news@ilakkiyainfo.com

பிரிவுகள்

விவாகரத்தால் காசே இல்லாமல் போய்விட்டேன்” - கமல் பேச்சு முற்றிலும் பொய்; முதல் மனைவி வாணி கணபதி பதிலடி

18 Nov, 2026
விவாகரத்து பெற்று பல ஆண்டுகள் கடந்த பிறகும் கமலின் சகோதரர் சாருஹாசன், அவரது மனைவி மற்றும் அவர்களது பிள்ளைகளான சுஹாசினி, நந்தினி, சுபாஷினி ஆகியோருடன் தனக்கு அன்பான உறவு நீடிப்பதாக வாணி கணபதி குறிப்பிட்டார்.

பல ஆண்டுகளாக கமல் ஹாசனும் சர்ச்சைகளும் ஒன்றோடொன்று இணைந்தே பயணித்து வருகின்றன. அவரது திரைப்படங்கள் அல்லது கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தவில்லை என்றாலும், அவரது தனிப்பட்ட வாழ்க்கை, குறிப்பாக காதல் உறவுகள் மற்றும் திருமணங்கள், அவ்வப்போது தலைப்புச் செய்திகளாகி வருகின்றன. 

புதிய படங்கள் எதுவும் வெளியாகாத காலகட்டத்தில்கூட அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த செய்திகள் அவரைத் தொடர்ந்து கவனத்தில் வைத்திருக்கின்றன. அப்படி, 2015-ம் ஆண்டு தனது முதல் மனைவியும் நடனக் கலைஞருமான வாணி கணபதியுடனான விவாகரத்து குறித்து கமல் ஹாசன் தெரிவித்த கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தின

இதற்கு வாணி கணபதி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

வாணி கணபதியுடனான விவாகரத்து குறித்து கமல் ஹாசன்

2015-ம் ஆண்டு டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு அளித்த பேட்டியில், வாணி கணபதியுடனான பிரிவுக்குப் பிறகு தனது வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து கமல் ஹாசன் பேசியிருந்தார். 

தனது இரண்டாவது மனைவியும் நடிகையுமான சரிகா தாகூருக்குப் பிறந்த மகள் ஸ்ருதி ஹாசனுடன் வாடகை வீட்டில் குடியேற வேண்டிய நிலை ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார். 

மேலும், பல்வேறு ஜீவனாம்சத் தொகைகளை வழங்கியதால் தன்னிடம் இருந்த பணம் அனைத்தையும் கூறினார்.

வங்கிக் கணக்கில் பூஜ்ஜிய இருப்புடன் மீண்டும் வாழ்க்கையைத் தொடங்க வேண்டியிருந்ததாகக் குறிப்பிட்ட கமல், அப்போது தனது திரையுலக வாழ்க்கை உச்சத்தில் இருந்ததால் விரைவாக மீண்டு வர முடிந்ததாகத் தெரிவித்தார். 

“அந்தக் காலகட்டத்தில், எனது திரையுலக வாழ்க்கை தொடர்பான முடிவுகளை எடுக்கும்போது பணத்தின் மீது ஈர்ப்பு கொள்ளாமல் இருந்தது ஒரு வித்தியாசமான விஷயம்” என்று அவர் கூறினார்.


கமல் ஹாசனுக்கு 24 வயதாக இருந்தபோது, 1978-ம் ஆண்டு வாணி கணபதியைத் திருமணம் செய்துகொண்டார். இருவரும் 1988-ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். 

இருப்பினும், திருமண உறவு அதிகாரப்பூர்வமாக முடிவடைவதற்கு முன்பே கமல் ஹாசன் சரிகாவுடன் உறவில் இருந்தார். 

இந்த உறவின் மூலம் 1986-ம் ஆண்டு ஸ்ருதி ஹாசன் பிறந்தார். பின்னர், 1988-ம் ஆண்டு கமல் ஹாசனும் சரிகாவும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு 1991-ம் ஆண்டு இரண்டாவது மகள் அக்ஷரா ஹாசன் பிறந்தார். இந்தத் தம்பதி 2004-ம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக விவாகரத்து பெற்றனர்.

ஜீவனாம்சம் குறித்த கமலின் கருத்து ‘முற்றிலும் பொய்’ - வாணி கணபதி எதிர்ப்பு

ஸ்ருதி ஹாசனுடன் இணைந்து அளித்த நீண்ட நேர்காணலின் ஒரு பகுதியாகவே தனது முதல் விவாகரத்துக்குப் பிந்தைய வாழ்க்கை குறித்து கமல் பேசியிருந்தார்.

 இருப்பினும், அவரது கருத்துகள் வாணி கணபதியிடமிருந்து கடும் எதிர்வினையைப் பெற்றன. கமலின் கருத்துகளை ‘அற்பத்தனமானது, குழந்தைத்தனமானது’ என்று விமர்சித்த வாணி, அடிப்படை ஆதாரமற்ற தகவல்களை அவர் கூறியிருப்பதாக எகனாமிக் டைம்ஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

விவாகரத்துக்குப் பிறகு தன்னிடம் பணமே இல்லை என்ற கமலின் கூற்றை மறுத்த வாணி, ஒரு பெண் வசதியாக வாழும் அளவுக்கு மிகப்பெரிய ஜீவனாம்சத் தொகையை எந்த நீதிமன்றமும் வழங்க உத்தரவிடாது என்று சுட்டிக்காட்டினார். 

விவாகரத்துக்குப் பிறகு வாடகை வீட்டுக்குக் குடிபெயர வேண்டியிருந்ததாக கமல் கூறியதற்கும் அவர் எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது கமலுக்கு சொந்தமாக வீடு எதுவும் இல்லை என்றும் அவர் நினைவுகூர்ந்தார்.

திருமண வாழ்க்கை முழுவதும் இருவரும் வாடகை வீடுகளில்தான் வசித்து வந்ததாக வாணி தெரிவித்தார். கமலின் மூத்த சகோதரர் சாருஹாசன் மற்றும் அவரது குடும்பத்தினருடன் கமலின் குடும்ப வீட்டில் வசித்த காலகட்டத்தில்தான் அவர்கள் நிரந்தரமான இடத்தில் தங்கியிருந்ததாகவும் கூறினார். அப்போது கமலின் தந்தையும் உயிருடன் இருந்ததாகக் குறிப்பிட்டார்.

“நாங்கள் விவாகரத்து செய்துகொண்ட பிறகு, பிரம்மாண்டமான வீட்டில் வசித்து வந்த அவர் வாடகை வீட்டுக்குச் செல்ல வேண்டியிருந்தது என்பதைப் போலக் காட்டுவது முற்றிலும் பொய். யாருடைய அனுதாபத்தைப் பெறுவதற்காக கமல் இப்படிப் பேசினார் என்று தெரியவில்லை.

 ஒருவேளை தனது மகளின் அனுதாபத்தைப் பெறுவதற்காக, நிறைய தியாகங்களைச் செய்த தந்தையாகத் தன்னைக் காட்டிக்கொள்ள முயன்றிருக்கலாம். இது மிகவும் அற்பத்தனமான, குழந்தைத்தனமான செயல்” என்று வாணி தெரிவித்தார்.

‘கமல் ஹாசன் ஒருபோதும் தனது தவறை ஏற்றுக்கொள்வதில்லை’

இதைத்தொடர்ந்து, திரைப்படங்களாக இருந்தாலும் தனிப்பட்ட வாழ்க்கையாக இருந்தாலும் கமல் ஹாசன் ஒருபோதும் தனது தவறுகளுக்குப் பொறுப்பேற்றுக்கொள்வதில்லை என்று வாணி விமர்சித்தார். அப்போது கமல் கூறியதைப் போல அவர் திவாலாகியிருந்தால், அதற்கு வேறு ஏதாவது காரணம் இருந்திருக்கும் என்றும் வாணி தெரிவித்தார்.

இருப்பினும், விவாகரத்து பெற்று பல ஆண்டுகள் கடந்த பிறகும் கமலின் சகோதரர் சாருஹாசன், அவரது மனைவி மற்றும் அவர்களது பிள்ளைகளான சுஹாசினி, நந்தினி, சுபாஷினி ஆகியோருடன் தனக்கு அன்பான உறவு நீடிப்பதாக வாணி கணபதி குறிப்பிட்டார்.

சரிகாவுடனான விவாகரத்துக்குப் பிறகு, கமல் ஹாசன் நடிகை கவுதமியுடன் 13 ஆண்டுகள் திருமணம் செய்துகொள்ளாமல் இணைந்து வாழ்ந்தார். இந்த உறவும் 2016-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!