தசாப்த காலத்துக்கு அண்மித்து பிற்போடப்பட்டுள்ள மாகாண சபைகளுக்கான தேர்தல் அடுத்த ஆண்டிலாவது நடத்துவதற்கான அரசியல் இணக்கப்பாடு எட்டப்படுமா என்ற எதிர்பார்ப்பு வலுப்பெற்றுள்ளது. தேர்தல் செய்திகள்
காலவரையின்றிப் பிற்போடப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தல்களை ஓராண்டுக்குள் நடத்தி மக்கள் நிர்வாகத்தில் பங்குகொள்வதற்கான வாய்ப்பை வழங்குவதாக உறுதியளித்த அரசாங்கம், இதுவரை தேர்தலை நடத்துவதற்கான இறுதியான சட்ட மற்றும் நிர்வாக ஏற்பாடுகளை நிறைவுசெய்யவில்லை.
மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படாமைக்கான பிரதான சட்டப் பின்னணி 2017ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க மாகாண சபைகள் தேர்தல் (திருத்த) சட்டத்துடன் தொடர்புபட்டுள்ளது. 1988ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க மாகாண சபைகள் தேர்தல் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்தத் திருத்தத்தின் மூலம் கலப்பு உறுப்பினர் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
இதன்படி, மாகாண சபை உறுப்பினர்களில் 50 சதவீதமானோர் தொகுதி அடிப்படையிலும் ஏனைய 50 சதவீதமானோர் மாவட்ட விகிதாசாரப் பிரதிநிதித்துவ அடிப்படையிலும் தெரிவுசெய்யப்பட வேண்டிய ஏற்பாடு உருவாக்கப்பட்டது. இதற்காகத் தேர்தல் தொகுதிகளின் எல்லைகளை மீள்நிர்ணயம் செய்ய வேண்டியிருந்தது. தேர்தல் செய்திகள்
எனினும், எல்லை நிர்ணய நடவடிக்கைகளில் ஏற்பட்ட முரண்பாடுகளும், அதற்கான அறிக்கைக்கு பாராளுமன்ற அங்கீகாரம் கிடைக்காமையும் தேர்தலை நடத்துவதற்கான சட்டப்பூர்வமான தடையை உருவாக்கின. இதன் விளைவாக ஒன்பது மாகாண சபைகளும் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளின்றி இயங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தத் தேர்தல் முடக்கத்தை நீக்குவதற்கான முயற்சிகள் கடந்த காலங்களிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 2022ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்ட பாராளுமன்றத் தெரிவுக்குழு, பழைய விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழ் தேர்தலை நடத்துவதற்கான சாத்தியப்பாடுகள் குறித்து ஆராய்ந்திருந்தது. அக்குழுவின் அறிக்கை 2022 ஜூன் 22ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், 17 உறுப்பினர்களைக் கொண்ட குழுவில் எட்டு உறுப்பினர்களே அதில் கையொப்பமிட்டிருந்தனர்.
தற்போதைய பாராளுமன்றத்தில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கான தேர்தல் முறைமையைத் தீர்மானிப்பதற்காக விசேட செயற்குழுவொன்று நியமிக்கப்பட்டது. சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்னவினால் நியமிக்கப்பட்ட இக்குழுவுக்கு அமைச்சர் விஜித ஹேரத் தலைமை தாங்குகிறார்.
2026 மார்ச் 17ஆம் திகதி நடைபெற்ற முதலாவது கூட்டத்தில், 2017ஆம் ஆண்டின் திருத்தச் சட்டத்தின் கீழ் அவசியமான தேர்தல் தொகுதி எல்லை நிர்ணயப் பணிகள் நிறைவடையாததால் தேர்தலை நடத்துவதில் சட்டரீதியான தடைகள் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
பழைய விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழ் தேர்தலை நடத்திவிட்டு பின்னர் தேவையான சட்டத்திருத்தங்களை மேற்கொள்ளலாமென எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இதன்போது முன்மொழிந்தனர்.
தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் தேர்தல் வாக்குறுதிகளுக்கும் நடைமுறைச் செயற்பாடுகளுக்கும் இடையிலான இடைவெளி குறித்தும் கவனம் செலுத்தப்பட வேண்டியுள்ளது.
2024ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ என்ற தேர்தல் விஞ்ஞாபனத்தின் 230ஆம் பக்கத்தில், காலவரையின்றிப் பிற்போடப்பட்டுள்ள மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றத்தேர்தல்களை ஓராண்டுக்குள் நடத்தி மக்கள் நிர்வாகத்தில் பங்குகொள்வதற்கான வாய்ப்பை வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டிருந்தது.
எனினும், 2025 மே மாதத்தில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் நடத்தப்பட்ட போதிலும் மாகாண சபைத் தேர்தல்கள் இதுவரை நடத்தப்படவில்லை. இதனால், கொள்கைப் பிரகடனத்தில் முன்வைக்கப்பட்ட உறுதிமொழியை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள தாமதம் விமர்சனத்துக்கு உட்பட்டுள்ளது.
2025 டிசம்பர் 19ஆம் திகதி பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, 2017ஆம் ஆண்டின் திருத்தச் சட்டத்தின் கீழான தேர்தல் தொகுதி எல்லை நிர்ணயப் பணிகள் நிறைவுபெறாததே தேர்தல் நடத்தப்படாமைக்குக் காரணம் என விளக்கமளித்திருந்தார்.
எல்லை நிர்ணயத்தை நிறைவுசெய்து தேர்தலை நடத்துவதா அல்லது 2017ஆம் ஆண்டின் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு தேர்தலை நடத்துவதா என்பது தொடர்பில் ஆராயப்படுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். மேலும், 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் தேர்தலை நடத்துவதற்கான நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
எனவே, தேர்தலை நடத்துவதற்கான சட்டச்சிக்கல்கள் தொடர்வதை மட்டும் காரணமாக முன்வைப்பதற்குப் பதிலாக, அவற்றைத் தீர்ப்பதற்கான காலக்கெடுவையும் அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்கவும் சட்டத் திருத்தங்களைப் பாராளுமன்றம் விரைவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார். தேர்தல் செய்திகள்
புதிய தேர்தல் முறைமையின் கீழ் பெண்கள் மற்றும் இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்கான ஐந்து முன்மொழிவுகளையும் தேர்தல் ஆணைக்குழு முன்வைத்துள்ளது. பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் உரிய அரசியல் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவது தேர்தல் சீர்திருத்தத்தின் முக்கிய அம்சமாகக் கருதப்படுகிறது.
இதனுடன், தேர்தல் தினத்தன்று வாக்களிப்பு நிலையத்துக்குச் செல்ல இயலாதவர்களின் வாக்குரிமையைப் பாதுகாப்பதற்கான மாற்று வாக்களிப்பு முறைமை தொடர்பிலும் பெஃப்ரல் அமைப்பு விரிவான ஆய்வை மேற்கொண்டுள்ளது.
முறையே அவ்வமைப்பு அண்மையில் வெளியிட்ட அறிக்கையின்படி, 23 அரசியல் கட்சிகளுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல்களில் தபால் மூல வாக்களிப்பு உரிமையை விரிவுபடுத்துவதற்கு 22 கட்சிகள், அதாவது 96 சதவீதமானவை, ஆதரவு தெரிவித்துள்ளன. ஒரு கட்சி மாத்திரம் இதற்கு உடன்படவில்லை.
தற்போது தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அரச ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்டுள்ள தபால் மூல வாக்களிப்பு உரிமையைத் தனியார் துறை ஊழியர்கள், சுதந்திர வர்த்தக வலயப் பணியாளர்கள், விளக்கமறியலில் உள்ள சந்தேகநபர்கள், வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளர்கள், மாற்றுத்திறனாளிகள், தேர்தல் கண்காணிப்பாளர்கள், ஊடகவியலாளர்கள், பாதுகாப்புப் பிரிவினர், வெளிநாடுகளில் பணிபுரிவோர், இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் மற்றும் அகதிகள் ஆகியோருக்கும் விரிவுபடுத்த வேண்டுமென முன்மொழியப்பட்டுள்ளது.தேர்தல் செய்திகள்
முற்கூட்டிய வாக்களிப்பு, மாற்று வாக்களிப்பு நிலையங்கள், நடமாடும் வாக்களிப்பு வசதிகள் மற்றும் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கான வாக்குரிமை ஆகிய ஏனைய நான்கு முன்மொழிவுகளும் அரசியல் கட்சிகளின் கருத்தறிதலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
இவற்றுக்கு எந்தவொரு கட்சியும் நேரடியாக எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்றாலும், தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்திய கட்சிகளின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. குறிப்பாக, 13 அரசியல் கட்சிகள் நிபந்தனைகளின்றி வாக்குரிமையை விரிவுபடுத்துவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
ஐந்து கட்சிகள் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களையும் இரட்டைக்குடியுரிமை கொண்டவர்களையும் வாக்களிக்கும் செயற்பாட்டில் உள்ளடக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளன. மூன்று கட்சிகள் கணினி முறைமைப் பாதுகாப்பு, மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரிவோருக்கான நடைமுறை ஏற்பாடுகள், தேர்தல் பிரசாரச் சமத்துவம் மற்றும் கண்காணிப்பு தொடர்பான பிரச்சினைகளை எழுப்பியுள்ளன.
பெஃப்ரல் அமைப்பின் மதிப்பீட்டின்படி, தேர்தல் தினத்தன்று வாக்களிப்பு நிலையத்தைச் சென்றடைய முடியாமை உள்ளிட்ட நடைமுறைத் தடைகளால் ஒரு மில்லியனுக்கும் அதிகமான வாக்காளர்கள் தமது வாக்குரிமையைப் பயன்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது.
எனவே, சிறைச்சாலைகள், வைத்தியசாலைகள் போன்ற இடங்களில் நிலையான அல்லது தற்காலிக வாக்களிப்பு நிலையங்களை அமைப்பதுடன் முற்கூட்டிய வாக்களிப்பையும் அறிமுகப்படுத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களின் வாக்குரிமை தொடர்பிலும் அரசாங்கத்தின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உறுதிமொழிகள் இடம்பெற்றுள்ளன. அதன் 194 மற்றும் 221ஆம் பக்கங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஈடுபட்டுள்ள இலங்கையர்களின் வாக்குரிமையை உறுதிப்படுத்துவது தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 2025 செப்டெம்பர் 15ஆம் திகதி அமைச்சரவைத் தீர்மானத்தின் மூலம் வெளிநாட்டு வாழ் இலங்கையர்கள் வாக்களிப்பதற்கான சட்ட ஏற்பாடுகளை ஆராய்வதற்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்தியா, பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் நடைமுறைகளும் இதற்கான உதாரணங்களாக முன்வைக்கப்பட்டுள்ளன.
மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசியல் தீர்மானம் எடுக்கப்பட்டால், தேவையான சட்டத் திருத்தங்களை மூன்று மாத காலப்பகுதிக்குள் மேற்கொள்ள முடியும் என்பதே பெஃப்ரல் அமைப்பின் நிலைப்பாடாகும். அரசியல் செய்திகள்
இதற்கமைய, அரசாங்கம் தேர்தல் முறைமை தொடர்பான சட்டத் தடைகளை நீக்கி, பாராளுமன்றத்தில் தேவையான திருத்தங்களை நிறைவேற்றி, தேர்தல் ஆணைக்குழுவுக்கு உரிய அதிகாரத்தையும் கால அவகாசத்தையும் வழங்க வேண்டும். 2027ஆம் ஆண்டில் தேர்தலை நடத்துவதற்கான தெளிவான கால அட்டவணையை அறிவிப்பதும் அவசியமாகியுள்ளது.
மாகாண சபைகள் இல்லாத நிர்வாகச் சூழல் அதிகாரப்பகிர்வு மற்றும் மக்கள் பிரதிநிதித்துவம் தொடர்பான கேள்விகளையும் தீவிரப்படுத்தியுள்ளது.
குறிப்பாக வடக்கு, கிழக்கு உள்ளிட்ட மாகாணங்களில் காணி, கல்வி, சுகாதாரம், பிரதேச அபிவிருத்தி மற்றும் உள்ளூர் நிர்வாகம் தொடர்பான மக்களின் எதிர்பார்ப்புகளை மக்கள் பிரதிநிதிகள் ஊடாக முன்வைப்பதற்கான வாய்ப்பு சுருங்கியுள்ளது.
எனவே, மாகாண சபைத்தேர்தலை நடத்துவது என்பது வெறுமனே அரசியல் கட்சிகளுக்கிடையிலான அதிகாரப்போட்டியல்ல. மக்களின் ஜனநாயக உரிமையையும் அரசியலமைப்பின் கீழான அதிகாரப்பகிர்வு கட்டமைப்பையும் செயற்பாட்டில் வைத்திருப்பதற்கான அடிப்படைக் கடமையாகும்.அரசியல் செய்திகள்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தனது தேர்தல் கொள்கைப் பிரகடனத்தில் வழங்கிய உறுதிமொழிகளுக்கு ஏற்ப மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான நடைமுறைத் தீர்வுகளை முன்வைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
மக்களின் வாக்குரிமையை உறுதிப்படுத்துவதாக வழங்கப்பட்ட வாக்குறுதி நடைமுறையில் நிறைவேற்றப்படுமா என்பதற்கான விடை, அரசாங்கத்தின் அடுத்தகட்ட அரசியல் தீர்மானங்களிலேயே தங்கியுள்ளது.
(க.சிவலிங்கமூர்த்தி)
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!