பேருந்தில் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை: தனியார் பேருந்து நடத்துனர் கைது!
மொனராகலையிலிருந்து பிபிலை நோக்கிச் சென்ற தனியார் பேருந்து ஒன்றில் பயணித்த 26 வயதுடைய பெண்ணுக்குப் பாலியல் ரீதியான தொல்லை கொடுத்த பேருந்து நடத்துனரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பேருந்தில் நின்றுகொண்டு பயணித்த அந்தப் பெண்ணுக்கு, நடத்துனர் பாலியல் சீண்டல்களை விடுத்ததாகக் கூறப்படுகிறது. வீட்டிற்குச் சென்றதும் இச்சம்பவம் குறித்துத் தனது கணவரிடம் தெரிவித்த அந்தப் பெண், பின்னர் மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்குள்ள பொலிஸாரிடம் முறைப்பாடு அளித்துள்ளார்.
முறைப்பாட்டையடுத்து உடனடியாகச் செயற்பட்ட மொனராகலை பொலிஸார், மொனராகலை சிறிங்கல கீழ்ப்பகுதி, தமிழ் கிராமத்தைச் சேர்ந்த 34 வயதுடைய சந்தேக நபரை அதிரடியாகக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபரை மொனராகலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். பொதுப் போக்குவரத்தில் பெண்களுக்கு இழைக்கப்படும் இத்தகைய அநீதிகள் குறித்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!