news@ilakkiyainfo.com

பிரிவுகள்

விஜய் - சங்கீதா விவாகரத்து: முக்கிய உத்தரவு பிறப்பிப்பு

15 Jun, 2026
தமிழக முதலமைச்சர் விஜய்க்கும் அவரது மனைவி சங்கீதாவிற்கும் இடையே விவாகரத்து கோரித் தொடரப்பட்ட வழக்கு, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் திங்கட்கிழமை (15) அன்று  மீண்டும் விசாரணைக்கு வந்தது.

1999ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட விஜய் - சங்கீதா தம்பதிக்கு, ஜேசன் சஞ்சய் மற்றும் திவ்யா சாஷா என இரு குழந்தைகள் உள்ளனர். தனிப்பட்ட காரணங்களால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகக் கூறப்படும் நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சங்கீதா விவாகரத்து கோரி செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்தத் தகவல் கடந்த பிப்ரவரி மாதமே ஊடகங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஏப்ரல் 20 மற்றும் மே 19 ஆகிய திகதிகளில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இரு தரப்பிலும் யாரும் நேரில் ஆஜராகவில்லை. இந்நிலையில், திங்கட்கிழமை (ஜூன் 15) விசாரணையில் விஜய் மற்றும் சங்கீதா நேரில் ஆஜராவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

முன்னதாக, தாங்கள் இருவரும் பொதுவெளியில் பிரபலமானவர்கள் என்பதால், பாதுகாப்பு மற்றும் இதர சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, தங்களை நேரில் ஆஜராவதிலிருந்து விலக்களித்து, காணொளி காட்சி (Video Conferencing) மூலம் ஆஜராக அனுமதிக்க வேண்டும் என்று இரு தரப்பிலும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

திங்கட்கிழமை (15) விசாரணையின்போது, நீதிபதி சுஜாதா அவர்கள் இவ்வழக்கை ஆகஸ்ட் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். முன்னதாக, காணொளி காட்சி மூலம் ஆஜராகக் கோரிய மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இருவரது மின்னஞ்சல் முகவரிகளையும் (Email ID) நீதிமன்றப் பதிவேட்டில் முறையாகப் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தினார்.

மேலும், மாவட்ட நீதிமன்றத்தில் முதலில் தொடரப்பட்ட இந்த வழக்கு, பின்னர் குடும்ப நல நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. அங்கு வழக்கு தொடர்பான முறையான மனுக்களைத் தாக்கல் செய்யுமாறும் நீதிபதி அறிவுரை வழங்கியுள்ளார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் இந்த விவாகரத்து வழக்கு, ஆகஸ்ட் 7ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!