பிலிப்பைன்ஸில் கடந்த ஒரு மாதமாக நீடித்து வரும் பலத்த மழை மற்றும் வெள்ளப் பேரழிவுக்கு மத்தியிலும், இளம் ஜோடி ஒன்று முழங்கால் அளவு வெள்ள நீரில் மூழ்கியிருந்த கத்தோலிக்க தேவாலயத்தில் தங்களது திருமணத்தை நடத்தி முடித்துள்ளது.
மணிலாவின் வடக்கே புலக்கான் மாகாணத்தின் ஹாகோனோய் பகுதியில் அமைந்துள்ள புனித யோவான் பாப்திஸ்தார் தேவாலயத்தில், செப்டெம்பர் 1 ஆம் திகதி லெயான் லீசா கலாங் மற்றும் கில்பர்ட் சிக்கோ ஆகியோரின் திருமணம் நடைபெற்றுள்ளது.
வெள்ளப்பெருக்கு அதிகரித்து வந்ததால் திருமணத்தை ஒத்திவைக்குமாறு பங்குத்தந்தை அறிவுறுத்தியிருந்த போதிலும், மணமக்கள் அதனை ஏற்க மறுத்து, திட்டமிட்டபடி குறித்த தினத்திலேயே திருமணத்தை நடத்த முடிவு செய்துள்ளனர்.
இதன்படி, 15க்கும் குறைவான நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களின் பங்கேற்புடன் மிகக் குறைந்த அளவிலானோர் முன்னிலையில் திருமணச் சடங்குகள் நடைபெற்றுள்ளன.

மணமகள் லெயான், வெள்ள நீரில் பாதுகாப்பாக நடந்து செல்வதற்கு ஏற்றவாறு தனது நீண்ட திருமண ஆடையை மாற்றியமைத்திருந்தார். மேலும், தேவாலயத்துக்கு வரும் வரை திருமண ஆடை நனையாமல் இருப்பதற்காக உயர்த்தப்பட்ட ரிக்ஷா வாகனம் ஒன்றில் அவர் பயணித்துள்ளார்.
பிலிப்பைன்ஸின் வடக்கு மாகாணங்களில் ஆகஸ்ட் மாதம் முழுவதும் வழக்கத்துக்கு மாறாக பெய்த கடுமையான தென்மேற்கு பருவமழை காரணமாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
உத்தியோகபூர்வ தகவல்களின் படி, ஆகஸ்ட் மாதத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் அதனுடன் தொடர்புடைய அனர்த்தங்களில் இதுவரை 34 பேர் உயிரிழந்துள்ளனர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!