உலக அரசியல் அரங்கம் மீண்டும் ஒரு கொந்தளிப்பான காலகட்டத்துக்குள் நுழைகிறது. அணுஆயுதப் போட்டிகள், வல்லரசுகளுக்கிடையேயான மேலாதிக்கப் போராட்டங்கள் மற்றும் மாறிவரும் சர்வதேச பாதுகாப்பு அமைப்புகள் ஆகியவை உலக அமைதியை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளன.
இத்தகைய சூழலில், அடுத்த மாதம் சீனாவின் ஷென்சென் நகரில் நடைபெறவுள்ள பொருளாதார மாநாட்டின்போது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் ஆகியோருடன் ஒரு முத்தரப்பு உச்சிமாநாட்டை நடத்த விருப்பம் தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்பின் பின்னணியில் நல்ல நோக்கங்கள் இருக்கலாம் அல்லது மோசமான கணக்கீடுகள் இருக்கலாம். மிக மோசமான சூழ்நிலையைக் கருதினால், டிரம்பும் ஷி ஜின்பிங்கும் புடினின் உக்ரைன் ஆக்கிரமிப்பை அல்லது அடிமைப்படுத்தலை அங்கீகரிக்கக்கூடும்.
ஆனால், மிகச்சிறந்த சூழ்நிலையை யோசித்தால், அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய மூன்று வல்லரசுகளுக்கும் இடையே நிலவவேண்டிய அணுஆயுதக் குறைப்புக்கான ஒரு நீண்டகால, அவசியமான பேச்சுவார்த்தைக்கான கதவை இது திறக்கக்கூடும்.
உக்ரைன் விவகாரத்தை விட அணு ஆயுதக் குறைப்பு மற்றும் அது தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்கே தான் முன்னுரிமை அளிப்பதாக டிரம்ப் கூறுகிறார்.
அவரது இந்த வார்த்தைகளை நாம் உண்மை என்று எடுத்துக்கொண்டால், இத்தகைய பேச்சுவார்த்தைகள் எவ்வாறு அமையக்கூடும் மற்றும் 1970களில் மேற்கு ஜெர்மனியின் தலைவராக இருந்த ஹெல்முட் ஷ்மிட் வகுத்த மூலோபாய பாதையிலிருந்து டிரம்ப் என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ள முடியும் என்பதை விரிவாக ஆராயவேண்டும்.
அணுஆயுதக் கட்டுப்பாட்டு பேச்சுவார்த்தைகள் இன்று மிக அவசியமான ஒன்றாக மாறியுள்ளன. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அணு ஆயுதக் கட்டுப்பாட்டு மையங்களுக்குள் நுழைவதால் ஏற்படும் புதிய ஆபத்துகளைத் தவிர்த்துப் பார்த்தாலும், மூன்று முக்கிய காரணங்கள் இத்தகைய முத்தரப்புப் பேச்சுவார்த்தையை அவசர அவசியமாக்குகின்றன.

முதலாவதாக, அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே இருந்த கடைசி அணுஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தின் காலம் முடிவடைந்ததிலிருந்து,
உலகில் உள்ள ஒன்பது அணுஆயுத நாடுகளையும் கட்டுப்படுத்த எந்தவொரு உத்தியோகபூர்வ வரம்புகளோ அல்லது சட்டப்பூர்வ ஒப்பந்தங்களோ தற்சமயம் இல்லை.
இரண்டாவதாக, பனிப்போர் காலத்தில் அணுஆயுதக் கட்டுப்பாடு என்பது அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய இரு வல்லரசுகளுக்கு இடையிலான ஒப்பீட்டளவில் எளிமையான விவகாரமாக இருந்தது.
இன்றளவும் உலகில் உள்ள மொத்த அணுஆயுதங்களில் பெரும் பகுதியை இந்த இரு நாடுகளுமே வைத்துள்ளன. ஆனால், இன்று சீனா அதிவேகமாக அணுஆயுதத் தயாரிப்பில் அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் ஈடுகொடுத்து முன்னேறி வருகிறது.
எதிர்காலத்தில் அமெரிக்காவிற்கு எதிராக மொஸ்கோவும் பீஜிங்கும் ஒன்றிணையக்கூடும் என்ற அச்சம் வொஷிங்டனுக்கு எழுந்துள்ளது.
மூன்றாவதாக, இன்றைய ஆயுதப் போட்டி என்பது வெறும் அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை மட்டும் பற்றியது அல்ல. மாறாக, போர்முனைகளின் வகைகள், அவற்றைக் கொண்டு செல்லும் ஏவுகணைகள் மற்றும் போர்த் திட்டங்கள் பற்றியதாகும்.யுத்த வரலாறு படி
சீனாவும் ரஷ்யாவும் தந்திரோபாய அணு ஆயுதங்களில் அதிக முதலீடு செய்து வருகின்றன. இவை எதிரி நாட்டின் பிரதான நிலப்பரப்பை முற்றிலும் அழிப்பதற்காக வடிவமைக்கப்பட்டவை அல்ல.
மாறாக, தாய்வான் நீரிணை அல்லது கிழக்கு ஐரோப்பா போன்ற உள்ளூர் போர்முனைகளில் வரம்பிற்குட்பட்ட தாக்குதல்களை நடத்தி வெற்றி பெறுவதற்காக உருவாக்கப்பட்டவை.
தந்திரோபாய அணுஆயுதங்கள் மிகவும் ஆபத்தானவையாகக் கருதப்படுகின்றன. ஏனெனில், இவை போரில் எளிதாகப் பயன்படுத்தக்கூடியவை போலத் தோற்றமளித்தாலும், இறுதியில் ஒட்டுமொத்த உலகப் பேரழிவிற்கு வழிவகுக்கும் கட்டுப்பாடற்ற போராக உருவெடுக்கக்கூடியவை.
இதனாலேயே, பனிப்போருக்குப் பிறகு அமெரிக்கா தனது பெரும்பாலான தந்திரோபாய அணு ஆயுதங்களை முடக்கியது. ஆனால், ரஷ்யாவோ தனது தந்திரோபாய அணுஆயுதக் குறைப்பை மிகக் குறைந்த அளவிலேயே செய்தது.
இன்று அமெரிக்காவை விட பத்து மடங்கு அதிகமான தந்திரோபாய அணு ஆயுதங்களை ரஷ்யா வைத்துள்ளது. உக்ரைன் போரில் இத்தகைய ஆயுதங்களைப் பயன்படுத்துவேன் என்று ஜனாதிபதி புடின் பல முறை பகிரங்கமாக அச்சுறுத்தியுள்ளார்.
மறுபுறம், தாய்வான் விவகாரத்தில் பிராந்திய மோதல் ஏற்பட்டால், அமெரிக்காவால் தன்னைப் பயமுறுத்தவோ அல்லது தோற்கடிக்கவோ முடியாது என்பதைக் காட்ட சீனாவும் தந்திரோபாய அணுஆயுதங்களை அதிகரித்து வருகிறது.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், டிரம்ப் நிர்வாகம் தனது சொந்த தந்திரோபாய அணுஆயுதங்களை மீண்டும் ஆசியப் பகுதியில் களமிறக்குவது குறித்து ஆலோசித்து வருகிறது.

ஒரு புதிய ஆயுதப் போட்டி தொடங்கியுள்ளது. டிரம்ப் இதைப் பற்றிப் பேச ஷி ஜின்பிங்கையும் புடினையும் தொடர்ந்து அழைத்த போதிலும், சீனா இதில் பங்கேற்க மறுத்துவிட்டது. இந்தக் கட்டத்தில் சீனா இத்தகைய முத்தரப்பு அணுஆயுதக் குறைப்புப் பேச்சுவார்த்தையில் சேருவது நியாயமானதோ, பகுத்தறிவானதோ அல்லது யதார்த்தமானதோ அல்ல என்று சீனாவின் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த முட்டுக்கட்டையானது வொஷிங்டனில் உள்ள அனுபவமிக்க கொள்கை வகுப்பாளர்களை மாற்று வழிகளை யோசிக்க வைத்துள்ளது. அவர்களில் ஒருவர் ஜோயல் விட் ஆவார். அமெரிக்க வெளியுறவுத்துறையின் மூத்த அதிகாரியான இவர், 1990கள் முதல் வடகொரியாவின் அணுஆயுதத் திட்டத்தைத் தடுப்பதற்காக அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்திய அனுபவம் கொண்டவர்.
சீனாவைக் குறிவைத்து தந்திரோபாய அணுஆயுதங்களை நாம் மீண்டும் களமிறக்குவது தவிர்க்க முடியாதது போலத் தெரிகிறது என்று விட் குறிப்பிடுகிறார். தனிப்பட்ட முறையில் இத்தகைய நடவடிக்கை பேரழிவை அழைப்பதாகும், ஏனெனில் இந்த ஆயுதங்கள் மிகவும் ஆபத்தானவை. ஆனால், நாம் இதனை ஒரு அணுஆயுதக் கட்டுப்பாட்டு முன்மொழிவோடு இணைத்தால் இத்திட்டம் வெற்றிபெற வாய்ப்புள்ளது என்கிறார் அவர்.
1979இன் இரட்டைப் பாதை மூலோபாயமும்
டிரம்ப் முன் உள்ள பாதையும்

ஹெல்முட் ஷ்மிட் (Helmut Schmidt,)
இதற்கான ஒரு சிறந்த முன்மாதிரி, 1979ஆம் ஆண்டில் நேட்டோ அமைப்பால் எடுக்கப்பட்ட மிகவும் சர்ச்சைக்குரிய, ஆனால் இறுதியில் வெற்றிகரமான இரட்டைப் பாதை முடிவாகும்.
இத்திட்டத்தின் முதன்மைச் சிந்தனையாளர் அன்றைய மேற்கு ஜெர்மனியின் அதிபர் ஹெல்முட் ஷ்மிட் ஆவார். இக்கொள்கையால் அவரது சொந்தக் கட்சியிலும் நாட்டிலும் ஐரோப்பிய கண்டத்திலும் அரசியல் ரீதியாகப் பலத்த எதிர்ப்புகளைச் சந்தித்தபோதிலும், அமைதிக்காகத் தான் ஆற்றிய மிகப்பெரிய பங்களிப்புகளில் ஒன்றாக ஷ்மிட் இதனைக் கருதினார்.
இன்று ஆசியாவில் சீனா தந்திரோபாய அணுஆயுதங்களை அதிகளவில் பயன்படுத்துவது போல, 1970களில் சோவியத் ஒன்றியம் ஐரோப்பாவை அச்சுறுத்தும் வகையில் நடுத்தர வரம்பு ஏவுகணைகளை நிறுத்தியது. இது ஐரோப்பிய நாடுகளுக்கு அமெரிக்கா மீதிருந்த நம்பிக்கையில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது.
எனவே, ஹெல்முட் ஷ்மிட் (Helmut Schmidt,) அமெரிக்காவையும் நேட்டோவையும் ஒரே நேரத்தில் இரண்டு காரியங்களைச் செய்ய வற்புறுத்தினார்.
முதலாவதாக, வொஷிங்டன் தனது சொந்த தந்திரோபாய அணுஆயுதங்களை மேற்கு ஐரோப்பாவிற்கு அனுப்பவேண்டும். அதே நேரத்தில், இரண்டாவதாக இந்த வகையான ஆயுதங்களை முழுமையாக அகற்றுவதற்காக சோவியத் ஒன்றியத்திற்கு அணுஆயுதக் கட்டுப்பாட்டுப் பேச்சுவார்த்தையை அமெரிக்கா முன்வைக்க வேண்டும்.
இந்த முடிவு சோவியத் ஒன்றியத்தை மட்டுமல்லாது, இலட்சக்கணக்கான ஜெர்மானியர்களையும் ஐரோப்பியர்களையும் கோபப்படுத்தியது. அவர்கள் முதல் பகுதியை மட்டும் கேட்டுவிட்டு வீதிகளில் இறங்கிப் போராடினர். 1980களின் தொடக்கத்தில்
அமெரிக்கா ஏவுகணைகளை நிறுத்தத் தொடங்கிய போதும் சோவியத் ஒன்றியம் பேச்சுவார்த்தைக்கு வராததால் இத்திட்டம் தோற்றுவிட்டது போலத் தோன்றியது.

ஜார்ஜ் புஷ், ரெனால்ட் ரீகனுடன் கோர்பசேவ்ஆனால், சோவியத் ஒன்றியத்தின் புதிய தலைவராக மிகைல் கோர்பச்சேவ் பொறுப்பேற்றதும், அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரீகனுடன் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டார்.
இதன் விளைவாக, 1987இல் இரு நாடுகளும் அனைத்து நடுத்தர வரம்பு தரைவழி ஏவுகணைகளையும் அழிப்பதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
எட்டு ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட அந்த இரட்டைப் பாதை முடிவே இந்த ஒப்பந்தத்திற்கு வழிவகுத்தது என்று ஷ்மிட் குறிப்பிட்டிருந்தார்.
இன்றைய சர்வதேசச் சூழல் 1970களை விட மிகவும் சிக்கலானது. ஏனெனில் அமெரிக்கா விடுக்கும் இரட்டைச் செய்தி ஒரே நேரத்தில் பீஜிங் மற்றும் மொஸ்கோ ஆகிய இரு தலைநகரங்களையும் பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டுவர வேண்டும்.
இருப்பினும், இதன் அடிப்படை தர்க்கம் ஒன்றாகவே இருக்கிறது. தற்போதைய ஆயுதப் போட்டியின் பேரழிவைச் சுட்டிக்காட்டும் அதே வேளையில், டிரம்ப் ஒரு கையில் கண்டிப்பையும் மறுகையில் அமைதிக்கான வாய்ப்பையும் வழங்க வேண்டும்.
ஆனால், புடினிடம் அசாதாரணமான முறையில் பணிவாகவும், ஷி ஜின்பிங்கிடம் சமரசப் போக்குடனும் நடந்துகொள்ளும் டிரம்பிற்கு, இந்த ஆபத்தான ஆனால் நம்பிக்கை அளிக்கும் மூலோபாய அடியை எடுத்து வைப்பதற்கான துணிச்சல் இருக்கிறதா என்பது கேள்விக்குறியே. வலிமை மூலம் அமைதி என்பதைத் தனது வெளியுறவுக் கொள்கையாகப் பிரகடனப்படுத்திய ஒரு தலைவருக்கு, இந்த இரட்டைப் பாதை மூலோபாயமே நிலையான அமைதியைப் பெறுவதற்கான உண்மையான பலத்தைச் சேர்க்கும்.
இன்றைய வல்லரசுகள் பனிப்போரின் வரலாற்றிலிருந்து சரியான பாடங்களைக் கற்றுக்கொள்ளத் தவறினால், உலகளாவிய அணுஆயுதப் போட்டி மனிதகுலத்தை மீளமுடியாத பேரழிவை நோக்கி தள்ளிவிடும் என்பதில் ஜயமில்லை
(லியோ நிரோஷ தர்ஷன்)
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!