news@ilakkiyainfo.com

பிரிவுகள்

;மனைவி முதல் 7 வயது சிறுவன் வரை... குடும்பத்தையே வேரறுத்த கொடூர கொலைகாரன்!"

19 Nov, 2026
":"

கர்நாடக மாநிலம், பெங்களூரு, ராம்புரா பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எட்டுப் பேர் கடந்த மாதம் திடீரென மாயமாகியிருக்கிறார்கள். 


அவர்கள் சுற்றுலா சென்றிருப்பதாக உறவினர்களுக்கு, சம்பந்தப்பட்டவர்களின் செல்போனிலிருந்தே மெசேஜுகள் வந்திருக்கின்றன. 

ஆனால், அவர்களைத் தொடர்புகொள்ள முடியாததால் சந்தேகமடைந்த உறவினர்கள், நவம்பர் 3-ம் தேதி காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார்கள்.

விசாரணையைத் தொடங்கிய காவல்துறையினர், மாயமானவர்களின் செல்போன் டவர் லொகேஷன்கள் அனைத்தும், காணாமல்போனவர்களில் ஒருவரான சுனிதாவின் கணவர் இந்துசேகரின் வீடு அமைந்திருக்கும் ராஜாஜி நகர் பகுதியைக் காட்டியதைக் கண்டறிந்திருக்கிறார்கள். 


மேலும், மாயமானவர்கள் இந்துசேகரின் வீட்டுக்குள் சென்றதற்குப் பிறகு வெளியே வராததையும் அந்தப் பகுதி சிசிடிவி காட்சிகள் உறுதிப்படுத்தியிருக்கின்றன. 

இந்துசேகரைச் சுற்றிவளைத்து விசாரித்தபோது, “என்னுடைய மனைவி உட்பட அனைவரும் ஒரு மாதம் ஆல் இந்தியா டூருக்குச் சென்றிருக்கிறார்கள்” என்று தொடர்ந்து கூறியிருக்கிறான். 


மேற்கொண்டு நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், ஏழு பேரைக் கொலைசெய்து, நான்கு வெவ்வேறு இடங்களில் உடல்களை வீசியதை ஒப்புக்கொண்டிருக்கிறான்.

.

குடும்பத் தகராறு... அம்மிக்கல்லால் நடந்த முதல் கொலை!


கொலைகளின் பின்னணி குறித்து கர்நாடக காவல்துறையினரிடம் பேசினோம். “இந்துசேகருக்கு சுனிதாவுடன் 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்திருக்கிறது. 

இவர்களுக்கு 17 வயதில் ஒரு மகள் இருக்கிறார். கணவன்-மனைவிக்கிடையே நீண்டகாலமாகக் கருத்து வேறுபாடுகளும், தகராறுகளும் இருந்து வந்திருக்கின்றன. 

இதனால் அடிக்கடி பிரிந்து வாழ்ந்திருக்கிறார்கள். சுனிதாவுக்கு அவருடைய தாயார் ரூபாவதியும், இரண்டு சகோதரர்களும் ஆதரவாக இருந்ததால் அவர்கள்மீதும் இந்துசேகருக்கு வெறுப்பு ஏற்பட்டிருக்கிறது.


அக்டோபர் 16-ம் தேதி வீட்டில் கணவன்- மனைவிக்கிடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. ஆத்திரமடைந்த இந்துசேகர், அம்மிக்கல்லை எடுத்து சுனிதாவின் தலையில் போட்டதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார். 


கொலையை மறைக்க, சுனிதாவின் உடலைத் துணியால் இறுக்கமாகச் சுற்றி, ரத்தக்கசிவும் துர்நாற்றமும் வெளியேறாமல் இருக்க, டேப்புகளால் பல அடுக்குகளாகச் சுற்றி சாக்குமூட்டையில் கட்டிவைத்திருக்கிறான். 


பின்னர், சுனிதாவின் செல்போனிலிருந்து வெளியூருக்குச் செல்வதாக உறவினர்களுக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு, போனை சுவிட்ச் ஆஃப் செய்திருக்கிறான்.


மகளைக் காணவில்லை எனத் தேடி வீட்டுக்கு வந்த மாமியார் ரூபாவதியையும் அதே அம்மிக்கல்லால் தலையில் தாக்கிக் கொலை செய்திருக்கிறான். 


அவரது உடலையும் மூட்டையாகக் கட்டியிருக்கிறான். இரண்டு உடல்களையும் தன் காரில் ஏற்றிக்கொண்டு, சுமார் 250 கி.மீ தொலைவிலுள்ள சேலம் மாவட்டம், ஏற்காட்டுக்குக் கொண்டு சென்று 30 அடி பள்ளத்தில் வீசியிருக்கிறான்.

.

விருந்து கொடுத்து உறவினர்களைக் கொன்ற கொடூரம்!


அதற்குப் பிறகும் இந்துசேகரின் கொலைவெறி அடங்கவில்லை. சுனிதாவின் சகோதரர்களை விருந்து கொடுப்பதாகக் கூறி குடும்பத்துடன் வீட்டுக்கு வரவழைத்திருக்கிறான். 


அசைவ உணவுகளில் தூக்க மாத்திரைகளைக் கலந்து கொடுத்து மயக்கமடையச் செய்திருக்கிறான். சுனிதாவின் மூத்த சகோதரர் சங்கர், அவரின் மனைவி நளினி, இளைய சகோதரர் சிவகுமார், அவரின் மனைவி திவ்யா நால்வரையும் அதே அம்மிக்கல்லால் தலையில் தாக்கிக் கொலை செய்திருக்கிறான். 


அவர்களின் உடல்களைச் சாக்குமூட்டைகளில் கட்டி, சாமுண்டி மலை, சிராடி மலைப் பகுதிகளில் வீசியிருக்கிறான்.

இதில் மேலும் கொடுமை என்னவென்றால், மைத்துனர் சிவகுமாரின் 7 வயது மகன் புனீத்தையும் கொலை செய்து நந்தி மலையில் வீசியிருக்கிறான். 


கொலை நடந்தபோது, மற்றொரு மைத்துனரான சங்கரின் 11 வயது மகன் அறையில் தூங்கியதால், கொலையிலிருந்து தப்பியிருக்கிறார். 


ஏழு பேரின் உடல்களையும் ஒரே இடத்தில் வீசினால் எளிதில் சிக்கிக்கொள்வோம் என்று கருதிய இந்துசேகர், நான்கு வெவ்வேறு மலைப் பகுதிகளைத் தேர்ந்தெடுத்திருக்கிறான். வாடகை கார் ஓட்டுநராகப் பணியாற்றியதால், இந்தப் பகுதிகளுக்குச் செல்லும் வழித்தடங்களும், ஆள் நடமாட்டம் இல்லாத பள்ளத்தாக்குகளும் அவனுக்கு நன்றாகத் தெரிந்திருக்கின்றன.

.

ஏதோ கண நேர ஆத்திரத்தில் இந்தக் கொலைகள் நடக்கவில்லை. உடல்களை அப்புறப்படுத்த சாக்குப்பைகள், ரத்தக்கறைகளைச் சுத்தம் செய்ய ரசாயனங்கள் என முன்கூட்டியே திட்டமிட்டு, உடல்களை மாநிலம்விட்டு மாநிலம் எடுத்துச் சென்றிருக்கிறான். அக்டோபர் 16-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை இந்தக் கொலைகளைச் செய்திருக்கிறான்” என்றனர்.


இந்த வழக்கின் விசாரணை குறித்து பெங்களூரு மாநகர காவல் ஆணையர் சீமந்த் குமார் சிங்கிடம் பேசினோம். “இந்த வழக்கை விரைந்து விசாரித்து முடிக்கத் தனி விரைவு நீதிமன்றம் அமைக்கவும், சிறப்பு அரசு வழக்கறிஞரை நியமிக்கவும் கர்நாடக உள்துறை அமைச்சகத்திடம் காவல்துறை பரிந்துரைத்திருக்கிறது. 


ஏழு பேரின் உடல்களும் முழுமையாக மீட்கப்பட்டுள்ளன. கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட அம்மிக்கல் உள்ளிட்ட ஆயுதங்களைக் கைப்பற்றும் பணியும், தடயவியல் ஆதாரங்களை உறுதிப்படுத்தும் பணியும் நடைபெற்றுவருகின்றன. 


கொலைகளிலோ அல்லது உடல்களை அப்புறப்படுத்துவதிலோ இந்துசேகரின் 17 வயது மகளுக்கோ வேறு யாருக்கோ தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் விசாரித்துவருகிறோம்” என்றார்.


மனித மனம் இவ்வளவு கொடூரமாகக்கூட சிந்திக்குமா?

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!