பிரான்ஸ் முழுவதும் மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருவதால் 1800 உயர் நிலைப் பாடசாலைகள் கல்வி அமைச்சினால் மூடப்பட்டும் முற்றுகையிடப்பட்டும் உள்ளன என்று யூ.எஸ்.எல் மாணவர் அமைப்பு தெரிவித்துள்ளது.
90 சதவீதமான பல்கலைக்கழகங்கள் முற்றுகையிடப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறை, நெரிசலான வகுப்பறைகள் மற்றும் இடிந்த கட்டடங்கள் ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கல்விக்கு அதிக முதலீடுகளை மேற்கொள்ளுமாறும் வலியுறுத்தி மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
மாணவர்களின் ஆர்ப்பாட்டங்களுக்கு முன்னணி தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.
பிரான்ஸ் முழுவதும் 30 இற்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டங்களில் மாணவர்களுடன் பெற்றோர்களும் பங்குபற்றியுள்ளனர். 86,000 இற்கும் மேற்பட்டவர்கள் இந்த ஆர்ப்பாட்டங்களில் பங்குபற்றியுள்ளதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சு மதிப்பிட்டுள்ளது.
ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர்ப் புகைப் பிரயோகம் மற்றும் தண்ணீர்ப் பீச்சியடிக்கும் நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளனர்.
பாரிஸுக்கு தென்கிழக்கே 466 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள ஒரு பெரிய நகரமான லியோனில், பொலிஸ் கலகத் தடுப்பு அதிகாரிகளுடன் எதிர்ப்பாளர்கள் மோதலில் ஈடுபட்டுள்ளனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் சில இடங்களில் வீதிகளை மறித்து தீ வைப்புக்களையும் மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் பிரான்ஸ் கல்வி அமைச்சு, நாடு முழுவதும் 891 பாடசாலைகள் உள்ளன, அவற்றின் வகுப்புகள் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ இடைநிறுத்தப்பட்டுள்ளன என்று நேற்று தெரிவித்தது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!