news@ilakkiyainfo.com

பிரிவுகள்

முல்லைத்தீவில் மாணவியை வன்புணர்ந்த பூசகரின் தண்டனை உறுதி

22 Nov, 2026

முல்லைத்தீவில் 2011ஆம் ஆண்டு தனது இல்லத்தில் தங்கியிருந்த 17 வயது இடம்பெயர்ந்த மாணவியைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட இந்துக் கோயில் பூசகர் ஒருவரின் மேன்முறையீட்டை நிராகரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், அவரது தண்டனையை உறுதி செய்துள்ளது.

அதேவேளை, தண்டனையை உறுதி செய்த இரண்டு நீதியரசர்கள் கொண்ட அமர்வு, அவருக்கு விதிக்கப்பட்டிருந்த 17 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனையை 13 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனையாகக் குறைத்துள்ளது.

வவுனியா மேல் நீதிமன்றம் வழங்கிய தண்டனைக்கு எதிராக நித்தியானந்தன் மோகன் ராஜ் என்பவர் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவின் தீர்ப்பை, நீதியரசர் அமல் ரணராஜாவுடன் இணைந்து நீதியரசர் கலாநிதி சுமுது பிரேமச்சந்திர வழங்கியுள்ளார்.

தீர்ப்பு விபரங்களின்படி, இடம்பெயர்ந்தோர் முகாமில் வசித்து வந்த 17 வயதுடைய உள்நாட்டில் இடம்பெயர்ந்த (IDP) பாதிக்கப்பட்ட மாணவி, க.பொ.த. உயர்தர வகுப்புகளில் கல்வி கற்பதற்காக 2011 ஓகஸ்ட் மாதம் எதிரியின் இல்லத்திற்குச் சென்று தங்கியுள்ளார்.

2011 நவம்பர் 11ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த தினத்தில், குறித்த இளம்பெண்ணுடன் எதிரி பலாத்காரமாக உடலுறவு கொண்டுள்ளார். மறுநாள் இரண்டாவது தாக்குதலுக்கு முயன்றதைத் தொடர்ந்து, இவ்விடயம் குறித்து யாரிடமாவது கூறினால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என எதிரி அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

ஆறு மாதங்களுக்குப் பின்னர், முகாம் சுகாதாரப் பணியாளர்கள் அப்பெண் கர்ப்பமாக இருப்பதைக் கவனித்த பின்னரே இக்குற்றச் செயல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 

அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவர் ஆறு மாதக் கர்ப்பிணியாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

இதனையடுத்து பொலிஸில் முறைப்பாடு அளிக்கப்பட்டு, எதிரி கைது செய்யப்பட்டார். பின்னர் நடத்தப்பட்ட டி.என்.ஏ. (DNA) பரிசோதனையில், அக்குழந்தையின் உயிரியல் தந்தை எதிரிதான் என்பது உறுதிப்படுத்தப்பட்டது. கர்ப்ப காலத்தில் பாதிக்கப்பட்ட இளம்பெண் கன்னியர் மடம் ஒன்றில் பராமரிக்கப்பட்ட நிலையில், பிரசவத்திற்குப் பின்னர் குழந்தை சுவீகாரத்திற்காக ஒப்படைக்கப்பட்டது.

பாலியல் வல்லுறவு முயற்சி தொடர்பான குற்றச்சாட்டிலிருந்து எதிரியை விடுவித்த மேல் நீதிமன்றம், அதற்கான தனித்தனி ஆதாரங்கள் போதியளவில் இல்லாததால் அவ்வாறு தீர்ப்பளித்தது. எனினும், பாலியல் வல்லுறவுக் குற்றத்திற்காக அவரைக் குற்றவாளியாகக் கணித்து, 17 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை, 5,000 ரூபாய் அபராதம் மற்றும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு 300,000 ரூபாய் நஷ்டஈடு வழங்குமாறும் உத்தரவிட்டது.

“பூசகர் என்ற வகையில் எதிரி தனது அந்தஸ்தையும் பலத்தையும் பயன்படுத்தி அப்பெண்ணின் விருப்பத்தை மீறிச் செயற்பட்டுள்ளார்” எனக் குறிப்பிட்ட நீதியரசர் பிரேமச்சந்திர, பாதிக்கப்பட்ட பெண் நம்பகமான சாட்சியாகக் கருதப்பட வேண்டும் என்ற வவுனியா மேல் நீதிமன்றத்தின் முடிவில் எந்தத் தவறும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

தண்டனை விதிக்கப்பட்ட திகதியிலிருந்து அமுலுக்கு வரும் வகையில், அவரது சிறைத் தண்டனையை 17 ஆண்டுகளிலிருந்து 13 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனையாக நீதிமன்றம் குறைத்துள்ளது. 

அதேநேரம், 5,000 ரூபாய் அபராதம், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்க வேண்டிய 300,000 ரூபாய் நஷ்டஈடு மற்றும் தவறும் பட்சத்தில் விதிக்கப்படும் சிறைத் தண்டனைக் காலங்கள் ஆகியவற்றில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.


கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!