முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது 81ஆவது பிறந்த தினத்தை இன்று புதன்கிழமை (18) கொண்டாடுகிறார். இந்நிலையில், தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அவரது மூத்த புதல்வரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, தனது தந்தைக்காக சமூக ஊடகத்தில் பிறந்தநாள் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.
இந்த வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இந்த வருடம் உங்களது பிறந்தநாளன்று, உங்கள் அருகில் இருந்து உங்களுக்கு வாழ்த்துத் தெரிவிக்க முடியாமல், குடும்பத்தினர் மற்றும் அன்பானவர்களைப் பிரிந்து இந்தக் கடினமான காலத்தைக் கழிக்க நேரிட்டாலும், சிறைச்சாலைக் கம்பிகளுக்கும் அப்பால் உங்கள் மீது எனக்குள்ள அன்பும் மரியாதையும் எல்லையற்றதாக உணரப்படுவதை நான் பதிவு செய்கிறேன்.
வாழ்க்கையில் நாம் ஒருபோதும் எதிர்பாராத சவால்களை எதிர்கொண்ட சந்தர்ப்பங்களில், எமக்குப் பலமாக இருப்பது எமது பெற்றோரிடமிருந்து கிடைத்த அன்பும், முன்னுதாரணமும், வாழ்க்கைப் பாடங்களுமே ஆகும்.
அப்பா, தலைமைத்துவம் என்பது வெறுமனே ஒரு பதவியை வகிப்பது மாத்திரமல்ல என்பதை நீங்கள் எங்களுக்குக் கற்றுக்கொடுத்தீர்கள். அது பொறுப்புகளை ஏற்றுக்கொள்வதும், சவால்களுக்கு மத்தியில் தளராது நிற்பதும், தான் நம்பும் கொள்கைக்காக அஞ்சாது நிற்பதுமே என்பதை உங்கள் வாழ்க்கையின் மூலம் எங்களுக்குக் காட்டினீர்கள்.
எமது நாட்டின் வரலாற்றில் மிகவும் இருண்ட காலப்பகுதியில், தாய்நாட்டின் ஆயிரக்கணக்கான தாய்மார்கள், தந்தையர்கள் மற்றும் அன்பான பிள்ளைகளுக்காக யாருக்கும் அஞ்சாது அமைதியை நிலைநாட்டிய அஞ்சாநெஞ்சம் கொண்ட தலைவர் நீங்கள்தான். அதற்காக நீங்கள் சுமந்த பொறுப்புகள், தியாகங்கள் மற்றும் சவால்களுக்கு மத்தியில் நீங்கள் தாங்கிக்கொண்ட பல விடயங்களை ஒரு மகனாக நான் மிக அருகிலிருந்து அறிவேன்.
இன்று நான் எதிர்கொள்ளும் இந்தக் கடினமான காலப்பகுதியில், நீங்கள் எனக்குக் கற்றுக்கொடுத்த பொறுமை, தைரியம் மற்றும் தளராத உறுதியின் பெறுமதியை நான் இன்னும் ஆழமாகப் புரிந்துகொண்டு வருகிறேன். ஒரு தந்தையின் இதயம் எவ்வளவு வலிமையானதாக இருக்க வேண்டும் என்பதை நான் உங்களிடமிருந்தே கற்றுக்கொண்டேன்.
பிள்ளை மீதான பாசத்தை இதயத்தின் ஆழத்தில் வைத்துக்கொண்டு, ஒரு வலிமையான தந்தையாக உலகின் முன்னால் முழு நாட்டினதும் பிள்ளைகளுக்கும் எவ்வாறு தந்தையாக இருக்க முடியும் என்பதை நான் உங்களிடமிருந்தே கற்றுக்கொண்டேன். இவை அனைத்தையும் தாங்கிக்கொண்டு உண்மைக்காகப் போராடும் நானும் ஒரு தந்தைதான்.
இன்று உங்கள் அருகில் இருக்க எனக்கு முடியாமல் போனாலும், உங்கள் இரத்த உறவில் உதித்த எனது பிள்ளைகள் இன்று உங்கள் அருகில் இருப்பார்கள். எனக்காக அவர்கள் உங்களை அரவணைத்துக் கொள்வார்கள். கைகளால் உங்களை அரவணைக்க முடியாத காரணத்தால், எழுத்துக்களால் உங்களை அரவணைக்க நினைத்தேன். ஏனெனில், தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான பிணைப்பைத் தொலைதூரத்தினால் உடைத்தெறிய முடியாது.
அரசியல் சூழலில் நீங்கள் அனுபவிக்க நேரிட்ட கஷ்டங்கள் மற்றும் அடக்குமுறைகள், அவதூறுகளுக்கு மத்தியில், கிருவாபத்துவின் மஹிந்த ராஜபக்ஷ எனும் மண்ணில் கால் பதித்த எனது தந்தைக்கு, உங்கள் அன்பான மூத்த மகனாகிய நான் தேக ஆரோக்கியத்தையும், மன வலிமையையும், எல்லையற்ற அன்பையும் இவ்வாறு எழுதி வைக்கிறேன் என மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!