புதுடில்லி: ராஜிவை சந்தித்த முதல் தருணம், தனது வாழ்க்கை குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அவரின் வீடியோ இணையத்தில் பரவலாக பேசு பொருளாகி இருக்கிறது.
பிலாங்கிங்; எ ஜர்னி ஆப் லவ்' (Belonging; A Journey of Love) என்ற பெயரில் தமது வாழ்க்கை குறித்து சுயசரிதை புத்தகம் ஒன்றை சோனியா வெளியிடுகிறார். 2026ம் ஆண்டு நவம்பர் 10ம் தேதி இந்த புத்தகம் வெளியாகிறது.
ஹார்பர் காலின்ஸ் என்ற நிறுவனம் அவரின் புத்தகத்தை வெளியிடுகிறது. அதற்கு முன்னோட்டமாக, ராஜிவ் உடனான தமது முதல் சந்திப்பு, காதல் பற்றி சோனியா வீடியோ ஒன்றை எக்ஸ் தளத்தில் வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோ மொத்தம் 2 நிமிடங்கள் உள்ளது.
அதில் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜில் தனது வாழ்க்கையின் தொடக்க கால நாட்களை, நினைவு கூர்ந்துள்ளார். சோனியா கூறி உள்ளதாவது;
கேம்பிரிட்ஜில் கிரேக்க உணவகம் ஒன்று உள்ளது. அது மிகவும் சிறிய உணவகம். அங்கு தான் எனது அன்பின் பயணம் தொடங்கியது. ராஜிவ், நான் இருவரும் அன்பு, மகிழ்ச்சி மற்றும் நினைவுகள் கலந்த ஒரு உலகத்தை உருவாக்கினோம். நவ.10ம் தேதி அந்த உலகத்தை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
எனக்கு பிடித்த இத்தாலி நாட்டு உணவுகள் கிடைக்கும் உணவகங்களை தேடிக் கொண்டிருந்த சமயத்தில் தான் கிரேக்க உணவகத்தை கண்டறிந்தேன். ஐரோப்பிய மாணவர்கள் மட்டுமல்லாது, நிறைய இந்திய மாணவர்களும் இருந்தனர். அங்கு தான் முதன்முதலில் ராஜிவை சந்தித்தேன்.
அந்த சந்திப்பிலேயே அவருடன் நான் இருக்க வேண்டும் என்று என் மனம் விரும்பியது. என்னை போன்று அவருக்கும் (ராஜிவுக்கும்) அப்படி ஒரு உணர்வு இருந்தது, பின்னர் நான் தெரிந்து கொண்டேன். எங்களின் அறிமுகம் ஒரு பொதுவான நண்பர் வழியாக நடந்தது. நாங்கள் நண்பர்கள் ஆனோம்.
விருந்துகளில் பங்கேற்பது, சுற்றி பார்ப்பது என நண்பர்களுடன் சென்று வந்தோம். மற்ற நண்பர்களுடன் வேலன்டைன்ஸ் டே (காதலர் தினம்) விருந்துக்கு நாங்கள் சென்றோம். அவர் பார்ப்பதற்கு மென்மையான தோற்றம் உடையவராக மட்டும் அல்லாமல் மிகவும் அழகாகவும் இருந்தார். அவரின் மென்மையான இயல்பே என்னை கவர்ந்தது. அவருடன் என்னுடைய முதல் சந்திப்பை நான் மறக்கவே முடியாது.
இவ்வாறு சோனியா தமது நினைவுகளை பகிர்ந்து இருக்கிறார்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!