இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் (இ.போ.ச.) சொந்தமான பேருந்தில் பெண் பயணி ஒருவர் தொலைத்த ரூ.10 இலட்சம் பெறுமதியான தங்கச் சங்கிலியை மீட்டுத் தந்த நடத்துநர் மற்றும் சாரதி, அதனைத் துரிதமாக உரியவரிடமே ஒப்படைத்துத் தங்களது நேர்மைப் பண்பை வெளிப்படுத்தியுள்ளனர். இச்சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (23) இடம்பெற்றுள்ளது.

பருத்தித்துறை சாலையில் இருந்து வட்டுக்கோட்டை வரை செல்லும் 767 வழித்தடப் பேருந்தின் மதிய சேவையின்போது பெண் ஒருவர் பயணித்துள்ளார். வட்டுக்கோட்டையில் மரண சடங்கொன்றுக்குச் சென்றுவிட்டு உறவினர் வீட்டுக்குச் சென்ற பின்னரே தனது கழுத்திலிருந்த இரண்டரை பவுண் தங்கச் சங்கிலி காணாமல் போனதை அவர் உணர்ந்துள்ளார்.
வழிநெடுகிலும் தேடியும் சங்கிலி கிடைக்காததால், இனி சங்கிலி கிடைக்காது என்ற கவலையுடன் மீண்டும் வட்டுக்கோட்டையிலிருந்து பருத்தித்துறை நோக்கிச் செல்வதற்காக அதே பேருந்தில் ஏறியுள்ளார்.

அப்போது தனது தங்கச் சங்கிலி காணாமல் போனது குறித்து நடத்துநரிடமும் சாரதியிடமும் அவர் தெரிவிக்க, அவர்கள் "நீங்கள் அமர்ந்திருந்த ஆசனத்தில்தான் அந்தச் சங்கிலி இருந்தது. அதைக் கண்டெடுத்துப் பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருக்கிறோம்" என்று கூறி உடனடியாக நகையை ஒப்படைத்துள்ளனர்.
பின்னர் பருத்தித்துறை டிப்போவுக்குச் சென்ற பின்னர் பேருந்தைச் சுத்தம் செய்தபோது, அந்தச் சங்கிலியின் 'எஸ்' வடிவத்திலான இணைப்புப் பகுதியையும் கண்டெடுத்து அதனையும் அந்தப் பெண்ணிடம் சேர்ப்பித்துள்ளனர்.
இவ்வாறு தாம் கண்டெடுத்த ரூ.10 இலட்சம் பெறுமதியான நகையைத் துளியும் பேராசையின்றி உரியவரிடம் ஒப்படைத்த பருத்தித்துறை டிப்போவைச் சேர்ந்த சாரதி மனோகரன் சயந்தன் மற்றும் நடத்துநர் இராசநாயகம் பிறின்சிராஜா ஆகியோரின் நேர்மைப் பண்பைப் பேருந்தில் பயணித்தவர்களும் பொதுமக்களும் வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!