கனடாவின் விக்டோரியா நகரில், இந்தோ-பசுபிக் பிராந்திய நாடுகளின் இராணுவ தலைவர்கள் மாநாடு அண்மையில் இடம்பெற்றது.
பல்வேறு நாடுகளின் சார்பில், சேவையில் உள்ள இராணுவத் தலைமைத் தளபதிகள் அல்லது கூட்டுப் படைத் தளபதிகள் அல்லது பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானிகள் அந்த மாநாட்டில் பங்கேற்றிருந்தனர்.
ஆனால், இலங்கையின் சார்பில், தற்போது சேவையில் இல்லாத முன்னாள் விமானப்படை அதிகாரியான பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்த கலந்து கொண்டிருந்தார். அவர், அமெரிக்காவின் தேசிய காவல்படைத் தளபதி உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் இராணுவத் தலைவர்களுடன் பேச்சுக்களை நடத்தியிருந்தார். இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்புகளை வலுப்படுத்துவது, அவரது சந்திப்புகள், கலந்துரையாடல்களின் முக்கியமான நோக்கமாக இருந்தது.
நேட்டோ இராணுவக் குழுவின் தலைவரும், நேட்டோ உறுப்பு நாடுகளின் அரசியல் தலைமைக்கான மூத்த ஆலோசகருமான அட்மிரல் குயிசெப்பே காவோ டிராகோன் உள்ளிட்ட மூத்த நேட்டோ அதிகாரிகளுடன் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்த கலந்துரையாடியிருந்தார்.
இராணுவ பரிமாற்றம், தகவல் மற்றும் நிபுணத்துவப் பகிர்வு, மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் இணையவழித் திறன்களை உள்ளடக்கிய இராணுவ நவீனமயமாக்கல் ஆகியவை இதன்போது கலந்துரையாடப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு முன்னர் இலங்கை பல்வேறு நாடுகளுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பு பேச்சுக்களை நடத்தியிருக்கிறது. பாதுகாப்பு ஒத்துழைப்பு சார்ந்த புரிந்துணர்வு உடன்பாடுகளையும் கூட செய்திருக்கிறது.
அமெரிக்கா இந்தியா, சீனா போன்ற பல்வேறு நாடுகளுடன் பாதுகாப்பு சார்ந்த ஒத்துழைப்புகளை இலங்கை பேணி வருகிறது. ஆனால், நேட்டோ இராணுவக் குழுவின் தலைவரும் நேட்டோ உறுப்பு நாடுகளின் அரசியல் தலைமைக்கான மூத்த ஆலோசகருமான அட்மிரல் குயிசெப்பே காவோ டிராகோன் மற்றும் அதிகாரிகளுடன் இலங்கை நடத்தியிருக்கின்ற பேச்சு கவனத்துக்குரிய ஒன்றாக மாறியிருக்கிறது.
அதற்கு முக்கிய காரணம், நேட்டோ என்ற ஒரு இராணுவ கூட்டணியின் தலைவருடனான சந்திப்பு என்பதே ஆகும். இது சந்திப்பு என்பதற்கு அப்பால், இருதரப்பு உறவுகள், ஒத்துழைப்புக்களை வலுப்படுத்துவது
பற்றிய கலந்துரையாடல்களை உள்ளடக்கியதாக இருந்திருக்கிறது. நேட்டோ அமைப்பின் இராணுவ தலைவருடனான இந்த கலந்துரையாடல் பற்றிய தகவல்களை பாதுகாப்பு அமைச்சு சற்று தாமதமாகவே வெளிப்படுத்தியது.
ஆனால், அது ஊடகங்களிலும் சரி, அரசியல் பரப்பிலும் சரி அவ்வளவு பெரிய கவனத்தை ஈர்த்திருக்கவில்லை. 22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூல விவகாரம் நாமல் ராஜபக்ஷ கைது உள்ளிட்ட பல்வேறு பரபரப்பான அரசியல் நிகழ்வுகளின் பின்னணியில், இந்த சந்திப்பு மற்றும் பேச்சுக்கள் குறித்த விபரங்கள் ஊடகங்களின் கூடுதல் கவனத்தை பெறவும் இல்லை, அரசியல் கட்சிகளால் அது பற்றி அதிகம் கவனத்தில் கொள்ளப்படவும் இல்லை.
இதற்கு எதிர்வினையாற்றும் வகையில் அறிக்கையை வெளியிட்டது, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி மாத்திரமே. அந்த கட்சியின் பொதுச்செயலாளர் கலாநிதி ஜி.வீரசிங்க ஒரு நீண்ட அறிக்கையில் இந்த பேச்சுக்கள் மற்றும் ஒத்துழைப்பு தொடர்பான பலத்த விமர்சனங்களை முன் வைத்திருந்ததுடன் அரசாங்கத்திடம் கேள்விகளையும் எழுப்பியிருந்தார்.
ஏனென்றால், இது அடிப்படையில் இலங்கையின் அணிசேரா கொள்கையை கேள்விக்கு உட்படுத்தக் கூடிய ஒரு விடயமாக இருந்தது. சிறிமாவோ பண்டாரநாயக்கவின் காலத்தில் இருந்து இலங்கை, அணிசோரா கொள்கையை பின்பற்றி வருகிறது.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு, எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் நாசர், இந்தோனேசியாவின் தலைவர் சுகார்னோ, யூகோஸ்லாவியாவின் மார்சல் டிட்டோ போன்ற தலைவர்களுடன் இணைந்து அணிசேரா அமைப்பை உருவாக்குவதில் முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்காவும் குறிப்பிடத்தக்க பங்காற்றியிருந்தார்.
உலகம் நேட்டோ என்றும் வோர்சோ என்றும் இரண்டாக பிளவுபட்டு நின்று பனிப் போரில் ஈடுபட்டிருந்த சூழலில்இ இந்த இரண்டு முகாம்களுக்குள்ளேயும் சிக்கிக் கொள்ளாமல், நடுநிலையான வெளிவிவகாரக் கொள்கையின் ஊடாக தங்களின் அரசியல் அணுகுமுறைகளை கொண்டு செல்வதே இந்த அணிசேரா கொள்கை ஆகும். இதனை இன்றுவரை பின்பற்றி வருவதாக இலங்கை அரசாங்கம் கூறுகிறது.
ஒவ்வொரு அரசாங்கமும் இதனை முறையாக பின்பற்றியதோ இல்லையோ, அதனை கைவிடவில்லை எனவும் தொடர்ந்து பின்பற்றுவதாகவும் கூறி வந்திருக்கின்றன.
பனிப்போர் முடிவுக்கு வந்த பின்னரும் கூட அணிசேரா கொள்கை பல நாடுகளுக்கு அவசியமானதாக இருந்தது.
ஏ
னென்றால் அமெரிக்கா-ரஷ்யா என்றிருந்த பனிப்போர் கால அதிகாரப்போட்டி, ஆயுதப் போட்டி, அதன் பின்னர் மெல்ல மெல்ல அமெரிக்க -சீன அதிகாரப் போட்டியாக, வர்த்தக போட்டியாக ஆயுதப் போட்டியாக மாறி இருக்கிறது.
இந்த சூழலில் மதில் மேல் பூனையாக இருந்து இருந்து கொள்வது பல நாடுகளுக்கு பாதுகாப்பானதாக காணப்பட்டது. அணிசேரா கொள்கையை பின்பற்றுவதன் மூலம் இலங்கை போன்ற நாடுகள், தங்களை நடுநிலை நாடுகளாக குறிப்பிட்டு வந்தன.இதனூடாக இரண்டு நாடுகளையும் பகைத்துக் கொள்ளாத வகையில்இ நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தன. இப்போது இலங்கை அரசாங்கம் அந்த நடுநிலைப் போக்கில் அல்லது அணிசேரா கொள்கையில் உறுதியாக இருக்கிறதா என்ற கேள்வி அவ்வப்போது எழுப்பப்படுகிறது.
ஏனென்றால்இ ஆட்சிக்கு வரும்போதுஇ மார்க்சிஸ்ட் அரசாங்கம் என அடையாளப்படுத்தப்பட்டிருந்த போதும்இ தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அமெரிக்கஇ இந்திய சார்பு நிலைப்பாட்டுக்குள்ளேயே பெரும்பாலும் தன்னை முன்னகர்த்தி வந்திருக்கிறது.
இது ஏற்கெனவே இலங்கையின் அணிசேரா கொள்கை நிலைப்பாடு உண்மையானதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த சூழலில் தான்,அமெரிக்காவின் தலைமையிலான வட அத்திலாந்தின் ஒப்பந்த நாடுகள் என சொல்லப்படுகின்ற நேட்டோ அமைப்பின் இராணுவத் தலைவருடன் இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் பேச்சு நடத்தி இருக்கிறார்.
நேட்டோ என்பது ஓர் இராணுவக் கூட்டணி. அது அரசியல் கூட்டணி அல்ல வர்த்தக கூட்டணியும் அல்ல.
அமெரிக்காவே அதற்குத் தலைமை தாங்குகிறது. அமெரிக்கா தலைமை தாங்குகின்ற அல்லது அங்கம் வகிக்கின்ற பல அரசியல் கூட்டணிகள் இருக்கின்றனஇ வர்த்தக கூட்டணிகள் இருக்கின்றன. அவற்றிலிருந்து புறம்பான ஒன்றாகவே நேட்டோ கூட்டணி இருக்கிறது.
இது முற்றுமுழுதாக இராணுவ ரீதியான பயிற்சிகள் ஒத்துழைப்புகள் போர் நடவடிக்கைகள் போன்றவற்றிலேயே கவனம் செலுத்துகிறது. நேட்டோ நாடுகளில் ஒன்றின் மீது மேற்கொள்ளப்படக் கூடிய இன்னொரு நாட்டின் படையெடுப்பைஇ இந்த அமைப்பில் உள்ள அங்கத்துவ நாடுகள் தங்கள் மீதான ஆக்கிரமிப்பாகவே கருதும். அந்தளவுக்கு வலுவான இராணுவக் கூட்டணி இது.
ஐரோப்பிய நாடுகள்இ வட அமெரிக்க நாடுகள் போன்றவற்றை பெரும்பாலும் உள்ளடக்கிய இந்த நேட்டோ கூட்டணி திடீரென இலங்கையின் மீது கவனம் செலுத்தி இருப்பதும்இ இலங்கையின் கவனம் அதன் மீது திரும்பி இருப்பதும்இ சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடிய விடயங்கள் அல்ல. இந்திய பெருங்கடலில் இலங்கை கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாடு.
இதற்கென இருக்கின்ற பூகோள அரசியல் முக்கியத்துவம்இ இந்த பிராந்தியத்தில் இருக்கின்ற மற்றைய நாடுகளுடன் ஒப்பிடுகையில்இ இலங்கையை ஒரு படி மேலே உயர் நிலையில் வைத்திருக்கிறது.
இதனால் தான், இலங்கையை தங்கள் கைக்குள் வைத்துக் கொள்வதற்காக அமெரிக்கா, இந்தியா, சீனா, பாகிஸ்தான், ஜப்பான் என்று பல நாடுகள் போட்டி போடுகின்ற சூழல் இருக்கிறது.
அமெரிக்காவின் தலைமையிலான நேட்டோ கூட்டணி முழுமையாக இராணுவ நோக்கில் இயங்குகின்ற சூழலில், அதனுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்த இலங்கை அரசாங்கம் முற்படுவது நேட்டோ கூட்டணியுடன் இணைந்து செயற்படுவதற்கான ஒரு முயற்சிய என்ற கேள்வியை எழுப்ப வைத்திருக்கிறது.
இந்த விடயம் தொடர்பாக அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் என இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
அதற்கு இதுவரை அரசாங்கத்திடம் இருந்து எந்த பதிலும் வந்ததாக தெரியவில்லை. அரசாங்கம் இதற்கு பதிலளிக்குமா என்பதும் சந்தேகம் தான்.
ஆனால், நேட்டோ கூட்டணியுடனான ஒத்துழைப்புக்களை இலங்கை வலுப்படுத்திக் கொள்ள முற்படுவதானது, அது புதியதொரு பாதையை நோக்கிய பயணத்தை ஆரம்பித்துள்ளதா அல்லது ஆரம்பிக்க முற்படுகிறதா என்ற கேள்விகளை எழுப்ப வைத்திருக்கிறது.இவ்வாறான ஒரு சூழலுக்குள் இலங்கை சிக்கிக் கொள்ளுமானால் அதன் அணி சேரா கொள்கைதான் முதலில் பலிக்கடா ஆக்கப்படும். இப்போது கூட அது பற்றிய சந்தேகங்கள் தான் எழுப்பப்படுகிறது.
ஆனால், அணிசேரா கொள்கையில் இருந்து இலங்கை விலகிக் கொண்டாலும் அல்லது விலகிக் கொள்வதற்கு முயற்சித்தாலும், அதற்கு இருக்கின்ற பாதுகாப்பு கவசம் உடைந்து போகும்.
எதிர்காலத்தில் அணிசேரா கொள்கையை வைத்து பல நாடுகளின் எதிர்ப்புக்களை அல்லது கோபங்களை சமாளிக்க முடியாத நிலை இலங்கைக்கு ஏற்படும். அத்தகைய ஒரு வேண்டாத வினையை இலங்கை ஆட்சியாளர்கள் தேடிக் கொள்வார்கள் என்று நம்ப முடியவில்லை.
ஆனால் நேட்டோடனான இலங்கையின் உறவுகள், ஒத்துழைப்புக்கள் என்பது எதிர்காலத்தில் இந்தியப் பெருங்கடலில் இலங்கையை மையப்படுத்திய பூகோள அரசியல் நகர்வுகளில், கூடுதல் அதிர்வுகளை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.
ஹரிகரன்
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!