தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் 23ஆம் திகதி 17ஆவது சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. மே மாதம் 4ஆம் திகதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், பாரம்பரிய திராவிடக் கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க. ஆகியவற்றை பின்னுக்குத்தள்ளி, அரசியலுக்குப் புதிய வரவான ‘தமிழக வெற்றிக் கழகம்’ (த.வெ.க.) அதிக இடங்களில் வெற்றி பெற்றுப் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
என்றாலும், தனித்து ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்கள் த.வெ.க.வுக்குக் கிடைக்காததால், ஆட்சி அமைப்பதில் ஆரம்பத்தில் சிக்கல் நீடித்தது. இறுதியாகக் காங்கிரஸ் (5), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (2), இந்திய கம்யூனிஸ்ட் (2), விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (2), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (2) ஆகிய கட்சிகள் ஆதரவு அளித்ததைத் தொடர்ந்து, த.வெ.க.வின் 107 இடங்களுடன் சேர்த்து பெரும்பான்மைக்குத் தேவையான 120 இடங்கள் கிடைத்தன.
முதலமைச்சர் விஜய்
அதனைத் தொடர்ந்து, கடந்த மே மாதம் 10ஆம் திகதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பிரமாண்ட விழாவில், தமிழகத்தின் 12ஆவது முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றனர். தொடர்ந்து, மே 21ஆம் திகதி நடைபெற்ற 2ஆவது அமைச்சரவை விரிவாக்கத்தில் 23 பேரும், 22ஆம் திகதி நடைபெற்ற 3ஆவது அமைச்சரவை விரிவாக்கத்தில் இருவரும் அமைச்சர்களாகப் பதவியேற்றுக்கொண்டனர். தற்போது அவர்கள் அனைவருக்கும் துறைகளும் ஒதுக்கப்பட்டுவிட்டன.
தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்று நாளை ஜூன் 10ஆம் திகதியுடன் ஒரு மாத காலம் நிறைவடைகிறது. இலங்கையின் அண்டை மாநிலமான தமிழகத்தில் ஏற்பட்டுள்ள இந்த அரசியல் மாற்றம், இருதரப்பு உறவுகளிலும் முக்கியத்துவத்தைப் பெற்றுள்ள பின்னணியில், பதவியேற்ற நாள் முதல் இந்த ஒரு மாத காலத்தில் அவருடைய செயல்பாடுகள், நடத்திய கூட்டங்கள் மற்றும் புதிய அறிவிப்புகள் ஆகியவற்றின் திகதி வாரியான தொகுப்பு வருமாறு:
கட்டணமில்லா மின்சாரம்
10-05-2026: முதலமைச்சராகப் பதவியேற்ற அன்றைய தினமே விஜய் மூன்று முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். “இரு மாதங்களுக்கு 500 யூனிட்டுகள் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு மின்நுகர்வோர்களுக்கு, 200 யூனிட்டுகள் கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படும்; பெண்களின் பாதுகாப்புக்காக ‘சிங்கப் பெண்’ சிறப்பு அதிரடிப்படை மாநிலம் முழுவதும் உருவாக்கப்படும்; தமிழ்நாட்டில் போதைப்பொருள் கலாசாரத்தை ஒழிக்க 65 போதைப்பொருள் தடுப்புப் படைகள் அமைக்கப்படும்,” என்பவையே அந்த மூன்று திட்டங்களாகும்.
வெள்ளை அறிக்கை
தொடர்ந்து உரையாற்றிய முதலமைச்சர் ஜோசப் விஜய், “தமிழக அரசின் கஜானா துடைக்கப்பட்டிருக்கிறது; ரூபாய் 10 லட்சம் கோடி கடன் உள்ளது. எனவே, தமிழக அரசின் நிதி நிலைமை தொடர்பாக விரைவில் ‘வெள்ளை அறிக்கை’ வெளியிடப்படும்,” என்று அறிவித்தார்.
டாஸ்மாக் மூடல்
* 11-05-2026: கல்வி நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகே செயல்படும் டாஸ்மாக் (மதுபான) கடைகளைக் கண்டறிந்து மூடுவதற்கு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டார்.
* 12-05-2026: கல்வி நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகே மொத்தம் 717 டாஸ்மாக் கடைகள் இருப்பது கண்டறியப்பட்டு, முதற்கட்டமாக அன்றைய தினமே 50 கடைகள் மூடப்பட்டன.
*13-05-2026: தமிழக சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. அரசு வெற்றி பெற்றது. அரசுக்கு ஆதரவாக 144 வாக்குகளும், எதிராக 22 வாக்குகளும் கிடைத்தன; 5 பேர் நடுநிலை வகித்தனர். பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க. அவையிலிருந்து வெளிநடப்பு செய்தது. வாக்கெடுப்புக்குப் பின் பேசிய முதலமைச்சர் விஜய், “மக்கள் நலனே எங்களுக்கு முக்கியம்; முந்தைய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் தொடரும்,” என்று உறுதியளித்தார்.
அகவிலைப்படி உயர்வு* 14-05-2026: அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை (DA) 2 சதவீதம் உயர்த்தி வழங்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டார். இதன் மூலம் அகவிலைப்படி 58 சதவீதத்திலிருந்து 60 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இம்முடிவினால் 16 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவர் எனத் தெரிவிக்கப்பட்டது.
அன்றைய தினமே, “ஜவுளித் தொழிலுக்குக் கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும்,” என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதினார். பிரதமர் மோடிக்கு அவர் எழுதிய முதல் கடிதம் இதுவாகும்.
* 15-05-2026: தமிழ்நாட்டிற்குத் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், முன்னணித் தொழில் நிறுவனங்களின் அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தினார். இதில் ‘பி.எம்.டபிள்யூ.’ (BMW) குழும மேலாண்மை இயக்குநர் தாமஸ் டோஸ், ‘யமஹா மோட்டார்ஸ் இந்தியா’ குழுமத்தின் தலைவர் ஜிம் ஆட்டா, ‘டாபே’ (TAFE) நிறுவனத்தின் தலைவர் மல்லிகா சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
* 16-05-2026: பள்ளி, கல்லூரிகள் அருகே போதைப்பொருள் விற்பனையைத் தடுக்கத் தொடர் சோதனைகளை நடத்தத் தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும், மே 10ஆம் திகதி முதல் 200 யூனிட் இலவச மின்சாரத்தைக் கணக்கிடவும் ஆணையிடப்பட்டது.
1* 7-05-2026: முதலமைச்சராக விஜய் பதவியேற்ற பிறகு, முதன்முறையாக மே 22ஆம் திகதி பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. (எனினும், அவர் மே 27ஆம் திகதியே டெல்லி சென்றார்).
அம்மா உணவகம்* 18-05-2026: தமிழகம் முழுவதும் உள்ள ‘அம்மா உணவகங்களை’ச் சீரமைத்து, சுவையுடன் கூடிய தரமான உணவுகளை விநியோகிக்குமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டார். மேலும், முதலமைச்சரின் செயலாளர்களாக நியமிக்கப்பட்ட செந்தில்குமார் (செயலாளர் 1), லட்சுமி பிரியா (செயலாளர் 2), அண்ணாதுரை (செயலாளர் 3), விஷ்ணு (கூடுதல் செயலாளர்) ஆகியோருக்குத் துறைகள் ஒதுக்கப்பட்டன. அதே நாளில், முதலமைச்சருடன் பல்வேறு தொழில் மற்றும் வர்த்தக அமைப்பினரும் ஆலோசனை மேற்கொண்டனர்.
* 19-05-2026: தமிழ்நாட்டிற்குத் தேவையான உரங்களைத் தடையின்றி வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதினார்.
* 20-05-2026: காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஒப்பந்தப் புள்ளி (டெண்டர்) முறைகேட்டில் ஈடுபட்ட இரண்டு பெண் அதிகாரிகளைப் பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதே நாளில், தமிழ்நாடு முழுவதும் மருத்துவக் காரியங்களுக்காக 40 புதிய வாகனங்களை முதலமைச்சர் விஜய் கொடியசைத்துத் தொடங்கிவைத்தார். ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படையின் ஐ.ஜி.யாக பவானீஸ்வரி நியமிக்கப்பட்டார்.
மின் கட்டண உயர்வு இல்லை* 21-05-2026: தமிழக அமைச்சரவையின் 2ஆவது விரிவாக்கத்தில் 23 புதிய அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர். இதன் மூலம், 59 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இருவர் தமிழக அமைச்சரவையில் இடம்பிடித்தனர். அன்றைய தினமே, “மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் தற்போதைக்கு அரசுக்கு இல்லை,” என்று அத்துறை அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.
* 22-05-2026: “அரசு அலுவலகங்களில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் நடைபெற்ற பண வசூலைத் தடுத்து நிறுத்திவிட்டோம்,” என்று அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கூறினார். தமிழக அமைச்சரவையின் 3ஆவது விரிவாக்கத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த ஷாஜகான், வன்னி அரசு ஆகியோர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். அதே நாளில், “அரசு நிர்வாகத்தில் த.வெ.க.வினர் யாரும் தலையிடக் கூடாது,” என்று அமைச்சர் என்.ஆனந்த் எச்சரிக்கை விடுத்தார். மேலும், சென்னை தலைமைச் செயலக வளாகத்தை முதலமைச்சர் விஜய் மின்கல (Battery) காரில் சுற்றிப் பார்வையிட்டார்.
844 ரவுடிகள் கைது* 23-05-2026: “கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை பெற்றுத்தர அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்,” என்று முதலமைச்சர் ஜோசப் விஜய் உறுதியளித்தார். அன்றைய தினமே, தமிழகத்தில் கடந்த 3 நாட்களில் மட்டும் 844 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. மேலும், “பணியாளர்கள் காலை 10 மணிக்குள் அலுவலகத்திற்கு வருகை தர வேண்டும்,” என்று பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்தது.
* 24-05-2026: பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரை முதலமைச்சர் விஜய் தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆறுதல் கூறினார். அக்குடும்பத்தினருக்கு நிவாரண உதவியாக ரூபாய் 7 லட்சம் வழங்கப்பட்டது.
* 25-05-2026: குறு விவசாயிகள் பெற்ற ரூபாய் 50 ஆயிரம் வரையிலான பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்ய முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டார். இதன் மூலம் 14 லட்சத்து 22 ஆயிரம் விவசாயிகள் பயன்பெறுவர் எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும், புதிய திரைப்படங்கள் வெளியாகும் நாள் முதல் 7 நாட்களுக்குத் தினசரி 5 காட்சிகள் திரையிட முதலமைச்சர் விஜய் அனுமதி அளித்தார். அதே நாளில், “பாலியல் வழக்குகளை விரைவாக நடத்தி, குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும்,” என்று அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.
* 26-05-2026: “கோடை வெயில் சுட்டெரிப்பதைக் கருத்தில்கொண்டு, பள்ளிகள் ஜூன் 4ஆம் திகதி திறக்கப்படும்,” என்று தமிழக அரசு அறிவித்தது. முன்னதாக, ஜூன் 1ஆம் திகதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதே நாளில், “மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும்,” என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதினார்.
* 27-05-2026: முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக புதுடெல்லி சென்ற விஜய், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார். அப்போது மேகதாது அணை மற்றும் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் உள்ளிட்ட 4 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை அவரிடம் அளித்தார். தொடர்ந்து, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்த முதலமைச்சர் விஜய்: கோவை, மதுரை, ஓசூர் ஆகிய நகரங்களில் நிறைவேற்றப்படவுள்ள மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்தார்.
மேகதாது அணை விவகாரம் * 28-05-2026: புதுடெல்லியில் சட்ட நிபுணர்களுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தியதைத் தொடர்ந்து, மேகதாது அணைத் திட்டத்திற்குத் தடை கோரி, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தமிழக அரசு சார்பில் வழக்குத் தொடரப்பட்டது.
* 29-05-2026: தமிழகத்தின் புதிய சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி.யாக மகேஷ்குமார் அகர்வால் நியமிக்கப்பட்டார். அதே நாளில், திருச்செந்தூர் முருகன் கோயிலில் முகக்கவசம் அணிந்து சென்று இரகசிய ஆய்வுப் பணியில் ஈடுபட்ட அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷிடம், ரூபாய் 4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அர்ச்சகர் உட்பட 5 ஊழியர்கள் அதிரடியாகப் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
* 30-05-2026: தமிழ்நாடு அரசின் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் ஜி.கிருஷ்ணராஜாவைத் தமிழக அரசு அதிரடியாகப் பதவியிறக்கம் செய்தது. மேலும், திட்ட மற்றும் கட்டட அனுமதிகளை உள்ளாட்சி அமைப்புகள் குறிப்பிட்ட காலவரையறைக்குள் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது.
* 31-05-2026: “அகத்தியர் மலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை 6 மாதங்களுக்குள் அகற்றுங்கள்,” என்று தமிழக அரசுக்கு இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
* 01-06-2026: “லஞ்சம், ஊழல் மற்றும் பாகுபாடு இல்லாத ஆட்சியைத் தருவேன்; நதிநீர் பங்கீடு உள்ளிட்ட மாநில உரிமைகளை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டேன்,” என்று திருச்சியில் நடைபெற்ற வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் முழங்கினார்.
* 02-06-2026: வீடுகளுக்குக் குடிநீர் வழங்கும் ‘ஜல் ஜீவன் மிஷன் 2.0’ திட்டத்திற்காக, மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் இடையே முதலமைச்சர் விஜய் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்தானது. மேலும் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கான தடையை மேலும் ஓராண்டிற்கு நீட்டித்துத் தமிழக அரசு உத்தரவிட்டது. அதே நாளில், முதலமைச்சர் விஜய்யைச் சென்னை தலைமைச் செயலகத்தில் இந்திய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் சந்தித்துப் பேசினார்.
* 03-06-2026: ஒப்பந்தப் புள்ளி நடைமுறைகள் மற்றும் கட்டட வரைபட அனுமதி வழங்கும் செயல்முறைகளில் முழுமையான வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்று அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தமிழக அரசு கடுமையான உத்தரவைப் பிறப்பித்தது.
* 06-06-2026: போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகப் பணம் பெற்றதாக எழுந்த பழைய குற்றச்சாட்டைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த அனுமதிக்குமாறு ஆளுநர் ஆர்.என்.ரவிக்குத் தமிழக அரசு கடிதம் எழுதியது.
* 07-06-2026: “கூட்ட நெரிசல் மற்றும் முறேகடுகளைத் தடுக்கும் வகையில், தமிழகத்தின் 50 முக்கிய திருக்கோயில்களில் ‘ஆன்லைன்’ (நிகழ்நிலை) முன்பதிவு தரிசன முறை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது,” என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார்.
* 08-06-2026: ‘நார்வே செஸ் - 2026’ தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக இளம் வீரர் பிரக்ஞானந்தாவுக்குத் தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ரூபாய் 50 லட்சம் ஊக்கத்தொகையினை முதலமைச்சர் விஜய் வழங்கினார். மேலும், பிரக்ஞானந்தாவுடன் அவரே செஸ் விளையாடி மகிழ்ந்தார்.
‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படை திட்டம்* 09-06-2026: குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்புக்காகப் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ள ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று மாலை முறைப்படி தொடங்கிவைக்கிறார்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!