news@ilakkiyainfo.com

பிரிவுகள்

வங்காள விரிகுடா காற்றழுத்த தாழ்வு : பல மாகாணங்களுக்கு கனமழை எச்சரிக்கை

16 May, 2026
Nagamuthu Pratheepraja வெளியிட்டுள்ள தகவலின்படி, வங்காள விரிகுடாவில் நிலவும் நன்கமைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இன்று (16.05.2026) வடக்கு, கிழக்கு, மேற்கு, வடமேற்கு, மத்திய, சப்ரகமுவா, ஊவா மற்றும் தெற்கு மாகாணங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு காணப்படுகின்றது. மேலும் நாளை (17.05.2026) மேற்கு, சபரகமுவா, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் கனமழையும், வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்காள விரிகுடாவில், இலங்கையின் பருத்தித்துறைக்கு வடகிழக்கில் சுமார் 309 கிலோமீட்டர் தொலைவிலும், இந்தியாவின் கடலூருக்கு கிழக்கில் 219 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த தாழ்வு நிலை மையம் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. குறித்த தாழ்வு நிலை மிகவும் மெதுவாக நகர்ந்தாலும் அதன் சுழற்சி வேகம் அதிகமாக காணப்படுவதால், அதிகளவிலான ஈரப்பதம் அரபிக்கடலிலிருந்து இலங்கையூடாக வங்காள விரிகுடாவை நோக்கி நகர்கின்றது. இதன் காரணமாக இலங்கையின் பல பகுதிகளில் பரவலாக கனமழை பதிவாகி வருகிறது. குறிப்பாக மேல், தென், வடமேல், வட மாகாணங்கள் மற்றும் சப்ரகமுவா பகுதிகளில் அதிக மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியான மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ள அபாயம் உருவாகக்கூடும் என்பதால் மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேவேளை, மத்திய, ஊவா மற்றும் வடமேற்கு மாகாணங்களில் நிலச்சரிவு அபாயமும் காணப்படுவதால் மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் எதிர்வரும் 18.05.2026 காலை வரை வடக்கு மற்றும் கிழக்கு கடற்பகுதிகள் கொந்தளிப்பாக காணப்படும் என்பதால் கடற்றொழிலாளர்கள் கடலுக்குச் செல்வதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!