நீர்கொழும்பு, போலவலான – வேபட பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 43 வயதுடைய நபர் ஒருவர், கூரிய ஆயுதங்களால் வெட்டியும் குத்தியும் கொலை செய்யப்பட்டுள்ளார்.
செவ்வாய்க்கிழமை (06) அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில், அடம்பகஹவத்தை வடக்கு, கதிரான இரட்டைச் சந்தி பகுதியைச் சேர்ந்த தம்மாடகே சந்தன பிரசன்ன பெரேரா என்பவரே உயிரிழந்துள்ளார். இவர் வட்டிக்கு பணம் வழங்கும் தரகராகச் செயற்பட்டவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கட்டுவப்பிட்டிய நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது, பின்னால் காரில் வந்த சிலர் அவரை வாள்களால் தாக்கியுள்ளனர். பின்னர் அவர் தப்பியோடிய நிலையில், வேபட வீதியிலுள்ள டி.எஸ். டி சில்வா மாவத்தையின் மேரிஸ் முன்பள்ளிக்கு அருகில் வைத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் 119 அவசர அழைப்பு இலக்கத்துக்கு கிடைத்த தகவலையடுத்து, நீர்கொழும்பு குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு அருகில் உயிரிழந்தவர் பயணித்த மோட்டார் சைக்கிளும் அதன் திறப்பும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், நீதவான் விசாரணை மற்றும் பிரேதப் பரிசோதனையை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளையும் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!