பிரான்சில் மரங்களில் கட்டப்பட்ட கருப்பு பைகள்: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய எச்சரிக்கை!
France நாட்டின் பல நகரங்கள் மற்றும் வனப்பகுதிகளில் மரங்களைச் சுற்றி கட்டப்பட்டுள்ள கருப்பு நிற பைகள் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
முதல் பார்வையில் சாதாரணமாக தோன்றும் இந்த கருப்பு பைகள், உண்மையில் ஆபத்தான கம்பளிப்பூச்சிகளை கட்டுப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு பொறிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்சில் குறிப்பிட்ட காலங்களில் மரங்களில் கம்பளிப்பூச்சிகள் அதிகமாக உருவாகுகின்றன. அவை மரங்களிலிருந்து தரைக்கு இறங்கும் போது மனிதர்களுக்கும் செல்லப்பிராணிகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவை. இதைத் தடுக்கும் நோக்கில், மரங்களைச் சுற்றி இந்த கருப்பு நிற பைகள் பொருத்தப்படுகின்றன.
இந்த பொறிகள் இயற்கை முறையில் செயல்பட்டு, கம்பளிப்பூச்சிகள் கீழிறங்கும் போது அவற்றை சிக்கவைத்து பரவலை கட்டுப்படுத்துகின்றன.
ஆனால், இந்த கம்பளிப்பூச்சிகளின் உடலில் இருக்கும் மிகச் சிறிய முடிகள் மனிதர்களின் தோலில் பட்டாலே கடும் அரிப்பு, எரிச்சல் மற்றும் ஒவ்வாமை போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என வனத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், அந்த முடிகள் மண்ணில் விழுந்த பின்னரும் பல ஆண்டுகள் வரை பாதிப்பை ஏற்படுத்தும் திறன் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக குழந்தைகள் மற்றும் செல்லப்பிராணிகள் அதிக ஆபத்துக்குள்ளாகலாம் என கூறப்பட்டுள்ளது.
இதனால், மரங்களில் கருப்பு நிற பைகள் கட்டப்பட்டிருப்பதை கண்டால், அந்தப் பகுதிகளுக்கு அருகில் செல்லாமல் இருக்கவும், குழந்தைகள் மற்றும் செல்லப்பிராணிகளை அங்கிருந்து விலக்கி வைக்கவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இயற்கை பாதுகாப்பு மற்றும் மனித பாதுகாப்பை ஒருங்கிணைக்கும் இந்த முயற்சி தற்போது பிரான்சில் பரவலாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!