news@ilakkiyainfo.com

பிரிவுகள்

மட்டக்களப்பில் பெண் மீது பெற்றோல் ஊற்றி தீ வைத்த சம்பவம்: பெண் உயிரிழப்பு; உறவினர் கைது

06 Nov, 2026
ஆரையம்பதி, பழைய கல்முனை வீதியைச் சேர்ந்த 55 வயதுடைய சின்னத்தம்பி கமலேஸ்வரி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது பற்றி மேலும் தெரியவருவதாவது:

குறித்த பெண் சம்பவ தினமான செவ்வாய்க்கிழமை (03) பிற்பகல் சுமார் 4.00 மணியளவில் வீட்டின் முன்பகுதியில் கதிரையில் தனிமையில் அமர்ந்திருந்தார். இதன்போது, அவருக்குத் தெரியாமல் வீட்டின் பின்பகுதியால் சென்ற அந்தப் பெண்ணின் உறவினரான ஆண் ஒருவர், அப்பெண் மீது பெற்றோலை ஊற்றித் தீயிட்டதைத் தொடர்ந்து அவர் தீப்பற்றிக் கொண்டார்.

இதனையடுத்து, குறித்த பெண் சத்தமிட்டதை அடுத்து அருகிலிருந்தவர்கள் ஓடிச் சென்று தீயை அணைத்துக் காப்பாற்றியதுடன், படுகாயமடைந்த அவரை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர். இதற்கிடையில், தீயிட்டவர் அங்கிருந்து தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, தலைமறைவாகியிருந்த குறித்த பெண்ணின் கணவரின் சகோதரியின் கணவரான சந்தேகநபரை கடந்த புதன்கிழமை (04) கைது செய்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது, அவரை எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த குறித்த பெண், சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை (05) காலையில் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக் காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!