தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகரான 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'பத்தா' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பத்தா' திரைப்படத்தில் விஜய் சேதுபதி, லிஜோ மோள் ஜாமுல் ஜோஸ், ஹரி கிருஷ்ணன், சாந்தி பாலகிருஷ்ணன், சகஸ்ரா, சாய் ப்ரித்வி, விஜய கோவிந்த், அர்ஜுன் சர்மா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
எஸ்.கே செல்வகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார். பீரியாடிக் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்டார் ஸ்டுடியோ 18 - ஏ பார் அப்பிள் ஸ்டுடியோஸ்- சினி ஒன் ஸ்டுடியோஸ் புரொடக்ஷன் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. இந்தத் திரைப்படத்தை இயக்குநர் அட்லி வழங்குகிறார்.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள பிரபல தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இதில் படக் குழுவினருடன திரைப்பட இயக்குநர்கள் பாக்கியராஜ் கண்ணன், சிபி சக்கரவர்த்தி, பாடலாசிரியர் விவேக், ஆகியோர் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றினர்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ''இப்படத்தின் கதையை கொரோனா காலகட்டத்தின் போது எழுதத் தொடங்கினேன். இந்த கதையை முழுமையாக எழுதி நிறைவு செய்ததும் விஜய் சேதுபதியிடம் சொன்னேன். அவர் அட்லியிடம் அழைத்துச் சென்று கதையை சொல்லச் சொன்னார்.
அதன் பிறகு மும்பையில் தயாரிப்பாளர்களை சந்தித்து, இப்படத்தில் கதையை விவரித்தேன். உடனடியாக அனைவரும் சம்மதம் தெரிவித்து, படத்தின் பணிகளை தொடங்கினோம். 1980களில் நடைபெறும் கதை என்பதால் கலை இயக்கத்திற்கும், ஒளிப்பதிவுக்கும் கூடுதல் பங்களிப்பு இருந்தது. அதனை உணர்ந்து இருவரும் முழுமையான அர்ப்பணிப்புடன் இணைந்து பணியாற்றினர்.
இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு வித்தியாசமான திரை அனுபவத்தை உறுதியாக வழங்கும் என நம்புகிறேன்'' என்றார்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!