ஒரு தசாப்தத்துக்கு முன்னர் கொடூரமான இராணுவ நடவடிக்கையில் ரோஹிங்கியா சிறுபான்மை இனத்தவர்களுக்கு எதிராக மியன்மார் அரசாங்கம் இனப்படுகொலை நடத்தியதாக ஹேக் நகரில் அமைந்திருக்கும் சர்வதேச நீதிமன்றம் (International Court of Justice) கடந்த வியாழக்கிழமை வரலாற்று தீர்ப்பை வழங்கியிருக்கிறது.
மேலும், வன்முறையில் இருந்து உயிரைக் காக்க தப்பிச் சென்ற மக்கள் தாயகம் திரும்புவதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும் மியன்மாருக்கு அந்த நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
சர்வதேச நீதித்துறையின் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதியிருக்கும் இந்த தீர்ப்பு இனப்படுகொலைச் சாசனத்தின் (Genocide Convention) கீழ் ஒரு நாடு நேரடியாக குற்றவாளி என்று தீர்ப்ளிக்கப்பட்ட முதன்முதலான நிகழ்வாக அமைந்திருக்கிறது.
ரோஹிங்கியா மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கொடூரங்களை " இனப்படுகொலை " என்ற சட்டபூர்வ அடையாளத்துடன் ஐக்கிய நாடுகளின் உச்சநீதிமன்றம் என்று வர்ணிக்கப்படும் சர்வதேச நீதிமன்றம் அங்கீகரித்திருப்பது அவலங்களுக்கு உள்ளாக்கப்பட்ட மக்களின் நீண்டகாலப் போராட்டத்துக்கு கிடைத்த தார்மீக மற்றும் சட்டபூர்வ வெற்றியாகும்.
சர்வதேச நீதிமன்றத்தின் தலைவர் யூஜி இவாசவா தலைமையிலான அமர்வு 9-6 என்ற பெரும்பான்மை வாக்குகளால் வழங்கிய தீர்ப்பு மியன்மாரின் வடக்கு ராக்கைன் மாகாணத்தில் 2017 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட "தூய்மைப்படுத்தும் நடவடிக்கை " கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான சாதாரண நடவடிக்கை அல்ல என்பதைத் தெளிவுபடுத்தியிருக்கிறது.
ரோஹிங்கியா இனக்குழுமத்தை ஒரு பகுதியளவு அல்லது முழுமையாக அழிக்கும் நோக்குடன் திட்டமிட்ட முறையில் மேற்கொள்ளப்பட்ட வன்முறையே அது என்பதே நீதிமன்றத்தின் அடிப்படைத் தீர்மானம்.
ரோஹிங்கியா கிளர்ச்சிக்குழுவின் தாக்குதல்களுக்கு பதிலடிகொடுக்கும் விதமாக 2017 ஓகஸ்ட் மாதத்தில் ராக்கைன் மாகாணத்தில் மியன்மார் இராணுவம் தொடங்கிய நடவடிக்கையில் நிகழ்ந்த கொடூரங்களை நீதிமன்றம் விரிவாகப் பதிவுசெய்திருக்கிறது.
ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டமை, பரவலான பாலியல் வன்முறைகள், குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகள், கிராமங்கள் எரிக்கப்பட்டமை மற்றும் தப்பியோட முயன்ற மக்கள் தாக்கப்பட்டமை ஆகியவற்றை நீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது.
மியன்மார் படைகள் சுமார் 10,000 ரோஹிங்கியாக்களை கொன்றதை ஆதாரங்கள் காட்டுவதாகவும் பலர் தப்பியோடும்போது சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் தீர்ப்பில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

அதேவேளை, 12 இலட்சம் ரோஹிங்கியா மக்கள் பங்களாதேஷின் கொக்ஸ் பஜார் உட்பட நெரிசலான முகாம்களில் தங்களின் தாய்மண்ணையும் அடையாளத்தையும் இழந்து, அடிப்படை வசதிகளற்ற இடர்மிகுந்த சூழ்நிலைகளில் அகதிகளாகத் தஞ்சமடைந்துள்ளனர்.மியன்மார் அரசாங்கம் ரோஹிங்கியாக்களை "வங்காளிகள்" அல்லது " வெளிநாட்டு ஊடுருவல்காரர்கள் " என்று புறக்கணித்து வந்த நிலையில், அவர்களை சர்வதேச சட்டத்தின் கீழ் ஒரு தனித்துவமான இனக்குழுமமாக சர்வதேச நீதிமன்றம் அங்கீகரித்திருப்பது முக்கியமானதாகும்." கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான சட்டபூர்வ செயற்பாடு " என்ற மியன்மாரின் நியாயப்படுத்தலை 15 நீதிபதிகள் கொண்ட அமர்வு நிராகரித்திருக்கிறது.
இனப்படுகொலைச் செயல்களில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்டவர்களை விசாரணை செய்து, வழக்குத் தொடர்ந்து, தண்டிக்கவும் பாதிக்கப்பட்ட ரோஹிங்கியா மக்களுக்கு இழப்பீடுகளை வழங்கவும் மியன்மாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இழப்பீட்டுத்தொகை பின்னர் நீதிமன்ற நடவடிக்கைகளில் தீர்மானிக்கப்படும் என்றும் மக்கள் "பாதுகாப்பாகவும் தன்னியல்பாகவும் கண்ணியத்துடனும் தாங்கள் வசித்த இடங்களுக்கு திரும்புவதற்கு" அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் தீர்ப்பில் தெளிவு படுத்தப்பட்டிருக்கிறது.
இந்த தீர்ப்பு இறுதியானதும் சட்டரீதியாக கட்டுப்படுத்தக் கூடியதும் என்ற போதிலும், நடைமுறைப்படுத்துவதற்கு சர்வதேச நீதிமன்றத்திடம் நேரடியான பொறிமுறை எதுவுமில்லை. தீர்ப்புக்கு மியன்மார் இணங்கத் தவறினால் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையிடம் முறைப்பாடு செய்ய மாத்திரம் முடியும் என்ற நடைமுறைச் சிக்கல் இந்த தீர்ப்பின் பலத்தையும் அதன் வரம்புகளையும் ஒரேநேரத்தில் வெளிக்காட்டுகிறது.
கடந்த மாதம் நோபல் சமாதானப் பரிசை வென்ற மதிப்புக்குரிய, தென் ஆபிரிக்க சட்டநிபுணர் நவி பிள்ளை சர்வதேச நீதிமன்றத்தின் நீதிபதிகளில் ஒருவராக இருந்தமை தீர்ப்பின் தார்மீகக் கனதியை மேலும் அதிகரிக்கிறது எனலாம். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகராகவும் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயங்களின் நீதிபதியாகவும் பணியாற்றிய அவரது நீண்டகால அனுபவம் இனப்படுகொலை மற்றும் மனித உரிமை மீறல்களின் நுட்பங்களை ஆராய்வதில் முக்கியத்துவம் வாய்ந்த பங்கை வகித்திருக்கும் என்று நம்பலாம்.
இனப்படுகொலை தொடர்பான சர்வதேச சட்டக்கோட்பாடுகளும் பாதிக்கப்பட்ட மக்களின் சாட்சியங்களும் அரசியல் அழுத்தங்களைக் கடந்து நிலைத்து நிற்கமுடியும் என்பதை நவி பிள்ளையின் பங்கேற்பு உணர்த்துகின்றது என்றும் பாதிக்கப்பட்ட சமூகங்களின் குரல்களும் பல வருடங்களாக திரட்டப்பட்ட ஆவணங்களும் சர்வதேச நீதிமன்றத்தில் எவ்வாறு சட்டபூர்வ ஆதாரங்களாக உருவெடுக்கின்றன என்பதற்கு இது ஒரு தெளிவான சான்றாகும் என்றும் சர்வதேச சட்ட நிபுணர்களும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களும் கூறுகிறார்கள்.
உலகின் பல்வேறு பாகங்களிலும் நடைபெறும் மோதல்கள் மற்றும் இனப்படுகொலைக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான வழக்குகள் சர்வதேச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சூழலில், இந்த தீர்ப்பு ஒரு முன்னுதாரணமாக மாறியிருக்கிறது. குறிப்பாக, இனப்படுகொலைக்கான " குறிப்பிட்ட நோக்கத்தை "(Specific intent) நிரூபிப்பதற்கான சட்ட அளவுகோல்களை இந்த தீர்ப்பு எவ்வாறு கையாண்டிருக்கிறது என்பது எதிர்கால வழக்குகளிலும் ஆழமாகப் பரிசீலிக்கப்படும் என்றும் அவர்கள் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள்.
அதேவேளை, சர்வதேச நீதித்துறை அமைப்புக்கள் மற்றும் நீதிபதிகள் மீது சில சக்திவாய்ந்த தரப்புகளிலிருந்து வரக்கூடிய அழுத்தங்கள் அல்லது தடைகள் குறித்த விவாதங்களும் தற்போது சர்வதேச அரங்கில் எழுந்துள்ளன. குற்றச் செயல்களுக்காக தனிநபர்களைப் பொறுப்பேற்க வைக்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (International Criminal Court) மீது விதித்ததைப் போன்று நவி பிள்ளை மற்றும் சக நீதிபதிகள் மீது அமெரிக்கா தடைகளை விதிக்குமோ என்ற கவலையும் எழுகிறது.
ரோஹிங்யா முஸ்லிம்கள் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதற்கு உலகம் எவ்வாறு பதிலளிக்கும் என்பது முதலில் ஒரு சோதனையாக இருந்தது. தற்போது சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்திருக்கும் நிலையில் சர்வதேச சமூகம் அதற்கு எவ்வாறு எதிர்வினையாற்றும் என்பது அடுத்த சோதனையாக இருக்கிறது.
லண்டனில் உள்ள மியன்மார் தூதரகத்தில் பணியாற்றும் பாதுகாப்பு ஆலோசகரை வெளியேற்றுவதாக பிரிட்டன் அறிவித்திருப்பது ஒரு சிறியதொரு நடவடிக்கை என்றாலும் வரவேற்கத்தக்கது.
ஆனால், ரோஹிங்யா மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கு மியன்மார் இராணுவ ஆட்சி மீது அழுத்தத்தை அதிகரிக்க பிரிட்டன் மேலும் பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதும் சர்வதேச சட்டத்தை நம்பும் நாடுகள் இந்த தீர்ப்பு உண்மையான விளைவுகளை ஏற்படுத்துவதை உறுதிசெய்ய வேண்டும் என்பதும் சர்வதேச மனிதஉரிமைகள் செயற்பாட்டாளர் சமூகத்தின் வலியுறுத்தலாக இருக்கிறது.
சட்டபூர்வமான தீர்ப்பு ஒருபுறமிருந்தாலும், வல்லரசுகளின் புவிசார் அரசியல் நலன்களுக்கு இடையிலான போட்டிகள் மியன்மார் இராணுவ ஆட்சிக்கு ஒரு பாதுகாப்பு அரணாக மாறக்கூடிய ஆபத்தான சாத்தியப்பாடுகள் உள்ளன. பாதுகாப்புச் சபையில் வீட்டோ அதிகாரத்தைக் கொண்டிருக்கும் நாடுகள் அவற்றின் மூலோபாய, எரிசக்தி, வாணிப மற்றும் பிராந்திய நலன்களுக்காக மியன்மார் ஆட்சியாளர்களுக்கு ஆதரவாகவோ அல்லது கடுமையான நடவடிக்கைகளைத் தடுக்கும் வகையிலோ செயற்படக்கூடும்.
மியன்மார் தென்கிழக்கு ஆசியாவுக்கும் தெற்காசியாவுக்கும் இடையிலான பாலமாகவும் கடல்வழிப் பாதையினதும் தரைவழிப் பாதையினதும் முக்கியமான மையமாகவும் அமைந்திருக்கிறது.
அதனால், அந்த நாட்டில் உள்ள ஆட்சியுடன் சுமுக உறவைப் பேணுவதை சில வல்லரசுககள் அவற்றின் தேசிய நலனாகக் கருதுவதனால், சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவுகளை நடைமுறைப்படுத்தக் கோரும் தீர்மானங்கள் பாதுகாப்பு சபையில் முடங்குவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் என்பதே சர்வதேச அரசியல் அவதானிகளின் பொதுவான அபிப்பிராயமாக இருக்கிறது.
இது இவ்வாறிருக்க, இலங்கையின் உள்நாட்டுப்போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமானச் சட்ட மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பான விவாதங்களில் இந்த தீர்ப்பு புதிய அதிர்வுகளை ஏற்படுத்தும் என்று நிச்சயமாக எதிர்பார்க்கலாம். காலதாமதமானாலும் சர்வதேச நீதி அமைப்புக்கள் கடுமையான குற்றச்சாட்டுக்களை விசாரித்துத் தீர்ப்பளிக்க முடியும் என்ற நம்பிக்கையை இந்த தீர்ப்பு பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கும் மனித உரிமைகள் அமைப்புகள் மற்றும் பொறுப்புக்கூறலைக் கோரும் தரப்புகள் மத்தியில் ஏற்படுத்தும். குறிப்பாக, இராணுவ நடவடிக்கைகளின்போது பொதுமக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்களை "பாதுகாப்பு நடவடிக்கை" என்ற பெயரில் நியாயப்படுத்த முடியாது என்பதை இது மீண்டும் வலியுறுத்துகிறது.
அதேவேளை,
"இனப்படுகொலை" என்ற சட்டவரையறை மிகவும் கடுமையானதும் குறிப்பிட்ட நோக்கத்தை நிரூபிப்பதற்கான உயர் சட்டத்தரத்தைக் கொண்டிருக்க வேண்டிய ஒன்றுமாகும் என்பதை மியன்மார் வழக்கு நினைவூட்டுகிறது. எனவே, ஒவ்வொரு மனித உரிமை மீறலையும் அல்லது போர்க்குற்றத்தையும் சட்டரீதியாக எவ்வாறு வகைப்படுத்துவது என்பது குறித்த சட்டப் புரிதலும் வலுவான ஆவணப்படுத்தலும் அவசியம் என்பதை இது உணர்த்துகிறது.
இலங்கை அரசைப் பொறுத்தவரை, இந்த தீர்ப்பு வெளியுறவுக் கொள்கை, உள்நாட்டு நல்லிணக்கம் மற்றும் சட்டக்கட்டமைப்பு ஆகியவற்றில் ஆழமான படிப்பினைகளை முன்வைக்கிறது.
சர்வதேச அரங்கில் மனித உரிமை விவகாரங்களை வெறும் தற்காப்பு மனநிலையுடன் அல்லது அரசியல் வாதங்களுடன் மட்டுமே அணுகுவது நீண்டகாலத் தீர்வைத் தராது என்பதையும் நம்பகமான உள்நாட்டுப் பொறிமுறைகளை வலுப்படுத்துவது சர்வதேச தலையீடுகளை தவிர்ப்பதற்கான பிரதான வழி என்பதையும் இது காட்டுகிறது.தீவுகள் ஆராயுங்கள்
மேலும், வல்லரசுகளின் போட்டிக்குள் சிக்காமல், சர்வதேச சட்டங்கள் மற்றும் மனித உரிமைக் கடப்பாடுகளுக்கு மதிப்பளிக்கும் ஒரு சமநிலையானதும் நம்பகத்தன்மையானதுமான வெளியுறவுக் கொள்கையைப் பின்பற்றுவது அவசியம். மியன்மாரின் அனுபவம் சர்வதேச கடப்பாடுகளைப் புறக்கணிப்பதும் வன்முறை மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண முயற்சிப்பதும் எந்தளவுக்கு கடுமையான நீண்டகாலச் சட்ட விளைவுகளையும் இராஜதந்திர விளைவுகளையும் ஏற்படுத்தும் என்பதற்கான எச்சரிக்கையாகும்.
இறுதியாக, ரோஹிங்கியா விவகாரத்தில் சர்வதேச நீதிமன்றம் வழங்கியிருக்கும் இந்த தீர்ப்பு நீதி தாமதமானாலும், சர்வதேச சட்டத்தின் பதிவுகளில் இருந்து கொடூரங்கள் தப்பிவிட முடியாது என்ற உறுதியான செய்தியைக் சொல்கிறது. என்றாலும், ஒரு தீர்ப்பு கடதாசியில் இருந்து நடைமுறைக்கு மாறுவதற்கு அரசியல் விருப்பமும் சர்வதேச ஒத்துழைப்பும் பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணியத்தை மீட்டெடுக்கும் தொடர்ச்சியான முயற்சிகளும் இன்றியமையாதவை. காஸா மற்றும் உக்ரேன் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், இந்த தீர்ப்பு மெய்யான நீதியாக மாறுமா என்பது உலக நாடுகள் எடுக்கும் நடவடிக்கைகளிலேயே முற்றிலும் தங்கியிருக்கிறது.
- வீரகத்தி தனபாலசிங்கம்-
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!