news@ilakkiyainfo.com

பிரிவுகள்

நேருக்கு நேர் மோதிக்கொண்ட இரு அதிவேக ரயில்கள் ; இந்த ஆண்டில் ஸ்பெயினில் 2வது கோர விபத்து ; உயிரிழந்தோர் எண்ணிக்கை 68ஆக அதிகரிப்பு ; 80க்கு மேற்பட்டோர் படுகாயம்

29 Oct, 2026
ஸ்பெனில் நேற்று புதன்கிழமை (28) இரு அதிவேக ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 68ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் இந்த விபத்தில் குறைந்தது 80 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் இவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

டொலெடோ மாகாணத்தில் உர்டா மற்றும் லாஸ் யெபெனெஸ் நகரங்களுக்கு இடைப்பட்ட ரயில் மார்க்கத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

இவ்விபத்து தொடர்பில் அந்நாட்டின் பிராந்திய அரசின் ஊடகப் பேச்சாளர் எஸ்தர் படில்லா கூறுகையில், குறித்த ஒரு பகுதியில், தண்டவாளத்தில் ரயிலொன்று தரித்து நின்றபோது, அதே தண்டவாளத்தில் எதிர்த்திசையிலிருந்து வந்துகொண்டிருந்த ரயில் நிறுத்தப்பட்டிருந்த ரயில் மீது நேருக்கு நேராக மோதியுள்ளது என்கிறார்.

ஸ்பெயின் நாட்டின் தலைநகரான மெட்ரிட்டிலிருந்து செவில்லி நோக்கி சென்றுகொண்டிருந்த அரசுக்கு சொந்தமான  ரயிலே, வேகமாக வந்து நிறுத்தப்பட்டிருந்த தனியார் ரயில் மீது மோதியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ரயில்கள் இரண்டும் தடம் புரண்டதோடு இரண்டு ரயில் பெட்டிகள் தூக்கி வீசப்பட்டுள்ளன.

அரசு ரயிலில் 397 பயணிகளும் தனியார் ரயிலில் 147 பயணிகளும் இருந்த நிலையில், விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களில் இரண்டு ரயில்களிலும் இருந்த பயணிகள் அடங்குவர். 

இதனையடுத்து, மாட்ரிட், கியூடட், அண்டலூசியா நகரங்களுக்கு இடையிலான ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கடந்த ஜனவரியில் ஸ்பெயினில் இதே போன்று இரு ரயில் மோதி விபத்து இடம்பெற்றதையடுத்து, தற்போது அங்கு மீண்டும் ஒரு கோர ரயில் விபத்து ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!