news@ilakkiyainfo.com

பிரிவுகள்

பெக்கோ சமன்' தாயார் படுகொலை: கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்குப் பழிவாங்கலா? - பொலிஸார் சந்தேகம்!

13 Aug, 2026
பூசா அதிஉயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிர்மல பிரசங்க என்ற 'பெக்கோ சமன்' என்பவரின்  தாயார் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம், 'கணேமுல்ல சஞ்சீவ'வின் கொலைக்குப் பழிவாங்கும் நடவடிக்கையாகச் செய்யப்பட்டிருக்கலாம்  எனப் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள 'கரந்தெனிய சுத்தாவினுடைய' தரப்பினரே கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்குப் பழிவாங்கும் வகையில் இக்கொலையைச் செய்திருக்கலாம் என மேலதிக விசாரணைகளில் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கெஹெல்பத்தர பத்மேவுடன் பெக்கோ சமனும் இந்தோனேசியாவில் கைதுசெய்யப்பட்டார். கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு பெக்கோ சமனும் ஒத்துழைப்பு வழங்கியிருந்ததாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன.

அத்துடன் 'கஜ்ஜா' என்பவர் மற்றும் அவரது இரு பிள்ளைகள் கொல்லப்பட்ட சம்பவத்திலும் பெக்கோ சமன் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

மித்தேனிய, உலஹிட்டியாவ, பதலங்கல கெதர பகுதியில் நேற்று புதன்கிழமை (12)  வீட்டிலிருந்த பெண்ணை நோக்கி வந்த இனந்தெரியாத இரு துப்பாக்கிதாரிகள் இத்தாக்குதலை நடத்தினர்.

9 மில்லிமீற்றர்  ரகக் கைத்துப்பாக்கியால் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கொலையாளிகள் குறித்த பெண்ணின் நெஞ்சுப் பகுதியில் சுமார் 7 முறை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த அவர் மித்தேனிய பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் அப்பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமராவில்  பதிவாகியுள்ளது.

கொலையாளிகள் வந்து கைவிட்டுச் சென்ற மோட்டார் சைக்கிள் மாத்தறை, தம்பஹல, பொல்வத்தை பகுதியில் இன்று வியாழக்கிழமை  (13) ஊருபொக்கை பொலிஸாரால் மீட்டெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இச்சம்பவம் தொடர்பில் மித்தேனிய மற்றும் ஊருபொக்கை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!