வங்காள விரிகுடா கடற்பகுதியில் தற்போது ‘முரசு’ எனப் பெயரிடப்பட்ட புயல் உருவாகியுள்ள நிலையில், குறித்த கடற்பகுதிகளில் மிகப் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், கடல் அலைகள் மேலெழுவதனால் கடல் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து, கற்பிட்டியிலிருந்து மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு ஊடாக திருகோணமலை வரையான வடக்கு மற்றும் கிழக்கு கடலோரப் பகுதிகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் சிறிய படகுகள் மறுஅறிவித்தல் வரை கடலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த தெரிவிக்கையில்,
வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று (02) திங்கட்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு வெளியிடப்பட்ட அண்மைய வானிலை அறிவித்தலின்படி, மத்திய மேற்கு மற்றும் அதனை அண்மித்த வங்காள விரிகுடா கடற்பகுதியில் ‘முரசு’ என அழைக்கப்படும் புயல் உருவாகியுள்ளது.
இதனால், குறித்த கடற்பகுதிகளில் மிகப் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், கடல் அலைகள் மேலெழுவதால் கடல் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.
தற்போது குறித்த பகுதிகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சிறிய படகுகள், பலத்த காற்றுடன் கூடிய வானிலை காரணமாக பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், உடனடியாக பாதுகாப்பான பகுதிகளுக்கோ அல்லது மீண்டும் கரைக்கோ திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அதேவேளை, ஏனைய கடற்பகுதிகளில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவர்களும் தமது பகுதிகளில் நிலவும் காற்றின் வேகம் மற்றும் கடல் அலைகளின் தன்மை தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும், கடலுக்குச் செல்லும்போதும், மீன்பிடியில் ஈடுபடும்போதும், மீண்டும் கரைக்குத் திரும்பும்போதும் உயிர்காக்கும் அங்கிகளை அத்தியாவசிய பாதுகாப்பு உபகரணமாகக் கருதி கட்டாயமாக அணியுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலைமை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் கடற்றொழில் திணைக்களத்தினால் இனிவரும் நாட்களில் வெளியிடப்படும் வானிலை அறிவித்தல்களைத் தொடர்ந்து அவதானித்து, அதற்கேற்ப செயற்படுமாறும் மீனவ சமூகத்தினரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!