தமிழ்பேசும் சமூகங்கள் எதிர்நோக்குகின்ற பொதுவான பிரச்சினைகளின் தீர்வுகளுக்காக குரல் கொடுப்பதற்காக 'பொதுமேடை' அமைத்த ஆறு தமிழ், முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகள் அண்மையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியபோது நீண்டகாலமாக தாமதிக்கப்பட்டுவரும் மாகாணசபை தேர்தல்களை விரைவாக நடத்த வேண்டும் என்று அவரிடம் கோரிக்கை விடுத்தனர்.
அதற்கு பதிலளித்த ஜனாதிபதி, மாகாண சபைகளுக்கு எந்த முறையின் கீழ் தேர்தல்களை நடத்துவது என்பது குறித்து ஆராய்ந்து, வரும் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் தீர்மானத்தை அறிந்து அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
இந்த பதிலை அறிவதற்கு தமிழ்பேசும் கட்சிகள் ஜனாதிபதியைச் சந்தித்திருக்க வேண்டியதில்லை. மாகாணசபை தேர்தல்கள் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு ஏற்கெனவே தெரிந்த ஒன்றுதான்.
ஜனாதிபதி திசாநாயக்கவின் பதிலைக் கேட்டவுடன் பாராளுமன்ற தெரிவுக் குழுவில் உறுப்பினர்களாக இருக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுவின் தலைவர் சாணக்கியன் இராசமாணிக்கமும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொதுச் செயலாளர் நிசாம் காரியப்பரும் " தெரிவுக் குழுவின் தீர்மானத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதாக கூறியதற்கு பதிலாக, நீங்கள் மாகாணசபை தேர்தல்களை நடத்த முடியாது என்றே கூறியிருக்கலாம்" என்று அவரிடம் கூறியதாக தெரிய வந்தது.
தெரிவுக்குழு அமைக்கப்பட்டபோது அதன் தலைவரான வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹேரத் மூன்று மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று அறிவித்தார். தெரிவுக்குழுவின் முதலாவது கூட்டம் கடந்த மார்ச் 17 ஆம் திகதி நடைபெற்றது. அதற்கு பிறகு ஐந்து மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும், எந்த அறிக்கையையும் காணவில்லை.
மூன்று மாதங்களில் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்ற தெரிவுக் குழுவின் ஆணையை சாணக்கியன் ஒரு தடவை சுட்டிக்காட்டிய போது மூன்று மாதங்களில் முதல் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்பதே ஆணை என்று விஜித்த ஹேரத் பதிலளித்தார். மாகாணசபை தேர்தல்களை தற்போதைக்கு நடத்தாமல் இருப்பதற்காகவே தெரிவுக்குழுவை அரசாங்கம் நியமித்தது என்பதை வெளிக்காட்டிய சமிக்ஞையாக அமைச்சர் ஹேரத்தின் பதில் அமைந்திருந்தது.
பதவிக்கு வந்து ஒரு வருடத்திற்குள் மாகாணசபை தேர்தல்களை நடத்துவதாக 2024 தேர்தல் விஞ்ஞாபனத்தில் தேசிய மக்கள் சக்தி நாட்டு மக்களுக்கு வாக்குறுதி வழங்கியிருந்தது. தற்போது இரு வருடங்கள் நிறைவடையவிருக்கும் நிலையில், எல்லை நிர்ணயக்குழுவின் அறிக்கையின் பின்னரே மாகாணசபை தேர்தல்களை நடத்த முடியும் என்பது உட்பட பல்வேறு காரணங்களைக் கூறி காலத்தைக் கடத்தும் கைங்கரியங்களில் அரசாங்கம் ஈடுபடுகிறது.அண்மையில் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு கொழும்பு வந்திருந்த இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி, ஜனாதிபதி திசாநாயக்கவை சந்தித்துப் பேசிய வேளையில் 'மாகாண சபை தேர்தல்களை விரைவாக நடத்தி தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவுசெய்வதற்காக அரசியலமைப்பு ஏற்பாடுகளை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு வலியுத்தியிருந்தார். அது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சின் அறிக்கையில் கூறப்பட்டதே தவிர, ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு வெளியிட்ட அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
இந்திய அரசாங்கத் தரப்பில் மாகாணசபை தேர்தல்கள் குறித்து அக்கறை காட்டப்படுகிறது என்பதையோ தங்களைச் சந்தித்த இந்திய வெளியுறவு செயலாளரும் அது பற்றி பேசினார் என்பதையோ பொது வெளியில் கூறுவதற்கு தயக்குகின்ற தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் இந்த விடயத்தில் நேர்மையான அணுகுமுறையை எதிர்பார்க்க முடியாது என்பது தெளிவாகத் தெரிகிறது.
ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவைச் சந்தித்த தமிழ்பேசும் கட்சிகளின் பிரதிநிதிகள் மாகாணசபை தேர்தல்கள் தொடர்பாக ஜனாதிபதி கூறிய பதில் குறித்து அவரிடமும் கூறினார்கள்.
வெளியுறவு செயலாளர் மிஸ்ரி, தமிழ்பேசும் கட்சிகளைக் கூட்டாகச் சந்திக்கவில்லை. தனித்தனியாக நடந்த அந்த சந்திப்புக்களில் வடக்கு, கிழக்கு தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகள் மாகாணசபை தேர்தல்களை விரைவாக நடத்தமாறு இலங்கை அரசாங்கத்தை இந்தியா வலியுறுத்த வேண்டும் என்ற வழமையான கோரிக்கையை முன்வைத்தனர்.
அந்த தேர்தல்களை நடத்துவதுடன் அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்தி தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவுசெய்ய வேண்டும் என்று இலங்கை அரசாங்கத்தை இந்தியா தொடர்ந்து வலியுறுத்தும் என்பதே அவரின் பதிலாக இருந்தது.
இந்தியாவிடம் இலங்கை இனப்பிரச்சினை விடயத்தில் அண்மைய வருடங்களாக காணக் கூடியதாக இருக்கின்ற ஒரு 'விசித்திரமான' அணுகுமுறையை விக்ரம் மிஸ்ரியின் கொழும்பு விஜயத்தின் போதும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
1987 ஜூலை இந்திய-இலங்கை சமாதான உடன்படிக்கையை தொடர்ந்து மாகாண சபைகளை அறிமுகப்படுத்துவதற்காக இலங்கை அரசியலமைப்புக்கு கொண்டுவரப்பட்ட 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று புதுடில்லி, கொழும்பைக் கேட்பதில்லை. பொதுப்படையாக அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றே கேட்கப்படுகிறது. இலங்கையின் அரசியலமைப்பில் 13 ஆவது திருத்தத்தை விடவும் வேறு எந்த ஏற்பாடுகளில் இந்தியாவுக்கு அக்கறை இருக்கிறது என்று விளங்கவில்லை.
1987 ஆம் ஆண்டில் 13 ஆவது திருத்தம் நடைமுறைக்கு வந்த நாளில் இருந்து இந்திய தலைவர்கள், இலங்கை தலைவர்களுடனான தங்களது சந்திப்புக்களில் அந்த திருத்தம் குறித்து குறிப்பிடுவது ஒரு வழமையாகவே இருந்து வந்தது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி 2015 மார்ச்சில் கொழும்புக்கு முதற்தடவையாக விஜயம்செய்த வேளையில் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு அன்றைய அரசாங்கத்தை வலியுறுத்தினார்.

கோட்டாபய ராஜபக் ஷ 2019 நவம்பரில் புதுடில்லிக்கு விஜயம் செய்தபோது, 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு பிரதமர் மோடி நேரடியாகவே வலியுறுத்தினார்.
2019 நவம்பர் 29 கோட்டாபயவுடனான கூட்டுச் செய்தியாளர்கள் சந்திப்பில் மோடி,
"சமத்துவம், நீதி, அமைதி மற்றும் மரியாதையைப் பெறுவதற்கான தமிழர்களின் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில், நல்லிணக்கச் செயல்பாடுகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லும் என்று நான் நம்புகிறேன். இதில் 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதும் அடங்கும்" என்று கூறினார். ஆனால், கோட்டாபய அது குறித்து எதையும் குறிப்பிடுவதை தவிர்த்துக்கொண்டார்.
ஆனால், ஜனாதிபதி திசாநாயக்க 2024 டிசம்பர் நடுப்பகுதியில் புதுடில்லிக்கு மேற்கொண்ட விஜயத்தின்போது வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் இனப்பிரச்சினை தொடர்பாகவோ அல்லது 13 ஆவது திருத்தம் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. இலங்கை ஜனாதிபதியுடன் சேர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த வேளையிலும் இந்திய பிரதமர் 13 ஆவது திருத்தம் குறித்து பிரத்தியேகமாக எதையும் கூறவில்லை.
அதற்கு முன்னதாக, 2023 ஜூலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் புதுடில்லி விஜயத்தின் போது வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் 13 திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று குறிப்பிடப்படவில்லை. ஆனால், விக்கிரமசிங்கவுடனான கூட்டுச் செய்தியாளர்கள் சந்திப்பில் மோடி 13 ஆவது திருத்தத்தின் நடைமுறைப்படுத்தலைப் பற்றி குறிப்பிட்டார்.
குறிப்பாக, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்த பிறகு 13 ஆவது திருத்தம் என்று பிரத்தியேகமாகக் குறிப்பிடாமல் அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு கேட்பதே மோடி அரசாங்கத்தின் பல்லவியாக இருக்கிறது. அரசியலமைப்பிற்குள் தான் 13 ஆவது திருத்தமும் அடங்குகிறது என்று இதை மெத்தனமாக தமிழர்களினால் நோக்க முடியாது.
இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் வடக்கு,கிழக்கு தமிழ்க் கட்சிகளை சந்தித்த சந்தர்ப்பங்களிலும் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துவோம் என்று கூறுவதை தவிர்த்தே வந்திருக்கிறார்.
அந்த திருத்தத்துக்கு தென்னிலங்கையில் எதிர்ப்பு இருப்பதால் அது பற்றி கூறுவதன் மூலம் ஜனாதிபதி திசாநாயக்கவுக்கும் அவரது அரசாங்கத்துக்கும் உள்நாட்டில் அரசியல் ரீதியில் அசௌகரியத்தை கொடுப்பதற்கு புதுடில்லி தற்போது விரும்பவில்லை என்று தெரிகிறது. அதனால், மாகாணசபை தேர்தல்கள் விடயத்தில் புதுடில்லியிடமிருந்து நெருக்குதல் வரக்கூடிய சாத்தியமில்லை. வேறு எந்த நாடும் இதில் அக்கறை காண்பிக்கப் போவதுமில்லை.
தென்னிலங்கையில் உள்ள எதிரணி கட்சிகள் மாகாணசபை தேர்தல்களை நடத்துமாறு அரசாங்கத்துக்கு சவால் விடுப்பது தேசிய மக்கள் சக்தி 2025 உள்ளூராட்சி தேர்தல்களில் சந்தித்ததை விடவும் கூடுதலான வாக்கு வீழ்ச்சியை மாகாணசபை தேர்தல்களில் சந்திக்கும் என்ற எதிர்பார்ப்பிலேயேயாகும்.
அரசாங்கத்துக்கு எதிராகப் பயன்படுத்துவதற்கு வேறு பிரச்சினைகள் கிடைக்கும்போது எதிரணி கட்சிகளின் கவனம் வேறு திசையில் திரும்பிவிடும். மேல்நிலை நீதிமன்றங்களின் நீதிபதிகளின் ஓய்வு வயதெல்லையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் கொண்டு வரவிருக்கும் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான சர்ச்சைக்கு மத்தியில் மாகாணசபை தேர்தல்களை அந்த கட்சிகள் மறந்து விட்டன.
இத்தகைய பின்னணியில், அண்மையில் ஒன்றிணைந்த தமிழ் பேசும் கட்சிகள் மாகாணசபை தேர்தல்களை வலியுறுத்தி வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் மக்களை அணிதிரட்டி ஜனநாயக ரீதியான வெகுஜனப் போராட்டங்களை (சத்தியாக்கிரகம், பாதயாத்தரை போனறவை) நடத்த முன்வர வேண்டும்.
வடக்கு, கிழக்கு தமிழ் கட்சிகள், மலையக தமிழ் கட்சிகள் மற்றும் முஸ்லிம் கட்சிகள் ஒன்றிணைந்து மாகாண சபைகளுக்காகவும் அதிகாரப் பகிர்வுக்காகவும் கோரிக்கையை முன்வைத்து போராடும் போது அது தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் பெரும் கவனத்தைப் பெறும்.
வெளியுலகின் நெருக்குதல் என்பது கூட, உள்நாட்டில் மக்கள் கொடுக்கும் ஜனநாயக ரீதியிலான நெருக்குதலின் பின்னணியிலேயே வரும். அமைதியான முறையில் வலுவான ஜனநாயகப் போராட்டங்கள் இல்லாதவரை அரசாங்கத்தின் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது.
-வீரகத்தி தனபாலசிங்கம்-
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!