news@ilakkiyainfo.com

பிரிவுகள்

விஜித ஹேரத் - டொனால்ட் ட்ரம்ப் சந்திப்பு புகைப்படம் : வெளிச்சத்திற்கு வந்த உண்மை!

03 Oct, 2026
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்திற்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாகக் கூறி, புகைப்படத்துடன் கூடிய பதிவொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகின்றது.

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் அண்மையில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 81 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் கலந்துகொண்ட பின்னணியிலேயே இப் படம் பரப்பப்பட்டு வருகின்றது.

இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட உண்மைச் சரிபார்ப்பின்  போது வெளிவந்த உண்மை விவரங்கள் வருமாறு:

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 81 ஆவது கூட்டத்தொடரில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி செப்டம்பர் 28 ஆம் திகதி அமைச்சர் விஜித ஹேரத் உரையாற்றியிருந்தார். இச்சுற்றுப்பயணத்தின் போது அமெரிக்க ஜனாதிபதிக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சருக்கும் இடையில் இவ்வாறானதொரு இராஜதந்திர சந்திப்பு இடம்பெற்றிருந்தால், அது உள்நாட்டு மற்றும் சர்வதேச பிரதான ஊடகங்களில் செய்தியாக வெளியிடப்பட்டிருக்க வேண்டும்.

எனினும், பிரதான ஊடகங்கள், நம்பகமான மூலங்கள் அல்லது அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிக்கைகள் எதிலும் இவ்வாறானதொரு சந்திப்பு இடம்பெற்றதாக எந்தவொரு பதிவும் வெளியாகவில்லை.

ஐ.நா. கூட்டத்தொடரின் போது அமைச்சர் விஜித ஹேரத் பின்வரும் தலைவர்களுடனும் இராஜதந்திரிகளுடனும் மட்டுமே இருதரப்புப் பேச்சுகளை நடத்தியுள்ளார்.

ஐ.நா. செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரெஸ், அமைதி காக்கும் நடவடிக்கைகளுக்கான துணைச் செயலாளர் நாயகம் ஜீன்-பியர் லாக்ரோயிக்ஸ் மற்றும் செயல்பாட்டு ஆதரவிற்கான துணைச் செயலாளர் நாயகம் அதுல் காரே ஆகியோரைச் சந்தித்து சர்வதேச அமைதி காக்கும் பணிகள் மற்றும் மனித உரிமைகள் முன்னேற்றம் குறித்துக் கலந்துரையாடினார்.

ஈரானிய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி செய்யித் அப்பாஸ் அராக்சி, ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளிவிவகார அமைச்சர் ஷேக் அப்துல்லா பின் சயீத் அல் நஹ்யான் மற்றும் நேபாள வெளிவிவகார அமைச்சர் ஷிஷிர் கானால் ஆகியோரைச் சந்தித்து வர்த்தகம், சுற்றுலா மற்றும் தொழிலாளர் ஒத்துழைப்பு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் செப்டம்பர் 22 ஆம் திகதி ஐ.நா. பொதுச் சபையின் தொடக்க நிகழ்வில் உரையாற்றிய போதிலும், அவருக்கும் அமைச்சர் விஜித ஹேரத்திற்கும் இடையே எவ்வித உத்தியோகபூர்வ அல்லது தனிப்பட்ட சந்திப்புகளும் நடைபெறவில்லை.

இது தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தின் ஊடகச் செயலாளரிடம் கூறியபோது,

சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் முற்றிலும் பொய்யானது என்றும், அமைச்சருக்கும் அமெரிக்க ஜனாதிபதிக்கும் இடையே எவ்வித சந்திப்பும் இடம்பெறவில்லை என்றும் உறுதிப்படுத்தினார்.

சமூக வலைத்தளப் பதிவில் பயன்படுத்தப்பட்டுள்ள புகைப்படத்தைப் பரிசீலித்த போது, அது செயற்கை நுண்ணறிவு  தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் போலியாக உருவாக்கப்பட்ட  படம் என்பது தெளிவாகக் கண்டறியப்பட்டுள்ளது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!