பதுளை மாவட்டத்தின் வெலிமடை – நுகதலாவையிலிருந்து தங்கமுவ ஊடாக அம்பகஸ்தோவ நோக்கிச் செல்லும் பிரதான வீதியில், கிராம்பே பாடசாலைக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உட்பட மூவர் காயமடைந்துள்ளனர்.
நேற்று (24) சனிக்கிழமை இரவு சுமார் 7.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில், மதுபோதையில் காரைச் செலுத்திய சாரதி வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் எதிரே வந்த லொறியுடன் மோதியதுடன், வீதியோரத்திலிருந்த வீடொன்றின் மதிலில் கார் கவிழ்ந்துள்ளதாக வெலிமடை பொலிஸார் தெரிவித்தனர்.
நுகதலாவை திசையிலிருந்து கிராம்பே நோக்கி அதிவேகமாகப் பயணித்த கார், நுகதலாவை சந்திக்கும் கிராம்பே பாடசாலைக்கும் இடைப்பட்ட பகுதியில் எதிரே வந்த லொறியுடன் மோதியதுடன், வீதியில் நடந்து சென்ற பெண் ஒருவரையும் மோதியுள்ளது.
இந்த விபத்தில் வீதியில் நடந்து சென்ற பெண் ஒருவரும், லொறியில் பயணித்த இருவருமாக மூவர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த மூவரும் சிகிச்சைக்காக வெலிமடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதி மதுபோதையில் இருந்ததாகத் தெரிவித்த பொலிஸார், அவருக்கு விபத்தில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் குறிப்பிட்டனர். குறித்த சாரதியை வெலிமடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த விபத்தில் கார் மற்றும் லொறி ஆகிய இரு வாகனங்களுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிமடை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.





கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!