news@ilakkiyainfo.com

பிரிவுகள்

மனைவிக்குப் பயந்து 5இலட்சம் ரூபாயை கறையானுக்கு இரைபோட்ட விவசாயி

10 Aug, 2026
விவசாயி ஒருவர், தனது நிலத்தை விற்றுப் பெற்ற 5 லட்சம் ரூபாயை மண்ணுக்குள் புதைத்து வைத்துவிட்டு, அந்த இடத்தை மறந்துபோன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் பலோத்ரா மாவட்டத்தில் உள்ள பச்பத்ரா பகுதியைச் சேர்ந்த விவசாயி மங்கிலால் மேக்வால், கடந்த ஆண்டு தனது நிலத்தை 5 லட்ச ரூபாவிற்கு விற்றுள்ளார். 

அந்தப் பணத்தைக் கொண்டு தனது நிலத்தில் ஒரு அறை கட்டத் திட்டமிட்ட அவர், தனது மனைவிக்குத் தெரியாமல் பணத்தைப் பாலித்தீன் பையில் பொதிந்து, குழி தோண்டி மண்ணுக்குள் புதைத்து வைத்துள்ளார்.

அவருக்குக் குடிப்பழக்கம் இருந்த காரணத்தினால், தான் பணத்தைப் புதைத்து வைத்த இடத்தை அவர் முற்றிலுமாக மறந்துவிட்டார். 

திடீரென அறை கட்டும் பணிக்கு பணம் தேவைப்பட்டபோது, மண்ணில் புதைத்த பணத்தைத் தனது விவசாய நிலத்தில் அவர் நீண்ட நாட்களாகத் தேடிப் பார்த்துள்ளார். இதற்காக சுமார் 6 ஏக்கர் நிலத்தை அவர் தோண்டிப் பார்த்தும் பணம் கிடைக்கவில்லை.

நாட்கள் கடந்த நிலையில், இந்த விவகாரத்தை அவர் தனது மனைவி மற்றும் மகனிடம் கூறியுள்ளார். ஆரம்பத்தில் இதனை நம்பாத அவர்கள், பின்னர் மங்கிலாலுடன் இணைந்து பணத்தைத் தேடும் பணியில் இறங்கினர். 

இப்படியே ஒரு வருட காலம் கடந்த நிலையில், மழை பெய்ததை அடுத்து நிலத்தை விவசாயத்திற்குத் தயார்படுத்தும் நோக்கில் டிராக்டர் மூலம் உழவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அப்போது, மண்ணுக்குள் புதைக்கப்பட்டிருந்த ரூபாய் நோட்டுகள் அவர்களின் கண்களில் பட்டுள்ளன. எனினும், அதில் இருந்த 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான 500 ரூபாய் நோட்டுகளைக் கறையான்கள் முழுமையாகத் தின்று நாசமாக்கியிருப்பதைக் கண்டு ஒட்டுமொத்த குடும்பத்தினரும் அதிர்ச்சியடைந்தனர். 

இதனையடுத்து, கறையான் அரித்த அந்த ரூபாய் நோட்டுகளைப் பச்பத்ராவில் உள்ள வங்கிக்கு மாற்றுவதற்காக அவர்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.

எனினும், அந்தச் சேதமடைந்த ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொடுக்க வங்கி நிர்வாகம் மறுப்புத் தெரிவித்ததோடு, ஜெய்ப்பூரில் உள்ள தலைமை அலுவலகத்திற்குச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளது. இதற்கிடையே, கறையான் அரிந்து பாழான லட்சக்கணக்கிலான பணத்தைப் பார்த்து விவசாயி மங்கிலால் கதறித் துடித்துக் கண்ணீர்விட்டு அழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, பார்ப்போரின் நெஞ்சை உலுக்குவதாக அமைந்துளது.


கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!