போதைக்கு அடிமையான கூரை தொழிலாளி கொடூரம்
நீர்கொழும்பு, சீதுவையில் உள்ள வீடு ஒன்றில் தனியாக வசித்து வந்த 69 வயதுடைய தேவனெத்தி கர்லி சந்திராவதி என்ற மூதாட்டி, சினிமா பாணியில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு, வீட்டிலிருந்த தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டின் கூரையைப் பழுதுபார்ப்பதற்காகச் சில நாட்களுக்கு முன்னர் வந்திருந்த நபர், அவர் தனியாக வசிப்பதையும் அவரிடம் தங்க நகைகள் இருப்பதையும் அறிந்துகொண்டு இக்கொடூரச் செயலை அரங்கேற்றியுள்ளார்.
கடுமையான போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான இச்சந்தேக நபர், நேற்று முன்தினம் இரவு மூதாட்டியின் வீட்டுக்குள் நுழைந்து கம்பியால் அவரது கழுத்தை நெரித்தபோது, அவர் அலறியுள்ளார். அதன்போது அவர் உயிருடன் இருக்கும்போதே பொலித்தீன் பையொன்றுக்குள் போட்டு அடைத்து, வீட்டின் ஒரு மூலையில் மறைத்து வைத்துவிட்டு, சுமார் ஒரு லட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளைக் கொள்ளையடித்துத் தப்பியோடியுள்ளார். பைக்குள் அடைக்கப்பட்ட மூதாட்டி பின்னர் மூச்சுத்திணறிப் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பகல் வேளையிலும் வீட்டின் மின்விளக்குகள் எரிந்துகொண்டிருந்ததால் சந்தேகமடைந்த அயலவர்கள், அது குறித்து மூதாட்டியின் மகனுக்குத் தகவல் வழங்கியுள்ளனர். வேறு வீட்டில் வசித்து வந்த மகன் அங்கு வந்து சோதனையிட்டபோது, பையில் அடைக்கப்பட்டிருந்த தாயின் சடலத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், சிசிடிவி (CCTV) கேமரா காட்சிகளின் உதவியுடன் சந்தேக நபரைக் அடையாளம் கண்டு கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், கொள்ளையடித்த நகைகளை விற்பனை செய்து பெற்ற பணத்தில் போதைப்பொருள் வாங்கியதாகவும், தனது பிள்ளையின் மருத்துவச் செலவுகளுக்குப் பயன்படுத்தியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ள நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!