டென்ஷனாக்கி யிருக்கின்றன.
ஒவ்வொரு காங்கிரஸ் நிர்வாகிகளிடமும் சில உள்ளுக்குள் சந்தேகங்கள் ஓடிக்கொண்டுதான் இருக்கின்றன.
ஒன்று, ‘பா.ஜ.க-வை ஆட்சி அதிகாரத்திலிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் த.வெ.க-வுக்கு இருக்கிறதா, இல்லையா?’,
இரண்டாவது, `விஜய்யை பிரதமராக்க வேண்டும் என த.வெ.க-வினர் விரும்புகிறார்களா?’
த.வெ.க-வின் செயல்பாடுகளிலிருந்து முதல் கேள்விக்கான விடையும், ‘பிரதமர் விஜய்’ என்ற கூற்றிலிருந்து இரண்டாவது கேள்விக்கான பதிலும் கிடைத்துவிட்ட நிலையிலும் காங்கிரஸ், த.வெ.க-வுடன் கூட்டணி வைத்திருப்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது” என்றனர்.
நம்மிடம் பேசிய விவரமறிந்தவர்கள் சிலர், “பிரதமர் வேட்பாளர் விவகாரம் என்றில்லை, பா.ஜ.க எதிர்ப்பில் த.வெ.க அரசு ரொம்பவே இணங்கிச் செல்வதுதான் காங்கிரஸின் பிரச்னை.
இந்திய தேர்தல் ஆணையம் முன்னெடுத்த ‘வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கை’ குறித்து `இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் ஆரம்பம் முதலே விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.
அதில் தேசிய அளவில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியின் எஸ்.ஐ.ஆர் எதிர்ப்பு மிகக் கூர்மையானது எனலாம். ஆனால் த.வெ.க-வின் எஸ்.ஐ.ஆர் எதிர்ப்பு மிகுந்த போலித்தனமானது எனலாம்.
இந்த விவகாரத்துக்காக டெல்லியில் போராடிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கைதானார். ஆனால், முதல்வர் விஜய் வாய் திறந்து கண்டனம்கூடத் தெரிவிக்கவில்லை.
த.வெ.க-வின் அதிகாரபூர்வ எக்ஸ் வளைதளப் பக்கத்தில், சின்னதாக ஒரு கண்டனப் பதிவைப் போட்டதோடு அமைதியாகிவிட்டனர்.
அது மட்டுமல்ல, மத்திய - மாநில உறவுகளை ஆராயும் குரியன் ஜோசப் குழுவை பா.ஜ.க-வுக்கு பயந்துதான் த.வெ.க கலைத்திருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.
தமிழக சட்டமன்றம் காணாத ஒரு சம்பவத்தை த.வெ.க அரசு அரங்கேற்றியது. சட்டமன்றத்தில் அமைச்சர் வன்னி அரசு பிரதமர் மோடியையும் அமித் ஷாவையும் கண்டித்தார். உடனடியாக எழுந்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, அமைச்சர் வன்னி அரசின் பேச்சை அவைக்குறிப்பிலிருந்து நீக்கவிட வேண்டும் என வலியுறுத்தினார்.
அதன்படி அமைச்சர் வன்னி அரசின் பேச்சு அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்டது’’ என்றனர்..நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர்கள் சிலர், “இது பா.ஜ.க-வின் பரிபூரண ஆசியோடு நடக்கும் ஆட்சி. குதிரைப் பேரக் குற்றச்சாட்டில் சிக்கியும் நடவடிக்கை எடுக்காதது தொடங்கி சட்டமன்றத்தில் எழுதிக்கொடுத்ததை அப்படியே ஆளுநர் வாசித்தது வரை த.வெ.க-வின் மீது பா.ஜ.க காட்டிய அணுக்கமே அதற்கு சாட்சி, ‘பா.ஜ.க-வை எந்தவிதத்திலும் எதிர்த்துவிடக் கூடாது’ என்பதில் த.வெ.க மிகுந்த கவனத்தோடு இருக்கிறது...
‘மதச்சார்பற்ற சமூக நீதிதான் எங்களுடைய கொள்கை’ என்று பேசும் த.வெ.க., மதச்சார்புகொண்ட ‘வந்தே மாதரம்’ பாடலைக் கட்டாயமாக்கும் போது வாய் திறக்கவில்லை.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திலேயே தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டபோது, முதல்வர் விஜய்யிடமிருந்து மருந்துக்குக்கூட எதிர்ப்பு வரவில்லை.
கொளத்தூரிலேயே கொத்து பரோட்டா போட்டவர், ஆளுநரை ஆலு பரோட்டா போட்டிருக்க வேண்டாமா? மெட்ரோ பாலத்தின் மீது ஏறி போஸ் கொடுத்தவர், மதுரைக்கும் கோவைக்கும் மெட்ரோ நிராகரிக்கப்பட்டது குறித்து மூச்சுவிடவில்லையே...
100 நாள் வேலைத் திட்டத்தின் பெயரை மாற்றி, 40 விழுக்காடு நிதிச்சுமையை மாநில அரசின் மீது சுமத்தியிருக்கிறது மத்திய அரசு.
அண்ணாவின் படத்தைப் போட்டு, வாக்கு கேட்ட விஜய், அதற்குப் பொங்கியிருக்க வேண்டாமா... சி.பி.ஐ விசாரணை முடிந்த நாளில் தனது வாகனத்தின் மீதேறி விஜய் காட்டிய உற்சாகமும் உடல்மொழியும், ஓராண்டாகியும் வெளிவராத சி.பி.ஐ-யின் குற்றப்பத்திரிகையும் ஒத்திசையும் புள்ளி எது... பா.ஜ.க-வுக்கும் த.வெ.க-வுக்கும் பரஸ்பரப் புரிதலும், புரிந்துணர்வு ஒப்பந்தமும் இருக்கின்றன.
இத்தகைய அரசியலை முன்னெடுக்கும் த.வெ.க., பிரதமர் மோடியை வீழ்த்தும் போரில் பங்கேற்பது சந்தேகம்தான்” என்றனர்
காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலரிடம் இது குறித்து விசாரித்தோம். “த.வெ.க அரசின் பா.ஜ.க எதிர்ப்புக் கொள்கைகள் எங்களுக்கு மன வருத்தத்தைத் தருகின்றன.
உதாரணமாக, உயர் நீதிமன்ற உத்தரவையும் மீறி திருப்பரங்குன்றம் மலைமீது தீபம் ஏற்ற மறுத்தது தி.மு.க அரசு. தற்போது தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் அனுமதியளித்திருக்கிறது.
தீர்ப்பு வந்து 24 மணி நேரமான பிறகும்கூட ‘தீபம் ஏற்ற அனுமதிக்க மாட்டோம்’ என த.வெ.க அறிவிக்கத் தயங்குகிறது. எங்கள் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூரின் செயல்பாடுகள் எங்களுக்கு வருத்தம் அளிக்கின்றன.
அவர் அந்தப் பொறுப்பில் அமர முதல்வர் விஜய் சிபாரிசு செய்தார் என்பதற்காக, த.வெ.க செயல்பாடுகள் அனைத்தையுமே பாராட்டிவிடும் எண்ணத்திலேயே இருக்கிறார்.
கள்ளக்குறிச்சி த.வெ.க எம்.எல்.ஏ அருண் விக்னேஷ் மாவட்ட ஆட்சியருக்குப் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். ஒரு பாலியல் குற்றம் செய்தவரை `பாவம்’ என்கிறார் மாணிக்கம் தாகூர்.
இதெல்லாம் வெட்கக்கேடான செயல். நியாயப்படி, த.வெ.க-வின் பா.ஜ.க சமரசப் போக்கை மாணிக்கம் தாகூர் கண்டித்திருக்க வேண்டும்.
மைசூரில் நவம்பர் 13 அன்று பிரதமர் முன்னிலையிலேயே, `மேகதாதுவில் அணை கட்டுவதை யாராலும் தடுக்க முடியாது, ஒன்றிய அரசு இறுதி ஒப்புதல் வழங்க வேண்டும்’ என்று கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் பேசியதும், அதற்குப் பிரதமர் மௌனம் சாதித்ததும் தமிழ்நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
.கே.சிவக்குமாரும், முதல்வர் விஜய்யும் அம்மையார் சோனியா காந்தியின் நூல் வெளியீட்டு நிகழ்வில் பங்கேற்றனர். அந்த நிகழ்வு முடிந்ததும் ‘காவிரிப் பிரச்னையை பிரதமர் மோடி தீர்க்க வேண்டும்’ எனப் பேட்டி கொடுக்கிறார் மாணிக்கம் தாகூர். பதிலுக்கு ராகுல் காந்தி மெளனமாக இருப்பது ஏன் என்ற கேள்வியை எழுப்புகிறது தி.மு.க.
த.வெ.க-வுடன் கூட்டணி வைத்ததிலிருந்து காங்கிரஸ் கட்சியின் பெயரும் டேமேஜாகிக்கொண்டிருக்கிறது
எங்கள் தலைவர் ராகுல் காந்தியும் சோனியா காந்தியின் நூல் வெளியிட்டு விழாவில் முதல்வர் விஜய்க்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்.
ஆனால் காங்கிரஸுக்கு விஜய் முக்கியத்துவம் கொடுக்கிறாரா என்பதை மறுபரீசிலனை செய்ய வேண்டும்” என்றனர்.
த.வெ.க-வின் நகர்வுகளைப் புரிந்து கொண்ட கம்யூனிஸ்ட்டுகள் ஆளும் தரப்பிடமிருந்து விலகிச் செல்ல ஆரம்பித்துவிட்டனர். ஆனால், அனைத்தையும் புரிந்துகொண்ட காங்கிரஸ் இன்னும் உணரவில்லை!
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!