news@ilakkiyainfo.com

பிரிவுகள்

பொங்கலுக்கு வருமா இந்தியன் 3? கமலின் சம்பள பாக்கி.. நிதி நெருக்கடியில் லைகா நிறுவனம்!

13 Oct, 2026
சென்னை: கமல்ஹாசன் நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள 'இந்தியன் 3' படத்தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்குக் கொண்டுவர லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 

நீண்ட இடைவெளிக்கு பிறகு படத்தின் புதிய போஸ்டர்கள் வெளியிடப்பட்டு, பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், இந்த அறிவிப்பை சுற்றி பல்வேறு நிதிச் சிக்கல்களும் விவாதங்களும் எழுந்துள்ளன. 

இதுகுறித்து வலைப்பேச்சு பிஸ்மி அளித்துள்ள பேட்டியில், இந்தியன் 3 படத்திற்கு இன்னும் சுமார் 15 நாட்கள் வரை படப்பிடிப்பு பாக்கி உள்ளது. அதில் கமல்ஹாசன் கலந்து கொண்டு நடிக்க வேண்டிய சூழலில், அவருக்கு வழங்கப்பட வேண்டிய பல கோடி ரூபாய் சம்பள பாக்கியை லைகா நிறுவனம் இன்னும் முழுமையாக கொடுக்கவில்லை. 

பண பரிவர்த்தனை விஷயங்களில் எப்போதும் கறாராக இருக்கக்கூடிய கமல்ஹாசன், சம்பளப் பாக்கியை பெற்றுக்கொண்ட பிறகு படப்பிடிப்பில் பங்கேற்பாரா அல்லது படப்பிடிப்பை முடித்த பின் சம்பளத்தை பெற்றுக்கொள்ள சம்மதிப்பாரா என்பது கேள்விகுறியாக உள்ளது.

லைகாவின் நிதி நெருக்கடி: கமல்ஹாசன் மட்டுமின்றி, படத்தின் இசையமைப்பாளர் அனிருத்துக்கும் சம்பளப் பாக்கி நிலுவையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. 

படத்தின் பின்னணி இசை மற்றும் மீதமுள்ள இசை பணிகளை அனிருத் முடித்துக் கொடுத்தால்தான் திட்டமிட்டபடி படத்தை வெளியிட முடியும். ஆனால், அவரிடம் முறையான ஆலோசனைகள் நடத்தப்படாமல் லைகா நிறுவனம் தன்னிச்சையாக இந்தியன் 3 போஸ்டரை வெளியிட்டுள்ளது. 

ஏற்கனவே பல பெரிய பட்ஜெட் படங்களைத் தயாரித்துள்ள லைகா நிறுவனத்திற்கு, 'இந்தியன் 3' திரைப்படம் மிகவும் முக்கியமான முதலீடாகும். ஏற்கெனவே செய்யப்பட்ட முதலீட்டை மீட்க வேண்டுமெனில், இப்படத்தை வெளியிடுவதை தவிர நிறுவனத்திற்கு வேறு வழியில்லை. இருப்பினும், மீதமுள்ள படப்பிடிப்பு, விளம்பர செலவுகள் மற்றும் விநியோக உரிமைகள் என கூடுதல் நிதி தேவைப்படுவதால், இந்தச் சவால்களை நிறுவனம் எப்படி கையாளப் போகிறது என்பது தெரியவில்லை

என்னதான் நடக்கிறது?: மறுபுறம் கமல்ஹாசனின் அடுத்தடுத்த திரைப்படங்கள் குறித்த அதிகாரப்பூர்வமான சூழல் இன்னும் முழுமையாக தெரியவில்லை. 

அருண்குமார் தயாரிப்பில் உருவாகும் படங்கள் குறித்த முன் தயாரிப்புப் பணிகள் பேசப்பட்டாலும், இறுதி கட்ட அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை. 

இதேபோல், ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணைந்து நடிப்பதாக பேசப்பட்ட திரைப்படமும் கைவிடப்பட்டு விட்டதாக சில தகவல்கள் பரவி வருகின்றன. 

இத்தகைய குழப்பமான சூழல்களுக்கு இடையே, ஏற்கனவே பெரும் தொகையை முதலீடு செய்துள்ள 'இந்தியன் 3' படத்தின் பணிகளை முடித்துவிட்டு பொங்கலுக்கு வெளியிடுவதே லைகா நிறுவனத்திற்கும் கமலுக்கும் சரியான தேர்வாக இருக்கும். 

இருப்பினும், கமல், அனிருத்தின் சம்பளக் பாக்கி குறித்து லைகா நிறுவனம் விரைவாக முற்றுப்புள்ளி வைத்தால் மட்டுமே, திட்டமிட்டபடி 'இந்தியன் 3' பொங்கல் ரேஸில் களம் இறங்கும் என அவர் அந்த பேட்டியில் விரிவாக பேசி உள்ளார்.




கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!