கடந்த சில ஆண்டுகளாக கிழக்கு ஐரோப்பாவை உலுக்கி வரும் ரஷியா-உக்ரைன் போர், வெறும் இரு நாடுகளுக்கு இடையிலான மோதலாக மட்டும் எஞ்சியிருக்கவில்லை. மாறாக, அது உலகளாவிய வல்லரசுகளின் பிடிமானங்களையும் புதிய கூட்டணிச் சேர்க்கைகளையும் வெளிச்சம்போட்டுக் காட்டும் ஒரு புவிசார் அரசியல் மேடையாக மாறியுள்ளது.
இந்த போர் அரங்கில் சர்வதேச கவனத்தை ஈர்த்த மிக முக்கியமான அம்சம் யாதெனில் வடகொரியாவின் தீவிரமான தலையீடாகும்.புவியியல் காண்
கடந்த ஆகஸ்ட் மாதத்தில், உக்ரைனிய உளவுத்துறை ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டது. இலையுதிர்கால தாக்குதலை தீவிரப்படுத்த ரஷியா 30,000க்கும் அதிகமான மேலதிக வடகொரிய சிப்பாய்களைக் கோரியுள்ளதாக உக்ரைன் மதிப்பிட்டது.
மேலும், செப்டம்பர் மாதத்தில் ரஷிய ஜனாதிபதி விளாடிமிர் புடினும் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன்னும் நேரில் சந்திப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால், காலம் உருண்டோடி நவம்பர் மாதத்தை எட்டியுள்ள நிலையிலும், எதிர்பார்ப்புகள் பொய்த்துப்போயுள்ளன.
புடின் - கிம் உச்சிமாநாடு எதுவும் நடைபெறவில்லை. வடகொரியப் படைகள் ரஷியாவுக்கு அனுப்பப்பட்டதாகச் சில செய்திகள் உலாவந்தபோதிலும், கொரிய தீபகற்பத்திலிருந்து பல்லாயிரக்கணக்கான போர் வீரர்கள் கிழக்கு ஐரோப்பிய முன்னணிப் போர்க்களங்களுக்கு நேரடியாகப் படையெடுத்துச் சென்றதற்கான எந்தவொரு உறுதியான சான்றுகளும் வெளிவரவில்லை.
ரஷியா மற்றும் வடகொரியா இடையிலான வரலாற்று உறவு எப்போதும் ஒரே சீரானதாக இருந்ததில்லை. இரண்டாம் உலகப் போரின் முடிவிலிருந்து இரு நாடுகளின் பாதைகளும் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டிருந்தபோதிலும், அவற்றில் விரிசல்களும் முரண்பாடுகளும் நிறைந்தே காணப்பட்டன.
இதன் காரணமாகவே, ரஷியா உக்ரைன் மீது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியபோது, வடகொரியா இத்தனை தீவிரமாக ரஷியாவிற்குத் தோள்கொடுக்கும் என்று சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கணிக்கவில்லை.ஐரோப்பிய சுற்றுலா
உண்மையில், 2014 ஆம் ஆண்டில் கிரிமியா பகுதியை ரஷியா தன்னுடன் இணைத்துக் கொண்டபோது, வடகொரியாவின் ஆதரவு மிகவும் அமைதியான, தூதரக ரீதியிலான ஆதரவாகவே இருந்தது. வடகொரியா பகிரங்கமான ஆதரவு அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர்த்தபோதிலும், ரஷ;யாவின் பிராந்திய ஆக்கிரமிப்பு இலட்சியங்களை மனதார ஏற்றுக்கொண்டது.
2014 மார்ச் 15 ஆம் திகதி, மொஸ்கோவிற்கான வடகொரிய தூதுவர் தனது அரசாங்கத்தின் ஆதரவை ரஷியாவிற்குத் தெரிவித்ததாக ரஷிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
அதைத் தொடர்ந்து வந்த வாரத்தில், உக்ரைனின் பிராந்திய ஒருமைப்பாட்டை உறுதிசெய்து, கிரிமியா இணைப்பின் சட்டப்பூர்வ தன்மையை நிராகரித்த ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 68/262 தீர்மானத்திற்கு எதிராக வடகொரியா வாக்களித்தது.

அதன்பின்னர், வடகொரியா வெளியிட்ட உலக வரைபடங்களில் கிரிமியாவை ரஷியாவின் எல்லைக்குட்பட்ட பகுதியாகவே சித்தரித்து அச்சிட்டது.
2022 ஆம் ஆண்டு பெப்ரவரியில் ரஷியா உக்ரைன் மீது தனது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியபோதும், வட கொரியா அதே தூதரக ஆதரவுப் பாணியையே பின்பற்றியது.
2022 மார்ச் மாதம், ரஷியாவின் படையெடுப்பைக் கண்டித்து கொண்டுவரப்பட்ட ஐ.நா. பொதுச் சபையின் ES-11/1 தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்த வெறும் ஐந்து நாடுகளில் வடகொரியாவும் ஒன்றாகத் திகழ்ந்தது. அதனைத் தொடர்ந்து மொஸ்கோவிற்கு ஆதரவாகப் பல சர்வதேச தீர்மானங்களில் தனது வாக்கைப் பதிவு செய்தது.
2022 ஜூலையில், ரஷியாவின் ஆதரவு பெற்ற 'டோனெட்ஸ்க் மக்கள் குடியரசு' மற்றும் 'லுகான்ஸ்க் மக்கள் குடியரசு' ஆகியவற்றின் சுதந்திரத்தை வடகொரியா உத்தியோகபூர்வமாக அங்கீகரித்ததுடன், அதே ஆண்டு ஒக்டோபரில் உக்ரைனின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை ரஷியா இணைத்துக் கொண்டதற்கும் தனது பலமான ஆதரவை வெளிப்படுத்தியது.
இருப்பினும், 2022-ஆம் ஆண்டின் இலையுதிர்காலத்தில் வடகொரியாவின் ஆதரவு ஒரு மிகப்பெரிய திருப்புமுனையைச் சந்தித்தது.
போர்க்களத்தில் உக்ரைனியப் படைகள் தொடர்ச்சியாக வெற்றிகரமான எதிர் தாக்குதல்களை நடத்தியதால், ரஷியப் படைகளிடம் ஆயுதங்களும் எறிபொருள்களும் (Munitions) வேகமாகக் குறையத் தொடங்கின.
ரஷிய நிலைகள் பலவீனமடைந்த இந்தச் சூழல், வடகொரியாவிற்குப் போரில் இராஜதந்திரப் பங்கையும் தாண்டிச் செயல்படுவதற்கான ஒரு தங்க வாய்ப்பை வழங்கியது. வடகொரியாவிடம் பெருமளவில் கையிருப்பிலிருந்த சோவியத் காலத்து வெடிமருந்துகள் மற்றும் ஆயுதங்கள், மொஸ்கோ எதிர்கொண்ட தட்டுப்பாட்டிற்கு உடனடி தீர்வாக அமைந்தன.ஐரோப்பிய சுற்றுலா
2022 நவம்பரில், அமெரிக்க தேசிய பாதுகாப்பு பேரவை ஒரு முக்கிய உளவுத்துறை தகவலை வெளியிட்டது. வடகொரியா ரஷியாவிற்கு இராணுவ தளவாடங்களை வழங்கி வருவதற்கான முதல் கணதியான ஆதாரங்கள் வெளிவந்தன.
போரின் போக்கை மாற்றியமைப்பதில் வடகொரியாவின் பங்களிப்பு எவ்வளவு முக்கியமானது என்பதற்கு இதுவே முதல் சான்றாக அமைந்தது. முக்கியமான வெடிமருந்துகளை விநியோகிப்பதன் மூலம், வடகொரியா ரஷியப் படைகளுக்குப் புதிய வீரியத்தைக் கொடுத்தது.
இது அதுவரை வெற்றிகரமாகச் சென்று கொண்டிருந்த உக்ரைனின் எதிர் தாக்குதலைக் கட்டுப்படுத்த ரஷியாவிற்குப் பெரிதும் உதவியது.

2023 முழுவதிலும் கிம் ஜாங் உன்னின் நிர்வாகம் கிரெம்ளினுடன் உறவை மேலும் ஆழப்படுத்தியதால், தளவாட உதவிகள் தடையின்றித் தொடர்ந்தன. 2023 செப்டம்பரில் வோஸ்டோச்னி விண்வெளி மையத்தில் (Vostochny Cosmodrome) ஜனாதிபதி புடினுக்கும் கிம்முக்கும் இடையே நடந்த உச்சிமாநாடு இந்த முயற்சிகளை முடக்கிவிட்டது.
இறுதியாக, 2024 ஜூன் மாதம் புடின் வடகொரியாவிற்கு மேற்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தின் போது, இரு நாடுகளுக்கும் இடையே 'விரிவான மூலோபாய கூட்டாண்மை ஒப்பந்தம்' (Treaty on Comprehensive Strategic Partnership) கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்ட இராணுவக் கூட்டணியை உத்தியோகபூர்வமாக்கியதுடன், ரஷியாவின் போர்க்கள நடவடிக்கைகளில் வடகொரியாவின் நேரடி இராணுவப் பங்கேற்பிற்கு உறுதியான அடித்தளத்தையும் அமைத்துக் கொடுத்தது.

குர்ஸ்க் தாக்குதலும் தற்போதைய கள நிலவரமும்
2024 ஆகஸ்ட் மாதத்தில், உக்ரைனியப் படைகள் ரஷிய எல்லையைக் கடந்து குர்ஸ்க் பிராந்தியத்திற்குள் (Kursk Oblast) திடீர் ஊடுருவலை மேற்கொண்டு, சுட்ஜா மற்றும் கொரேனோவோவை நோக்கி விரைவாக முன்னேறின. இந்த நகர்வு ரஷியாவிற்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்பட்ட நிலையில், ஒக்டோபர் மாதத்திற்குள் உக்ரைனிய அரசாங்கம் ஒரு பகிரங்க உளவுத்துறை தகவலை அம்பலப்படுத்தியது.
ரஷியா தனது போர்க்களத்தில் வடகொரிய இராணுவ வீரர்களைப் பயன்படுத்த ஆயத்தமாகி வருவதாக கியிவ் தெரிவித்தது. உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் முதன்மை உளவுத்துறை பிரிவு, வடகொரியா 12,000 படை வீரர்களை ரஷியாவின் குர்ஸ்க் பிராந்தியத்திற்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளதாக மதிப்பிட்டது. இதைத் தொடர்ந்து, குறைந்தது 10,000 வடகொரிய வீரர்கள் அங்கு இருப்பதை அமெரிக்க பாதுகாப்புத் துறையும் உறுதிப்படுத்தியது.
ரஷியா தனது சொந்த எல்லைக்குட்பட்ட குர்ஸ்க் பிராந்தியத்திலிருந்து உக்ரைனியப் படைகளை வெளியேற்றுவதற்கான போரில் வடகொரிய வீரர்கள் களமிறக்கப்பட்டமை வடகொரிய ஆதரவின் இரண்டாவது பெரிய தீவிரமான கட்டத்தைக் குறித்தது.
குர்ஸ்க்கை மீண்டும் கைப்பற்ற ரஷியாவிற்கு உதவியதன் மூலம், போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளின் போது உக்ரைன் பயன்படுத்த நினைத்த ஒரு வலுவான காரணியை வடகொரியா இல்லாமல் செய்தது.
ஏனெனில், ரஷியாவின் இப்;பகுதியை உக்ரைன் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது பேச்சுவார்த்தைகளின் போது ஒரு பெரிய பலமாக இருந்திருக்கும். டோன்பாஸ் பிராந்தியத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள உக்ரைனிய நிலைகளிலிருந்து ரஷியா வெளியேறுவதற்குப் பதிலாக, குர்ஸ்க்கிலிருந்து உக்ரைன் வெளியேறும் ஒரு சமரச ஒப்பந்தத்தை உருவாக்க கியிவ் திட்டமிட்டிருந்தது. வடகொரிய வீரர்களின் வருகை அந்த வாய்ப்பைத் தகர்த்தது.
குர்ஸ்க்கிலிருந்து உக்ரைனியப் படைகள் விரட்டப்பட்டதைத் தொடர்ந்து, வடகொரியா தொடர்ந்து தளவாடங்கள், தொழிலாளர்கள் மற்றும் இதர உதவிகளை வழங்கி வருகிறது.
இரு நாடுகளும் தங்களது கூட்டணியின் பலத்தைப் பகிரங்கமாகப் பாராட்டி வருகின்றன. இருப்பினும், டோன்பாஸ் பிராந்தியத்தில் எஞ்சியுள்ள உக்ரைனிய நிலைகளிலிருந்து உக்ரைனை முழுமையாக வெளியேற்றி, தனது வெற்றிகளை ஒருங்கிணைக்க கிரெம்ளின் முயலும் இந்தச் சூழலில், அடுத்து என்ன நடக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
2026-ஆம் ஆண்டின் இலையுதிர்காலத்தை நோக்கி நகரும் வேளையில், வரவிருக்கும் தாக்குதலுக்கு ஆதரவாக ரஷியா மீண்டும் அதிக எண்ணிக்கையிலான வடகொரிய வீரர்களைக் கோரியுள்ளதாக உக்ரைன் கணித்தது.
ஆனால், அந்த அளவிலான படைப் பிரிவுகள் எதுவும் இதுவரை களமிறக்கப்படவில்லை. மேலும், ரஷியப் போரில் வடகொரியாவின் எதிர்காலப் பங்கேற்பு குறித்து மொஸ்கோவோ அல்லது பியாங்யாங்கோ எந்தவொரு தெளிவான குறிப்புகளையும் வழங்கவில்லை.
இந்த மந்தநிலைக்கு நான்கு சாத்தியமான விளக்கங்களை புவிசார் அரசியல் வல்லுநர்கள் முன்வைக்கின்றனர். இதில் முதலாவதாக, தவறான உளவுத்துறை கணிப்பு: உக்ரைனின் மதிப்பீடு பிழையான உளவுத்தகவலின் அடிப்படையில் அமைந்திருக்கலாம். கிரெம்ளின் பெருமளவிலான மேலதிக படைகளைக் கோரியதாக வந்த எச்சரிக்கைகள் துல்லியமற்றதாகவோ அல்லது மனித உளவுத்துறை (HUMINT) மூலங்களின் குறைபாடுகளைப் பிரதிபலிப்பதாகவோ இருக்கலாம்.
இரண்டாவதாக, ஆபத்தான சாத்தியக்கூறுகளுக்கு முன்னுரிமை அளித்தல்: உக்ரைன் மிகவும் ஆபத்தான ஒரு சூழ்நிலையை மிக சாத்தியமான ஒன்றாக மதிப்பிட்டிருக்கலாம்.
அதாவது, வடகொரியா மேலதிக படைகளை அனுப்பாது என்பதைக் காட்டும் அறிகுறிகள் அதிகமாக இருந்தபோதிலும், கியிவ் புதிய படைப் பரவலுக்கான சிறிய சான்றுகளின் மீது அதிக கவனம் செலுத்தியிருக்கலாம். இது சர்வதேச கவனத்தை ஈர்ப்பதற்காகச் செய்யப்பட்ட ஒரு மூலோபாய உத்தியாகவும் இருக்கலாம்.ஐரோப்பிய சுற்றுலா
மூன்றாவதாக, ரஷியாவின் கோரிக்கை வாபஸ்: கிரெம்ளின் தனது கோரிக்கையைத் திரும்பப் பெற்றிருக்கலாம். அமெரிக்க வெள்ளை மாளிகையின் அரசியல் கணக்கீடுகள், வரவிருக்கும் அமெரிக்க இடைக்காலத் தேர்தல்கள் அல்லது வடகொரிய வீரர்களின் வருகையைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளுமளவிற்கு ரஷியாவால் தனது சொந்த உள்நாட்டுப் படைகளைத் திரட்ட முடியாமல் போனது ஆகிய காரணங்களால் ஜனாதிபதி புடின் இலையுதிர்காலத் தாக்குதலின் திட்டத்தை மறுபரிசீலனை செய்திருக்கலாம்.
நான்காவதாக, வடகொரியாவின் மறுப்பு: கிம் ஜாங் உன்னின் நிர்வாகம் ரஷியாவின் முந்தைய எல்லைக்குள் குர்ஸ்க்கை மீட்கும் போரில் வெளிப்படையாகப் படைகளை அனுப்ப உடன்பட்ட போதிலும், ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைனியப் பகுதிகளின் முன்னணிப் போர்க்களங்களில் வடகொரியப் போர் வீரர்களைப் பெருமளவில் களமிறக்க விரும்பாமல் இருந்திருக்கலாம்.
இது பியாங்யாங்கின் ஒரு அரசியல் சிவப்புக் கோடாக (Political Red Line) இருக்கலாம். டோனெட்ஸ்க்கின் எஞ்சிய பகுதிகளைக் கைப்பற்றுவதற்கான முன்வரிசை நடவடிக்கைகளில் வடகொரிய வீரர்கள் பங்கேற்க வேண்டுமென கிரெம்ளின் கேட்டிருந்தாலும், வடகொரியா அதை நாகரீகமாக நிராகரித்திருக்கலாம்.
அதேவேளையில், ஒரு மாபெரும் படைப் பரவலுக்குப் பதிலாக, வடகொரியாவின் பிற வகை இராணுவ ஈடுபாடுகளை உக்ரைன் சுட்டிக்காட்டியுள்ளது.
ரஷியாவின் வோரோனேஜ் பிராந்தியத்தில் வடகொரிய ஏவுகணைப் பிரிவு ஒன்று நிறுத்தப்பட்டுள்ளது மற்றும் ட்ரோன்கள், இராணுவ பொறியாளர்கள், கண்ணிவெடி அகற்றுபவர்கள் உள்ளிட்ட 8,500 ஆதரவுப் படைகள் பின்புலப் பகுதிகளில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், போர்க்களத்தை சென்றடையக்கூடிய புதிய ட்ரோன்கள், ஏவுகணைகள் மற்றும் இதர ஆயுத அமைப்புகளைக் காட்சிப்படுத்தும் அதே வேளையில், பியாங்யாங்கில் தனது ஆயுத உற்பத்தித் திறனை வடகொரியா தொடர்ந்து விரிவாக்கி வருகிறது.ஐரோப்பிய சுற்றுலா
எதிர்காலப் பாதையும் வடகொரியாவின் இறுதி உத்தியும்
தற்போது கிடைத்துள்ள ஆதாரங்களின்படி, ரஷியாவின் போர் முயற்சிக்கு ஆதரவளிப்பதில் வடகொரியா தனது இறுதி ஆட்ட உத்தியை (Endgame strategy) எட்டியுள்ளது போல் தெரிகிறது. என்றாவது ஒரு நாள் முழு அளவிலான போர்கள் முடிவுக்கு வரும் என்பதை கிம் ஜாங் உன்னின் நிர்வாகம் நன்கு உணர்ந்துள்ளது.
போர் நிறுத்தப்படும் போது, வடகொரியப் படைகள் மற்றும் ஆயுதங்கள் மீதான கிரெம்ளினின் சார்ந்திருத்தல் குறையும். இது பியாங்யாங் மற்றும் மொஸ்கோ இடையேயான அதிகார சமநிலையைப் பாதிக்கும்.
போர் முடிவுக்கு வருவதால் ஏற்படும் மூலோபாய அதிர்ச்சியிலிருந்து தங்களது இருதரப்பு உறவைப் பாதுகாக்க இரு நாடுகளும் நடவடிக்கைகளை எடுத்திருந்தாலும், கிம் நிர்வாகம் தனது நீண்டகாலப் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைகளை மனதில் கொண்டே காய்களை நகர்த்துகிறது.
இந்த இறுதி ஆட்ட உத்தியின் ஒரு பகுதியாக, வடகொரியா ரஷியாவிற்கான தனது ஆதரவில் தற்போதைய நிலையையே பராமரிக்க விரும்புகிறது.
அதே நேரத்தில், தனது மற்றொரு முக்கிய நட்பு நாடான சீனாவுடனான தொடர்புகளை விரிவாக்கத் தொடங்கியுள்ளது. 2026 ஜூன் மாதம் சீனா ஜனாதிபதி ஷி ஜின்பிங் மற்றும் கிம் ஜாங் உன் இடையே நடைபெற்ற உச்சிமாநாடு, இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான ஒரு புதுப்பிக்கப்பட்ட முயற்சியாக அமைந்தது. ரஷியா-உக்ரைன் போர் குறையும் போது இந்த சீனாவுடனான சாய்வு மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.புவியியல் காண்
அதுவரை, ரஷியாவின் போர் முயற்சிகளில் வடகொரியாவின் ஆதரவு ஒரு இன்றியமையாத அங்கமாகவே இருக்கும். வடகொரியா வழங்கும் பொருள்சார் உதவிகள் ரஷியாவிற்கு மிகப்பெரிய பலமாகும். அதேபோல படைப் பெருக்கம், தொழில்நுட்ப உதவி மற்றும் மனிதவளம் ஆகியவை தற்போதைய போர்க்கள எல்லைகளுக்கு அப்பால் உக்ரைனைத் தள்ள முயற்சிக்கும் ரஷியப் படைகளுக்குப் பின்பலமாக அமைகின்றன.
வரவிருக்கும் குளிர்காலத்தில், வடகொரியப் போர் வீரர்களின் மற்றொரு பெரிய அளவிலான படைப் பரவல் போர்க்களத்திற்கு வர சாத்தியக்கூறுகள் குறைவாகவே காணப்படுகின்றன.
இருப்பினும், வசந்த காலத்தின் போது இந்த நிலைமை மீண்டும் மாறக்கூடும். அதுவரை, மொஸ்கோவுடனான உறவின் மூலம் பெறக்கூடிய மூலோபாய நன்மைகளை அதிகப்படுத்தும் அதே வேளையில், போரின் தவிர்க்க முடியாத முடிவினால் ஏற்படும் விளைவுகளிலிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ளும் ஒரு எச்சரிக்கையான அணுகுமுறையையே வட கொரியா கையாள்கிறது.
(லியோ நிரோஷ தர்ஷன்)
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!