news@ilakkiyainfo.com

பிரிவுகள்

பிரா தொங்கும் வேலி; இதை பார்க்கவே குவியும் சுற்றுலாப் பயணிகள்: எங்கே இருக்கிறது தெரியுமா?

21 Nov, 2026
இந்த நாட்டில் சாலையோர வேலி முழுவதும் நூற்றுக்கணக்கான உள்ளாடைகள் தொங்கவிடப்பட்டு, அந்த இடம் எதிர்பாராத ஒரு சுற்றுலா நிறுத்தமாக மாறியுள்ளது. அது எந்த நாடு என்பது குறித்து பார்க்கலாம்.


நியூசிலாந்தில் உள்ள குயின்ஸ்டவுன் மற்றும் வனாகா (Wanaka) இடையேயான அழகிய மலைப்பாதையில் பசுமை மற்றும் லாவெண்டர் மலர்த் தோட்டங்களால் சூழப்பட்ட பகுதியில் மிகவும் வித்தியாசமான ஒரு சுற்றுலாத் தலம் அமைந்துள்ளது. கார்ட்ரோனா (Cardrona) பகுதியில் உள்ள சாலையோர வேலி முழுவதும் நூற்றுக்கணக்கான உள்ளாடைகள் தொங்கவிடப்பட்டு, அந்த இடம் எதிர்பாராத ஒரு சுற்றுலா நிறுத்தமாக மாறியுள்ளது.



பொதுவாக 'பிராட்ரோனா' என்று அழைக்கப்படும் இந்த வேலி, சுமார் 40 மீட்டர் நீளத்திற்கு நீண்டுள்ளது. இதில் பல வண்ணங்கள், வடிவங்கள் மற்றும் அளவுகளில் உள்ளாடைகள் தொங்கவிடப்பட்டுள்ளன. சுற்றுலாப் பயணிகள் இங்கு நின்று புகைப்படம் எடுத்துக்கொள்வதுடன், சிலர் தங்களது உள்ளாடைகளையும் இந்த தொகுப்பில் சேர்த்துவிட்டுச் செல்கின்றனர்.

பார்வையாளர்கள் இந்த இடத்தை ஒரு சமூக வலைதள ஈர்ப்பு மையமாகவும் மாற்றியுள்ளனர். ஒருபுறம் கடலும் மறுபுறம் மலைகளும் சூழ்ந்த இந்த தனித்துவமான இடத்திற்கு சமீபத்தில் சென்ற பயண வீடியோ கண்டண்ட் கிரியேட்டர் ஒருவர், இந்த தொகுப்பில் தனது பங்களிப்பையும் வழங்க முடிவு செய்தார்.

"இதைப் பார்க்கிறீர்களா? பிரா, பிரா, பிரா... ஆள் நடமாட்டமில்லாத இந்த பகுதியில் இது ஒரு நீண்ட வரிசையாக இருக்கிறது. அந்த பக்கம் கடல், இந்த பக்கம் மலைகள், நடுவில் இந்த பிரா வேலி" என்று அந்த வீடியோ பதிவர் வியப்புடன் கூறினார். பின்னர் தனது உள்ளாடையையும் அந்த வேலியில் சேர்க்க முடிவு செய்த அவர், "இந்த குழுவில் நானும் இணைய நினைத்தேன். என்னிடம் ஒரு பிரா உள்ளது. அதை இங்கே தொங்கவிடப் போகிறேன்" என்று கூறினார்.

இந்த 'பிரா வேலி' எப்படி தொடங்கியது?

1998-ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் மற்றும் 1999-ஆம் ஆண்டு புத்தாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில், ஒடாகோவில் (Otago) உள்ள கார்ட்ரோனா பள்ளத்தாக்கு சாலைக்கு அருகிலுள்ள சாலையோர வேலையில் அடையாளம் தெரியாத நான்கு பெண்கள் தங்களது உள்ளாடைகளைத் தொங்கவிட்டபோது இந்த வித்தியாசமான பாரம்பரியம் தொடங்கியதாக நம்பப்படுகிறது.

அவர்கள் யார் என்பது யாருக்கும் தெரியாது. கார்ட்ரோனா ஹோட்டலில் இரவு விருந்து உண்ட பிறகு, அதன் நினைவாக அந்த நான்கு பெண்களும் இவ்வாறு செய்திருக்கலாம் என்று உள்ளூர்வாசிகள் கருதினர். இந்த காட்சி விரைவில் மற்றவர்களின் கவனத்தையும் ஈர்த்ததால், பலரும் தங்களது உள்ளாடைகளை அந்த வேலியில் சேர்க்கத் தொடங்கினர். குறுகிய காலத்திலேயே இந்த தொகுப்பு கணிசமாக வளர்ந்து, ஒரு சாதாரண சாலையோர வேலியை வித்தியாசமான அடையாளமாக மாற்றியது.

இருப்பினும், வளர்ந்து வரும் இந்த ஈர்ப்பு குறித்து அனைவரும் மகிழ்ச்சியடையவில்லை. சில உள்ளூர்வாசிகள் இந்த வேலிக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, சாலையோரம் இருந்ததால் இது வாகன ஓட்டிகளின் கவனத்தை திசைதிருப்பிப் போக்குவரத்து ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்று கவலை தெரிவித்தனர்.

2006-ஆம் ஆண்டில், உள்ளூர் கவுன்சில் அந்த வேலியிலிருந்து சுமார் 1,500 உள்ளாடைகளை அகற்ற உத்தரவிட்டது. ஆனால், ஆதரவாளர்கள் தொடர்ந்து உள்ளாடைகளைத் தொங்கவிட்டதால் அவை மீண்டும் சேரத் தொடங்கின. அகற்றுவதும் மீண்டும் சேருவதுமான இந்த சுழற்சி பல ஆண்டுகளாகத் தொடர்ந்த நிலையில், 2014 நவம்பரில் இறுதியான பெரிய மோதல் ஏற்பட்டது.

அந்த இறுதி மோதலுக்குப் பிறகு, பிரதான நெடுஞ்சாலையிலிருந்து அகற்றப்பட்ட இந்த 'பிரா வேலி', 'தி கார்ட்ரோனா – ஹார்ஸ் ட்ரெக்கிங் அண்ட் குவாட் பைக்கிங்' (The Cardrona – Horse Trekking and Quad Biking) மற்றும் கார்ட்ரோனா டிஸ்டில்லரி (Cardrona Distillery) ஆகியவற்றின் நுழைவு பாதைக்கு மாற்றப்பட்டது.

இதற்கு 'பிராட்ரோனா' என்ற பெயர் எப்படி வந்தது?

2015-ஆம் ஆண்டில், மார்பக புற்றுநோய்  நிதி திரட்டும் நிகழ்வின் போது இதற்கு 'பிராட்ரோனா'  என்று பெயரிடப்பட்டது. இந்த வித்தியாசமான சுற்றுலாத் தலம் சுமார் 30,000 டாலர்கள் நிதி திரட்ட உதவியது. மேலும், மார்பகப் புற்றுநோய் தொடர்பான பணிகளுக்கு பார்வையாளர்கள் நன்கொடை வழங்குவதை ஊக்குவிக்கும் வகையில், அன்றிலிருந்து அந்த இடத்தில் ஒரு நன்கொடைப் பெட்டியும் வைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!