news@ilakkiyainfo.com

பிரிவுகள்

மக்காவை இலக்குவைத்J ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ட்ரோன் தாக்குதல்!: சவூதி அரேபியாவில் பரபரப்பு

16 Sep, 2026
இஸ்லாமியர்களின் புனித நகரமான மக்காவை இலக்குவைத்து தாக்குதல் நடத்த முயன்றதாக யேமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது சவூதி அரேபியா இன்று புதன்கிழமை (16) குற்றம் சாட்டியுள்ளது. 

இது உலக நாடுகளில் உள்ள இஸ்லாமியர்கள் அனைவரிலும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

மக்கா நகரின் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைகள், ட்ரோன்களைக் கொண்டு தாக்குதல் நடத்த முயன்றமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ட்ரோன் மூலம் மக்காவில் தாக்குதல் நடத்த முயன்றும், மக்கா வான் எல்லைக்குள் நுழைவதற்குள் குறித்த ட்ரோனை சவூதி அரேபியா வான் பாதுகாப்புப் படையினர் இடைமறித்து சுட்டு வீழ்த்தியுள்ளனர். 

அதனையடுத்து, புனிதத் தலங்களின் பாதுகாப்பு எல்லையானது ஒரு "சிவப்பு எல்லைக்கோடு" என்று எச்சரித்துள்ள சவூதி, ஹவுதியின் தாக்குதல் முயற்சிக்காக தாம் பழிவாங்கப்போவதாகவும் தெரிவித்துள்ளது.

ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் சவூதி அரேபியாவின் ஆதரவு பெற்ற யேமன் அரசுக்கும் இடையே மீண்டும் வெடித்துள்ள மோதலில் ரியாத் நகரம் இலக்குவைக்கப்பட்டுள்ளது. 

சவூதி அரேபியாவிற்கு கடல்வழி முற்றுகையை அறிவித்துள்ள ஹவுதிகள், செங்கடலில் பயணிக்கும் அந்நாட்டின் கப்பல்களை இலக்கு வைத்து வருகின்றனர்.

கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட அதிரடித் தாக்குதலின் மூலம் யேமனின் செங்கடல் கடலோரப் பகுதி முழுவதையும் மற்றும் பாப் அல்-மந்தப் (Bab al-Mandab) நீரிணையையும் ஹவுதிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். 

மேற்காசியாவில் ஏற்பட்டுள்ள போர் நிலைமை காரணமாக ஹோர்முஸ் நீரிணை கடல்வழிப் பாதை முடக்கப்பட்டுள்ள நிலையில், சவூதியின் எண்ணெய் ஏற்றுமதிக்கு இந்த பாப் அல்-மந்தப் பகுதி மிக முக்கியமான பாதையாகும்.

ஆண்டுதோறும் இலட்சக்கணக்கான யாத்திரீகர்களை ஈர்க்கும் சவூதியின் புனித நகரமான மக்காவை நோக்கி வந்த கிளர்ச்சியாளர்களின் ட்ரோனை சுட்டு வீழ்த்தியதாக ரியாத் வெளியிட்ட அறிக்கையை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் உடனடியாக மறுத்தனர்.

"மக்காவை இலக்குவைத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட ஒரு பழமையான பொய். இது இனி யாரையும் ஏமாற்றாது" என்று ஹவுதிகளின் அரசியல் குழுவைச் சேர்ந்த ஹஸெம் அல்-அசாத் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

புனிதத் தலங்களின் பாதுகாப்பு ஒரு "சிவப்புக் கோடு" (தாண்டக்கூடாத எல்லை) என்று எச்சரித்துள்ள சவூதி, இதற்காகப் பழிவாங்கப்போவதாக உறுதியளித்துள்ளது.

57 முஸ்லிம் நாடுகளைக் கொண்ட இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC), இந்த "கொாடூரமான" தாக்குதல் முயற்சியைக் கண்டித்துள்ளது.

மக்கா மற்றும் யேமன் எல்லையை ஒட்டியுள்ள சவூதியின் தெற்குப் பகுதிகளில் சாத்தியமான தாக்குதல்கள் குறித்து சவூதி அரேபியா நேற்று செவ்வாய்க்கிழமை (15) எச்சரிக்கை விடுத்திருந்தது.

கடந்த பெப்ரவரியில் மேற்காசியாவில் போர் வெடித்த பிறகு மக்காவில் விடுக்கப்பட்ட முதல் எச்சரிக்கை இதுவாகும். 

யேமனில் இருந்து ஏவப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் சவூதியின் தெற்குப் பகுதியில் 13 பேர் காயமடைந்த அடுத்த நாளே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

யேமனின் பெரும்பகுதி வடக்கு நிலப்பரப்பை பல ஆண்டுகளாகக் கட்டுப்படுத்தி வரும் ஹவுதிகள், ஜூலை மாதம் யேமன் அரசுப் படைகளுக்கு எதிராகப் பெரிய அளவிலான தாக்குதலைத் தொடங்கியபோது சண்டை மீண்டும் தீவிரமடைந்தது.

அரேபிய தீபகற்பத்தின் ஏழ்மையான நாடான யேமனில் ஏற்பட்டுள்ள இந்த மோதல் காரணமாக, செப்டம்பர் தொடக்கத்தில் இருந்து இதுவரை 82,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!