news@ilakkiyainfo.com

பிரிவுகள்

பேன்களை ஒழிக்க பூச்சிக்கொல்லி: 5 வயதுச் சிறுமி பரிதாபச் சாவு

11 Nov, 2026
குழந்தைகளின் தலையிலுள்ள பேன்களை ஒழிப்பதற்காகத் தாய் பயன்படுத்திய நச்சுத்தன்மை வாய்ந்த விவசாயப் பூச்சிக்கொல்லி மருந்து காரணமாக, ஐந்து வயதுடைய சிறுமியொருவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது இரண்டு வயதுடைய சகோதரன் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரேசிலின் தென்கிழக்கு பிராந்தியத்திலுள்ள மதுத்தினா  ) பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவத்தில், அஷ்லி சோபியா டோஸ் ரெயிஸ் சோசா  ) என்ற 5 வயதுச் சிறுமியே உயிரிழந்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை (08) குழந்தைகளினுடைய தலையிலிருந்த பேன்களைக் கட்டுப்படுத்துவதற்காக 'டயஸினான் 40 பிஎம்'  எனும் விவசாயப் பூச்சிக்கொல்லி மருந்தைத் தாய் பூசியுள்ளார். மருந்து பூசப்பட்ட சிறிது நேரத்தில் வீட்டின் வெளியே அமர்ந்திருந்த இரு குழந்தைகளும் திடீரென அசௌகரியத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

உடனடியாக இருவரும் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றிச் சிறுமி அஷ்லி சோபியா உயிரிழந்தார். குழந்தைகள் நச்சுப்பொருளின் தாக்கத்திற்கு உள்ளாகியிருக்கலாம் எனச் சந்தேகித்த மருத்துவக் குழுவினர், இது குறித்துப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து, குழந்தைகளின் 30 வயதுடைய தாயைக் கைதுசெய்து விசாரணைக்கு உட்படுத்திய பொலிஸார், பின்னர் பிணையில் விடுவித்தனர்.

பேன்களை ஒழிப்பதற்காகத் தான் இதற்கு முன்னரும் இந்த முறையைப் பயன்படுத்தியதாகத் தாய் பொலிஸாரிடம் ஒப்புக்கொண்டுள்ளார்.

அதேவேளை, ஆபத்தான நிலையிலிருந்த 2 வயதுச் சிறுவன், முதலுதவி சிகிச்சைகளின் பின்னர் மேலதிக விசேட சிகிச்சைக்காகப் படோஸ் டி மினாஸ்   வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுத் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் வழக்குப் பதிவுசெய்துள்ள மின்னாஸ் ஜெரைஸ்   சிவில் பொலிஸார், எஞ்சியிருந்த பூச்சிக்கொல்லி மருந்துப் போத்தலைக் கைப்பற்றித் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர். உயிரிழந்த சிறுமியின் சடலமும் உடற்கூறாய்விற்காகப் படோஸ் டி மினாஸிலுள்ள சட்ட மருத்துவ நிறுவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் அப்பகுதி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சிறுமியின் மறைவையடுத்து, அவர் கல்வி கற்ற முன்பள்ளி நிறுவனம் திங்கட்கிழமை (09) தனது அனைத்துச் செயற்பாடுகளையும் நிறுத்தி அஞ்சலி செலுத்தியது.

"அஷ்லி சோபியா அனைவரினதும் அன்பைப் பெற்ற ஒரு குழந்தை. அவரது வசீகரமான புன்னகையும் அன்பும் எப்போதும் எங்கள் நினைவில் இருக்கும்" என அம்மாண்பள்ளி நிர்வாகம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!