news@ilakkiyainfo.com

பிரிவுகள்

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனை மீட்க சவூதி அரேபியா செல்கிறது இலங்கை நாடாளுமன்ற

22 Sep, 2026
-மன்னரிடம் பொது மன்னிப்புக் கோர ஜனாதிபதி கடிதம்!

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் நோக்கில், இலங்கை நாடாளுமன்ற தூதுக்குழுவொன்று அந்நாட்டுக்கு விஜயம் செய்யவுள்ளது.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இந்த அறிவிப்பை உத்தியோகபூர்வமாக வெளியிட்டார்.

தூதுக்குழுவின் பயணம் மற்றும் முக்கிய சந்திப்பு:

நாடாளுமன்ற பிரதி சபாநாயகர் ரிஷ்வி சாலியின் தலைமையில் அமையவுள்ள இத்தூதுக்குழுவில், ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் உள்வாங்கப்படவுள்ளனர்.

இந்த விசேட தூதுக்குழு சவூதி அரேபிய மன்னரை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.

இதன்போது, மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள சிவராசா அனோஜனுக்கு இராஜதந்திர ரீதியிலான பொது மன்னிப்பை வழங்குமாறு கோரி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் அனுப்பி வைக்கப்படும் விசேட கடிதத்தையும் இக்குழுவினர் மன்னரிடம் கையளிக்கவுள்ளனர்.

செலவுகளை ஏற்கும் அரசாங்கம்:

சிவராசா அனோஜன் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஊடாகச் சட்டரீதியாகவே சவூதி அரேபியாவுக்கு தொழில் நிமித்தம் சென்றுள்ளார். இதன் காரணமாக, அவரது வழக்கு நடவடிக்கைகளுக்காக இதுவரை ஏற்பட்ட செலவுகள் மற்றும் எதிர்காலத்தில் ஏற்படவுள்ள அனைத்துச் செலவுகளையும் அரசாங்கமே முழுமையாகப் பொறுப்பேற்கும் என அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், அவரது குடும்பத்தினரிடமிருந்து மேன்முறையீட்டு நடவடிக்கைகளுக்காகப் பெறப்பட்டிருந்த பணமும் மீண்டும் அவர்களிடமே கையளிக்கப்படும் எனவும், அனோஜனை விடுவிப்பதற்கான அனைத்து இராஜதந்திர மற்றும் சட்ட வழிகளிலும் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நாடாளுமன்றில் உறுதியளித்தார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சவூதி அரேபியா சென்ற சிவராசா அனோஜன் அங்கு எதிர்கொண்ட சட்டப் பிரச்சினை காரணமாக மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்நோக்கியுள்ளார். 

அவரைப் பாதுகாத்து நாட்டுக்கு அழைத்து வர வேண்டும் என மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்ச்சியாகக் கோரிக்கைகளை முன்வைத்து வந்த நிலையிலேயே அரசாங்கம் இந்த இராஜதந்திர நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!